Thursday 27 March 2014

ஏப்ரல் 1 முட்டாள்களுக்கா!?







அதிகப்படியான தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.!



Thursday 20 March 2014

இனவெறிக்கு எதிரான மார்க்கம் இஸ்லாம்!


பணிகள் பனிபோல் இருக்கிறது!சுமைகள், தோள்மீது இருந்தால், மற்றொரு தோளில் மாற்றி வைக்கலாம்; தலைமீது இருந்தால் என்ன செய்ய முடியும்!?  செய்திகள் நிரம்ப கைவசம் இருந்தாலும் டைப் செய்வதற்கான நேரம் என்வசப்படாததால் கிடைத்த செய்திகளை பிறர் வசப்படுத்தும் முயற்சியில் காப்பி அடிக்கிறேன்.  காலம் (நேரம்) களம் அமைத்து தர துஆ செய்யுங்கள்! 

     


                                                                      

Thursday 6 March 2014

பெண்ணியம் காக்கும் இஸ்லாம்



உலக மகளிர் தினத்தை [8-3-14] முன்னிட்டு இஸ்லாத்தில் பெண்ணியம் குறிந்து நாம் அறிந்து கொள்வோம்.வாருங்கள்..... 

உலகில் இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சிக்கக் கூடியவர்களால், இஸ்லாமிய பெண்களைப் பற்றி அவர்களுக்கு இஸ்லாம் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை அடக்கி வைத்துள்ளது என்றும் பரவலாக பேசப்படுகிறது.இது அப்பட்டமான பொய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



அல்லாஹ் அருளிய அற்புத வேதமாம் அல்குர்ஆன் ஷரீஃபும்,அண்ணல் நபி [ஸல்அவர்களின் மணிமொழிகளும் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ளது.

பெண்களுக்கென்று கடமைகள் இருப்பது போல் அவர்களுக்கென உரிமைகளும் உண்டு [2: 228]என்பதை திருமறை நிலை நாட்டியுள்ளது. வாழும் உரிமையில் பெண்கள் ஆண்களுக்கு நிகர் என்று கண்மனி நாயகம் [ஸல்அவர்களும் பெண்களுக்கு கரிசனம் காட்டியுள்ளார்கள்.

இந்த திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியின் கனத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.பெண்களின் நிலை பற்றி உலகம் கொண்டிருந்த கருத்து என்ன? என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப காலமாகவே இந்த உலகம் பெண்களை அவர்களும் மனிதர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த பிறகு கி.பி. 586 -ல் ஃபிரான்ஸில் பெண்களின் அந்தஸ்து பற்றி தீர்மானிக்க கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதிகமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் பெண்ணும் மனித இனம் தான். ஆனால் ஆண்களுக்கு உழியம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்ற  தீர்மானத்திற்கு வந்தார்கள்.
  • இதற்கு முன்னதாக ரோமானியர்கள், பெண்களை ஒரு அசுத்த பிராணி என்றனர்.


  • சீனர்கள், பெண்களுக்கு ஆன்மா இல்லை என்றனர். 
  • கணவன் மனைவியை கொன்றால் குற்றமில்லை.
  • பொதுவாக தந்தைக்கு தன் மகளை கொல்லக்கூடிய உரிமை இருந்தது, 
  • அரபு நாட்டில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பயங்கரம் நடைமுறையில் இருந்தது.  இது தந்தையின் கௌரவமாக கருதப்பட்டது.
  • இதல்லாமல் ஒரு கணவர் இறந்து விட்டால், அவரது உடமைகளை வாரிசுகளுக்கு பங்கிடும் போது அவர் விட்டுச் சென்ற சொத்துப் பட்டியலில் அவருடைய மனைவிமார்களும் இடம்பெற்றிருப்பர். இந்த வகையில்,அந்த அபலைகள் கூறு போட்டு கபளிகரம் செய்யப்படுவர்.
  • இன்னும் சிலர்,பெண்ணை யார் கொலை செய்தாலும் அது குற்றச்செயல் அல்ல என்றனர்.
  • இந்தியாவில் கணவர் இறந்த விட்டால், அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன் கட்டை ஏற்றி தீயினால் பொசுக்கும் பொல்லாத பாவம் புனிதமாக கருதப்பட்டது.


இந்தப் பின்னனியில் தான் இஸ்லாம் பெண்களுக்கு மனித அந்தஸ்து மட்டுமல்ல, அவர்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்று சமத்துவம் பேசி, அவர்களுக்குத் தேவையான வாழ்வியல் உரிமைகள் அனைத்தையும் வழங்கியது. அரசியல்,குடும்பவியல்,மாத்திரமல்ல ஆன்மீகத்திலும் கூட அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் இஸ்லாத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இந்துப்பெண் வேதத்தை ஓதுவது ஒருபுறம் இருக்கட்டும் அதைக் கேட்கக்கூட கூடாது.இஸ்லாத்தில் வேதத்தை - குர்ஆனை ஓதக்கேட்கலாம்,ஓதலாம் என்பதல்ல,அவசியம் ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புத்தர் பெண்களுக்கு தீட்சை கொடுக்கத் தயங்கினார்.கொடுக்கவும் இல்லை.ஆனால்,அல்குர்ஆனில் அல்லாஹ்,நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு தீட்சை வழங்கும்படி நபிக்கு உத்தரவிடுகிறான்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
நபியேஇறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் பைஅத் – தீட்சைப் பிரமானம் - செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லையென்றும்,திருடுவதில்லை யென்றும்,விபச்சாரம் செய்வதில்லையென்றும்,குழந்தைகளை கொல்வதில்லையென்றும், தங்களுடைய கை,கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டுவதில்லையென்றும்,எந்த ஒரு நல்ல காரியத்திலும் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் வாக்குறுதி அளித்தால் அப்போது அவர்களிடமிருந்து அந்த பைஅத்தை – தீட்சைப் பிரமானத்தை - ஏற்றுக் கொள்ளுங்கள்.மேலும் அவர்களுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கிறான். [அல்குர்ஆன்:60 ;12]

கிருஸ்தவ மதத்தில் பெண்கள் மத குருமார்களாக முடியாது.ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் ராபியத்துல் பஸரிய்யா,நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா போன்ற பெண் ஞானிகள் ஹஸன் பஸரி,இமாம் ஷாஃபி போன்ற ஞான மேதைகளுக்கு பல ஞான உபதேசங்களை வழங்கி வழிகாட்டி யிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா [ரலிஅவர்கள் நபித்தோழர்களுக்கு மார்க்க ஞானத்தை வழங்கும் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்அவர்களும் இந்த ஹுமைரா [சின்ன சிகப்பியான ஆயிஷாவிடம் மார்க்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி ஞானத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதின் மூலம் அன்னை அவர்களுக்கு ஸனதை [கல்விச் சான்றிதலையும்  வழங்கியிருக்கிறார்கள்.

உம்மு வரகா என்ற பெண்மனியை அவர்களின் வீட்டிலுள்ளவர்களுக்கு இமாமாக [தொழுகையை முன்னின்று நடத்தக் கூடியவராக] நியமித் திருந்தார்கள். இறைத்தூதர், அன்னை அவர்களை, அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.அன்னை அவர்களுக்காக வயதான முதியவர் ஒருவரை தொழுகையின் நேரத்தை அறிவிக்கக்கூடிய முஅத்தினாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்னை திருக்குர்ஆனை ஓதி மனப்பாடம் செய்து திறம்பட ஓதக்கூடிய அந்த காலத்து பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள்.

பிரபலமான இறைஞானி முஹ்யித்தீன் இப்னு அரபி [ரலி] அவர்களின் வரலாற்றைப் படித்தால்,அவர்களுக்கு ஞானம் போதித்த பல குருமார் களின் பட்டியலில் பல பெண்மனிகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

மகாவீர், பெண்கள் ஞானம் பெற முடியாது என்றார். சமண மதத்தில் பெண்கள் சொர்க்கம் செல்ல முடியாது. நல்வினை செய்து அடுத்தப் பிறப்பில் ஆணாகப் பிறக்க வேண்டும். அப்போது தான் ஞானம் பெறவோ, சொர்க்கம் செல்லவோ முடியும் .

ஆனால் இஸ்லாத்தில் ஆண்களைப்போல பெண்களும் இறை ஞானம் பெற முடியும்,பெற்றிருக்கிறார்கள்.ஆண்களைப் போல பெண்களும் சொர்க்கம் செல்வார்கள்.
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்,பெண்கள்,இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள்,பெண்கள்,கீழ்படியக்கூடிய ஆண்கள்,பெண்கள், பொறுமையுள்ள ஆண்கள்,பெண்கள்,தானதர்மம் புரியும் ஆண்கள், பெண்கள்,நோன்பு நோற்கும் ஆண்கள்,பெண்கள்,தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாக்கும் ஆண்கள்,பெண்கள்,அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறும் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும்,மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். [அல்குர்ஆன் :33 ;35]

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى
உங்களில் ஆண்,பெண் யாருடைய நற்செயலையும் வீணாக்க மாட்டேன் என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு பதில் கூறினான்.[அல்குர்ஆன் :;195]

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான். [அல்குர்ஆன் :;72]

பெண்களை மற்ற மதத்தவர்கள் ஆன்மீகத்தில் தள்ளி வைத்தனர். அவர்கள் ஆன்மீகத்திற்கு ஆகாதவர்கள்.மட்டமல்ல,அவர்களோடு இருந்தால் நம்மையும் ஆகாதவர்களாக, அவர்களோடு சேர்ந்தால் நம்மையும் சேராதவர்களாக ஆக்கி விடுவார்கள்.ஆகவே இறைவனை நெருங்கி, அவனை அடைய இவ்வுலகையும் குறிப்பாக பெண்களையும் துறக்க வேண்டும்,பிரம்ம ஞானம் பெற்று பரம்பொருளைப் பருக பிரம்மச்சாரியமே பிரதானமான வழி என்றெல்லாம் பெண்களை பகைத்துக் கொண்ட மதங்களுக்கு மத்தியில், இஸ்லாம் இந்த விஷயத்திலும் அவர்களை அரவணைத்தது.பெண்களால் அல்லாஹ்வை அடையவும்,ஆண்களை அடைய வைக்கவும் முடியும். மெஞ்ஞானம் பெற சன்னியாசம் அல்ல.சம்சாரமே அதற்கான சிறந்த வழி என்ற புறட்சிகரமான சிந்தனையை இஸ்லாம் இந்த மண்ணிற்குச் சொன்னது.
من أَرَادَ أَنْ يَلْقَى اللَّهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجْ الْحَرَائِرَ

எவர் பரிசுத்தமான,பரிசுத்தமாக்கப்பட்ட நிலையில் அல்லாஹ்வை தரிசிக்க நாடுவாரோ அவர் [பத்தினிகளான] சுதந்திர புருஷிகளை கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்றார்கள் ஏந்தல் நபி [ஸல்]அவர்கள்.

“நான் ஆயிஷாவின் (ரலி) படுக்கை விரிப்பில் உடன் இருக்கையில் எனக்கு வஹி - வேத வெளிப்பாடு வந்திருக்கிறது என்ற நபிகளாரின் அறிவிப்பு அர்த்தமுள்ளதும், அழகானதும், ஆழமானதுமாகும்

மத விவகாரத்தில் பெண்களை ஒதுக்கி வைத்த பிற்போக்கு வாதிகளுக்கு இது பலத்த அடியாகும். பெண்கள் தீண்டத்தகாதவர் களல்ல. அவர்களிடத்தில் தேன் மட்டுமல்ல, தீனும் இருக்கிறது. இறைத்தொடர்பு, தியான கூடத்தில் மட்டுமல்ல, படுக்கை அறையிலும், காட்டில் மட்டுமல்ல, வீட்டிலும், மனைவியை விட்டு தள்ளி இருக்கும் போது மட்டுமல்ல, அவளுடன் சேர்ந்திருக்கும் போதும் கூட உண்டாகும் என்ற உன்னதமான நடுநிலை மார்க்கத்தை கண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்து, சேர்ந்திருக்கும் போதுதான் அல்லாஹ்வின் தூதர், “மேலான நண்பனே.... அல்லாஹ்வே உன்னோடு எனக்கூறி இறைவனடி சேர்ந்தார்கள். [முஅத்தா மாலிக்]
மெஞ்ஞான உலகில் இது ஓரு வினோதமான பயணம். அருமையான ஆன்மீக அனுபவம். இதை நடு நிலை பேணும் போது தான் உணர முடியும்.பெண்கள் தான் நாம் இவ்வுலகிற்கு வருவதற்கான வாசலாக இருந்தார்கள்.அதே பெண்கள் தான் அல்லாஹ்வை அடைவதற்கும், ஆன்மீகத்தில் நுழைவதற்கும் வாசலாக இருக்கிறார்கள் என்பதைத் தான் மெஞ்ஞானத் தூதரின் இறுதிப்பயணம் நமக்கு சொல்லும் செய்தியாகும்.

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சமத்துவத்துவத்தையும், மகத்துவத்தையும்  வழங்கிய இஸ்லாம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை,வாரிசுரிமை, கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமை,மறுமணம் புரியும் உரிமை,கல்வி கற்கும் உரிமை, சம்பாத்தியம் செய்யும்  உரிமை,மஹர் பெரும் உரிமை, இப்படி வாழ்வியலின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்கியது.
எல்லா வற்றுக்கும் மேலாக மேற்படி உரிமைகளைப் பெறுவதற்காக முறையாக வெளியே செல்லும் உரிமையையும் வழங்கியது.

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் தேவைகள் அது முறையானதாக இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கு உள்ளே, வெளியே அதை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் என்றும் முட்டுக்கோட்டை போட்டதில்லை.இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும்.

இந்த வகையில், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் தான் தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றிருந்தால் அவசியமான இந்த சூழலில் முறையே வெளியே செல்ல இஸ்லாமியப் பெண்களுக்கு சுதந்திரம் உண்டு.

வீடுகளில் கழிப்பறை வசதியில்லாதவர்கள் தங்களது இயற்கை உபாதைகளுக்காக ஊருக்கு வெளியே திறந்த வெளி மைதானத்திற்குச் செல்வது நாகரீகம் மிகுந்த இந்த காலத்திலும் சில பகுதிகளில் காணப்படுகிறது.இது நபிகள் நாயகம் [ஸல்அவர்கள் காலத்திலும் இருந்திருக்கிறது.பெருமானார் [ஸல்அவர்களின் துணைவியர் உள்ளிட்ட சஹாபியத்தான பெண்மனிகள் இவ்விதம் வெளிக்கு செல்பவர்களாக இருந்துள்ளார்கள்.அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கும் புகாரி ஷரீஃபு [ஹதீஸ் எண் ;146]  ஹதீஸ் இதை உறுதி செய்கிறது.

இந்த வகையில்,அன்னை சௌதா [ரலிஅவர்கள் ஒரு நாள் இரவு இஷா சமயத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.இதை உமர் [ரலி]அவர்கள் பார்த்து விடுகிறார்கள்.தாம் பார்த்து விட்டதை அம்மையாருக் கும் தெரிவிக்கும் முகமாக சௌதா அவர்களே! நாம் தங்களை அறிந்து கொண்டோம்.[அடையாளம் கண்டு கொண்டோம்] என உரத்த குரலில் அவர்களை கூவி அழைத்துக் கூறினார்கள். அன்னை அவர்கள் நீளமான பெண்மனி.உடலை மறைக்க அவர்கள் போட்டிருக்கும் மேலாடை போக இரவின் இருட்டையும் தாண்டி, போவது யார் என்பதை பார்த்துத் தெரிந்து கொண்டேன்.என்னால் பார்க்க முடிந்த மாதிரி மற்றவர்களாலும் பார்க்க முடியும்.இப்படி மாற்றார் பார்வையில் படுகிற மாதிரி வெளிவரலாமா?இதுதான் உமர் [ரலி] அவர்களின் ஆதங்கம்.

ஹள்ரத் உமர் [ரலிஅவர்கள் மிகவும் ரோஷமுள்ளவராக இருந்தார்கள். அதனால் தனது அன்னையரை அன்னியர் யாரும் காணுவதை அவர்களால் சகிக்க முடியாது போனதில் ஆச்சரியமேதுமில்லை. அன்னை சௌதா [ரலி] அவர்கள் இப்படி வெளியே போனதையும் அதை உமர் [ரலி]பார்த்து விட்டதையும் அதனால் தனக்கு ஏற்பட்ட சங்கோஜத் தையும், சங்கடத்தையும் அண்ணலார் [ஸல்]  அவர்களிடம் கூறுவார் கள்.[அப்படிக் கூற வேண்டும்]

அவ்வாறு கூறும்போது, அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் எல்லோரையும் விட மானமுள்ளவர்கள்.ஆதலால் தனது மனைவிமார் பிற ஆடவர் கண்ணில் படுவதை நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள். இப்படி ரசூலின் ரோஷம் பொத்துக்கொண்டு வருகிற போது அர்ஷிலிருந்து அல்லாஹ்வின் ரோஷம் வெடித்துச் சிதறும். அப்போது ஆடவர் கண்ணில் பெண்டிர் படுவதை தவிர்க்க இனிமேல் மாதர், புறம் செல்லக் கூடாது என தடையுத்தரவு வரும் என எதிர்பார்த்தார்கள். இதுதான் உமர் [ரலிஅவர்கள், சௌதா [ரலி] அவர்களை வீதியில் வைத்து அழைத்ததற்குக் காரணமாகும்.

முன்பும் ஒரு முறை இவ்வாறு நபி [ஸல்] அவர்களிடம் தங்களது விருப்பத்தை இப்படி வெளியிட்டார்கள் ; அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களிடம் நல்லவர்களும்,அல்லாதவர்களும் வருகிறார்கள். விசுவாசிகளின் தாய்மார்களுக்கு பர்தா போடும்படி தாங்கள் உத்தரவிட்டால் நல்லா இருக்குமே என்றார்கள். அல்லாஹ்வும் அதை ஆமோதிக்கும் வகையில் ஹிஜாபுடைய வசனத்தை இறக்கினான்.

[நபியுடைய மனைவிகளாகிய] அவர்களிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்கும் படி நேரிட்டால் நீங்கள் திரைக்கு அப்பாலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள்  [அல்குர்ஆன் : 33;53]

இதுகாறும் பெண்கள் அன்னிய ஆடவர் முன்பு திரையில்லாமல் தோன்றுவார்கள். நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். இவ்வசனம் இறங்கியதிலிருந்து இதற்கு தடை விதிக்கப் பட்டது. இனிமேல் மகளிர் யாரும்  அடுத்த ஆண்களிடம் பேசினாலும் வெளியே சென்றாலும் பர்தா அவசியம் என கடமையாக்கப்பட்டது. இந்த வகையில், உமர் [ரலிஅவர்களின் விருப்பம் நிறைவேறியது.  

உடலை மறைக்கும் பர்தா சட்டம் வர வேண்டும் என விரும்பி அது வந்ததைப் போல, அவனியோர் கண்ணில் படுவதைத் தடுக்க வகை செய்யும் ஆளையே மறைக்கும் – வெளி வருவதை தடை செய்யும் சட்டமும் வர வேண்டும் என்று விரும்பினார்கள்.இதை முதலில் நபியிடம் சொல்லிப் பார்த்தார்கள். உங்களது மனைவியரை வெளியே வருவதை தடுங்கள் என்று. ஆயினும் நபி [ஸல்]  அவர்கள் தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்வதில்லை.இறை பதிலைப் பார்த்து எதையும் செய்வார்கள், சொல்வார்கள். இப்போதும் அவ்வாறே வஹியை [இறைச்செய்தியை]எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில், இப்படி இருந்தால் காரியம் ஒன்றும் நடக்காது. எனவே செயலில் இறங்கினால் தான் சங்கதி சரியாகும் என உமர் [ரலிஅவர்கள் முடிவு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், இரவில் வெளியே வந்த அன்னை சௌதா [ரலிஅவர்களை கூவி அழைத்தார்கள்.பெண்கள் வெளி வருவதை தடுக்கும் ஹிஜாபுடைய வசனம் இறங்காதா! என்ற பேராசையில் தான் இவ்விதம் செய்தார்கள்.
அப்போது , அல்லாஹ் ஹிஜாபுடைய வசனத்தை இறக்கினான்.என்ன வசனத்தை இறக்கினான்? ஏற்கனவே இறக்கியதைத் தான் திரும்பவும் இறக்கினான். என்ன பொருள்?  கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை. இது விஷயத்தில் பழைய சட்டமே நீடிக்கிறது.அதில் புதிய திருத்தம் எதுவும் வர வில்லை.

எனவே பெண்கள் வெளிவருவதை தடுக்க அல்லாஹ் அனுமதிக்க வில்லை.இந்த வகையில் உமர் [ரலிஅவர்களின் முதல் விருப்பம் நிறைவேறியது.இதன்படி உடலை மறைக்கும் பர்தாவுடைய வசனம் முன்பு இறங்கியது. ஆனால் அவர்களின் இரண்டாவது ஆசை – ஆளையே மறைக்கும் வகையில் பெண்கள் வெளி வருவதையே தடை செய்யும் பர்தா சட்டம் - நிறைவேற வில்லை.ஆகவே தான் இந்த வசனம் இரண்டாவது முறை இறங்கிய போது நபிகள் நாயகம் [ஸல்அவர்கள் பெண்களைப் பார்த்து சொன்னார்கள்;  “உங்கள் தேவைக்கு நீங்கள் வெளியே செல்ல உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது [புகாரி ;147] 

இதன் படி, சிகிச்சை பெறுவதற்கும், செய்வதற்கும்,கல்வி கற்பதற்கும், கற்பிப்பதற்கும் உபதேசம் கேட்பதற்கும்,செய்வதற்கும்,உரிமை பெறுவதற்கும்,கேட்பதற்கும்,பொருளை வாங்குவதற்கும்,விற்பதற்கும், உழைப்பதற்கும்,உழைத்துப் போடுவதற்கும் தேவை, அவசியம் ஏற்படின் ஒழுங்கான பர்தா முறையோடு பெண்கள் வெளியே சென்று வரலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை திருக்குர்ஆனின் அத்தியாயம் 2, வசனம் 240 உறுதி செய்கிறது.

ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்றவற்றைச் செய்து கொண்டார்களாயின் உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது

கணவனை இழந்த பெண் இத்தா இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேறுவதைப்பற்றி இவ்வசனம் பேசுகிறது. இதனடிப்படையில், பெண்கள் இத்தா இருக்கும் காலத்தில் கூட தேவை, அவசியம் ஏற்படின் வீட்டை விட்டு வெளியேறுவது கூடும் என்பது தெரிகிறது.

ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான ஃபத்ஹுல் முயீனில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது :- கணவனை இழந்த கைம்பெண், முடிவான தலாக், ஃபஸ்க் மூலம் கணவனைப் பிரிந்த பெண், மரணம் மற்றும் விவாகரத்து நிகழ்ந்த வீட்டில் தான் இத்தா முடியும் வரை இருக்க வேண்டும். உணவு வாங்க, நூல் விற்க, விறகு பொறுக்க ஆக இதுபோன்ற உழைப்பிற்காக பகலில் வெளியேறுவது கூடும்.இரவில் கூடாது.எனினும் வீட்டை ஒட்டிய அண்டை வீட்டுக்கு நூல் திரிக்க அல்லது பேசுவதற்கு இரவிலும் செல்லலாம்.

ஆனால் இதற்கு மூன்று நிபந்தனைகள். 
ஒன்று வெளியேறி திரும்பும் நேரம் வழக்கத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். 
இரண்டு ; பேச்சுத் துணைக்கு யாரும் இங்கு இல்லாமல் இருக்க வேண்டும். 
மூன்று ; திரும்பி வந்து தன் வீட்டில் தான் தங்க வேண்டும். [பக்கம் :290]

பொதுவாக இத்தா இருக்கும் பெண்கள் வெளியே செல்லக் கூடாது. ஆனால் அவர்களுக்கே அவசியத் தேவைக்காக வெளியே வருவதை இஸ்லாம் தடை செய்ய வில்லையென்றால்,மற்ற பெண்களை எப்படி தடை செய்யும்.

இன்னொரு ஆதார செய்தியை அன்னை ஆயிஷா [ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் :- நான் உம்ரா செய்ய இஹ்ராம் கட்டியிருந்தேன். இந்த நிலையில் எனக்கு மாதவிடாய் ஆரம்பமாகி விட்டது.அரஃபா நாள் வரை நான் சுத்தமாக வில்லை.இந்த நிலையில் நான் என்ன செய்வது? என்று நபிகள் நாயகம் [ஸல்அவர்களிடம் கேட்டேன்.அதற்கு பெருமானார்[ஸல்]அவர்கள்,உனது உம்ராவை விட்டு விட்டு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டு என்றார்கள்.அதன் படி நான் செய்தேன். ஹஜ்ஜுடைய கிரிகைகளை முடித்த பிறகு மக்காவை அடுத்துள்ள ஹிஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர்ரஹ்மானை நபி [ஸல்] என்னுடன் அனுப்பி வைத்தார்கள்.தன்யீம் என்ற இடத்திற்குச்சென்று எனக்கு விடுபட்டுப்போன உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன். [புகாரி ;1556,1561]

இந்த ஹதீஸில், அன்னை ஆயிஷா [ரலிஅவர்கள்,ஹஜ்ஜுக்காக வேண்டி அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களோடு புறப்பட்டு வந்தார்கள் என்பதும் இடையில் விடுபட்டுப் போன உம்ராவைச் செய்ய தனது சகோதரர் துணையுடன் வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். நாயகம்[ஸல்] அவர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. இந்த இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் [ஸல்அவர்களுடன் அவர்களின் துணைவிமார்களும் மதீனாவிலிருந்து மக்கா புறப்பட்டு வந்தார்கள்.ஹஜ் என்பது பெண்களுக்கு கடமை என்று வருகிறபோது, அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டும் வெளியே கிளம்பித்தானே ஆக வேண்டும்.

ஹாகிம் அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில்,அன்னை ஆயிஷா [ரலி]அவர்கள் தனது சகோதரர் அப்துர்ரஹ்மானுடைய கப்றை ஸியாரத் செய்ய வெளியே வந்ததாக வந்துள்ளது. [ஃபத்ஹுல் பாரி 3/115]

இதுபோன்ற ஆதார வெளிச்சத்தில் இஸ்லாம், பெண்களை வீட்டில் அடைத்து வைத்துள்ளது என்ற வாதம் எவ்வளவு போலித்தனமானது என அறியலாம்.பெண்கள் வெளியே வரும்போது தங்கள் உடலை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதற்காக வீட்டிலே அவர்களை அடைத்து வைக்க வேண்டும் என்பது பொருளல்ல.

இஸ்லாத்தினுடைய ஆரம்ப காலகட்டத்தில் விபச்சாரம் செய்யக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய சட்டம் இறுதியாக வருவதற்கு முன்பு ஒரு ஆயத்தை அல்லாஹ் இறக்கினான்.

وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِنْ نِسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا
தவறான காரியங்கள், மோசமான வேலைகளில் ஈடுபட்ட பெண்களின் மீது சாட்சியம் கூறப்பட்டு, அந்த தவறான காரியம் நிரூபிக்கப்பட்டால், மவ்த் [மரணம்வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு மாற்று வழியை சொல்லும் வரை தவறு செய்த அந்தப் பெண்களை வீட்டிலேயே அடைத்து வைய்யுங்கள் என அல்லாஹ் ஆயத்தை இறக்கினான்.[அல்குர்ஆன் 4 ;15]

இந்த வசனம் எதை சொல்கிறது? விபச்சாரம் செய்த பெண்களை மறு சட்டம் வருகின்ற வரை வீட்டிலே அடைத்து வைய்யுங்கள் என்று சொன்னால், விபச்சாரம் செய்யாத குற்றமிழைக்காத மற்ற சாதாரணமான பெண்களை வீட்டிலே அடைக்கத் தேவையில்லை என்பது தான் இந்த ஆயத்தினுடைய எதிர்மறையான ஒரு பொருள் என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

ஆக பெண்கள் வெளியே சென்றேயாக வேண்டும் என்ற நிலையில் அவர்கள், புறம் செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஆடம்பர உடை உடுத்தி அநாகரீகமான முறையில் தன்னை சீவி சிங்காரித்துக் கொண்டு தன் உடல் அழகை பிற ஆடவர் முன்பு காட்டும் வகையில் அறை குறை ஆடையணிந்து அன்னிய ஆண்களோடு கலக்கும் வகையில் வெளி வருவதை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்காது.

எந்தப்பெண் நறுமணம் பூசி தன் வாசனையை அவர்கள் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தாரை கடந்து செல்கிறாளோ அத்தகைய பெண் ஒழுக்கமில்லாதவள். [நஸயீ :282]

நாயகம் [ஸல்அவர்கள் கூறினார்கள் ; பெண்கள் மறைவாக இருக்க வேண்டியவர்கள். ஒரு பெண் வெளியே வந்தால் ஷைத்தான் அவளை கூர்ந்து பார்க்கிறான். [திர்மிதி,பஸ்ஸார்] 

அவளிடம் சொல்வான் ; யாரை நீ கடந்து சென்றாலும் அவர்கள் உன்னை விரும்பாமல் இருக்க மாட்டார்கள். [அந்தளவுக்கு நீ அழகி] [நூல்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா]

இந்த நபிமொழியில்,ஷைத்தான் கூர்ந்து பார்க்கிறான் என்பதன் பொருள்,  மேற்கண்டவாறு அவளை வழி கெடுப்பதற்காகப் பார்க்கிறான். அழகி என்று அவளை நினைக்க வைத்து, அழகை பிறருக்குக் காட்ட இன்னும் அலங்காரம் செய்ய வைத்து அவளை வழி பிறழச் செய்கிறான் என்பதாகும்.அல்லது பெண்களைப் பார்ப்பவன் ஷைத்தான் என்றும்  பொருள் கொள்ளலாம்.

உமர் [ரலி] அவர்கள் சொல்வார்கள் ; ஆடை குறைத்து [வாங்கிக் கொடுத்துபெண்களுக்கு உதவுங்கள்.அவளுக்கு ஆடை அதிகம் இருந்தால் அவள் தனது அலங்காரத்தை அழகுபடுத்தி வெளியே வருவதைத்தான் விரும்புவாள். [இப்னு அபீஷைபா]

பொதுவாக பெண்கள் அவசியமின்றி வெளியே வருவதை இஸ்லாம் விரும்பவில்லை.இந்த வகையில் தொழுகைக்குக் கூட அவர்கள் பள்ளி வாசலுக்கு வருவதை மார்க்கம் வலியுறுத்த வில்லை.ஏனெனில் தொழுகையை பள்ளி வாசலில் தான் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயமில்லை. இப்பூமியெங்கும் பள்ளிவாசலே – அதில் எங்கும் தொழுது கொள்ளலாம். எனினும் பள்ளியில் தொழுவது சிறப்பு. கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு அவசியம்.
ஆனால் பெண்களுக்கு பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் ஏற்றம் தரும் என ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள். வீட்டில் கூட உள் வீட்டில் தொழ வேண்டும். பெண்கள் தமது தனி வீட்டில் தொழுவது முற்றத்தில் தொழுவதை விட சிறந்தது.[வீட்டின்]  மூலையில் தொழுவது வீட்டில் தொழுவதை விட சிறந்தது என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூத் [ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.[அபூதாவூத்,மிஷ்காத் 96]

உம்மு நாயிலா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் ; அபூபர்ஸா [ரலி]அவர்கள் வந்தார்கள்.வீட்டில் அவர்களது உம்மு வலதை [அவருடைய குழந்தையின் தாயைகாண வில்லை. அவள் பள்ளி வாசலுக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.அவள் வந்ததும் அவளை சப்தம் போட்டார்கள்.[அவசியமின்றிபெண்கள் வெளியே செல்வதை அல்லாஹ் தடுத்துள்ளான்.அவர்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும். ஜனாஸா வைப்பின் தொடரக்கூடாது.மஸ்ஜிதுக்கு வரக்கூடாது.ஜும்ஆவில் கலந்து கொள்ளக்கூடாது என அல்லாஹ் ஏவியுள்ளான் என்றார்கள்.... [இப்னு அபீஹாத்தம்]

அனஸ் [ரலி]அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பெண்கள் ரசூலுல்லாஹி[ஸல்அவர்களிடம் வந்து கூறினார்கள்.ஆண்கள் இறைவழியில் அறப்போர் செய்து எங்களை விட சிறப்பை பெற்றுச் சென்று விட்டார்கள்.ஃபீஸபீல் சென்று  அறப்போர் செய்யும் போராளிகளின் சிறப்பைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். வெளியே வராமல் வீட்டில் இருந்தாலே இறை வழியில் அறப்போர் செய்யக்கூடியவர்களின் சிறப்பை பெற்றுக் கொள்வீர்கள் என்றார்கள் நபியவர்கள். [பஸ்ஸார்]

இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்யும் சிறப்பை வியர்வைக்கூட சிந்தாமல் சும்மா வீட்டில் இருந்தே பெண்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றால் மாநபி அளித்த இந்த மகளிர் மாண்பை என்னவென்பது.

அலங்கோலமாக,ஆபாசமாக பெண்கள் வெளியே வருவதை விட வீட்டில் தங்கி இருப்பதையே இஸ்லாம் பெரிதும் விரும்புகிறது.

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள்.முன்னிருந்த அறியாமைக் காலத்து பெண்கள் அலைந்து திரிந்ததைப் போல் அலைந்து திரியாதீர்கள் [அல்குர்ஆன் :33 ;33]

இப்னு சீரீன் [ரஹ்அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில், அன்னை சௌதா [ரலிஅவர்களிடம் கேட்கப்பட்டது, மற்ற சகோதரிகளைப்போல நீங்கள் ஏன் ஹஜ்,உம்ரா செய்வதில்லை? அம்மையார் சொன்னார்கள் ;[கடமையான ஒருஹஜ்,உம்ரா நான் செய்து விட்டேன்.நான் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் எனக்கு ஏவியுள்ளான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் மரணமாகும் வரை எனது வீட்டை விட்டு நான் வெளியே வர மாட்டேன் என சபதம் செய்தார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார் ; அல்லாஹ்வின் மீது ஆணையாக அம்மையார் அவர்கள் தான் செய்த சபதப்படி தனது அறையின் படியைக்கூட தாண்டி வெளியே வர வில்லை.இறுதியில் அவர்களை ஜனாஸாவாகத்தான் வெளியே கொண்டு வரப்பட்டது. [இப்னுல் முன்திர்]

இது அம்மையார் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டாயமாக்கிக் கொண்ட ஒரு விருப்பமான செயல்தானே தவிர எல்லா பெண்களின் மீதும் கடமையான ஒரு காரியம் அன்று.இதுவெல்லாம் பெண்களின் ஆரோக்கியத்திற்கான இனிய இஸ்லாத்தின் அன்பு ஆலோசனைகள், அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் உத்தமமான உபதேசங்கள்.

குடும்ப விளக்கில் ஏற்றப்பட்ட அந்த ஒளி தீபங்கள்,அணைந்து போகாமல் இருக்க, அவர்களின் ஆன்மா இன்னும் பிரகாசிக்க போடப்பட்ட பாதுகாப்பு வளையங்கள்.

ஆனால் பெண்களின் முன்னேற்றத்தைப்பற்றி சிந்திக்க கூடிய இன்றைய நவீனவாதிகள், வீதியின் வெளிச்சத்தில் விளம்பரப் பொருளாக, வாழ்க்கையினுடைய எல்லாத்துறைக்கும், எல்லா நிலைமைகளிலும் அவர்களை வெளியில் கொண்டு வந்து, அறைகுறை ஆடையோடு நடமாட, நடனமாட விட்டிருக்கிறார்கள். இதுவல்ல நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய நன்மை.

முன்னேற்றம் என்பது, அவர்களை வீதிக்குக் கொண்டு வருவதில் இல்லை. முன்னேற்றம் என்பது அவர்களுக்கு அடிப்படையான கல்வியை, அறிவை, தெளிவை, ஞானத்தை, இறையச்சத்தை, இஸ்லாமிய உணர்வை உருவாக்குவதிலும், உண்டாக்குவதிலும் தான் இருக்கிறது.

ஒரு பெண் என்பவள், அவள் எங்கே இருந்தாலும் அறிவும் தெளிவும் உள்ளவளாக இருந்தால், அவள் வெளியே வராவிட்டாலும் உள்ளே இருந்து சாதிக்க முடியும். அறிவும் தெளிவும் இல்லாதவள் வெளியே வந்தாலும் சீரழிவு தான் ஏற்படும் என்பது கடந்த கால,நிகழ்கால வரலாற்று  உண்மையாக இருக்கிறது.

சமீபத்தில் ஏற்பட்ட அரபு நாட்டினுடைய புரட்சியை சிந்தித்துப் பாருங்கள், எகிப்து நாட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு அதிபர் முபாரக் விரட்டியடிக்கப்பட்டார் அதற்கெல்லாம் என்ன காரணம்..? ஒரு அரசியல் அமைப்போ, கட்சியோ அதை செய்ததாக தெரிய வில்லை. மாறாக இன்றைய நவீன இணையதளத்தின் [FACEBOOK, SMS] வழியாக தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டு ஒரு புரட்சி உண்டாக்கப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல் 6 என்ற இணையதள குழுமம், மிகப்பெரிய இந்த புரட்சியை முன்னின்று நடத்தியது, அந்த குழுமத்தில் முக்கியமான ஒருவரைப் பற்றி சொல்லப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி எகிப்து நாட்டின் தலைநகர் மிஸ்ரிலே 10 லட்சம் பேர்களை ஒன்று கூட வைத்து அந்த புரட்சிக்கு வித்திட்டது, அந்த குழுமத்தைச் சார்ந்த 26 வயது பெண் அஸ்மா மெஹ்பூஃப் என்ற பெண்மணி தான் அந்த முக்கியமான ஒருவர்.

அவர்கள் வீதிக்கு வரவில்லை.அறையிலே இருந்து கொண்டு 10 லட்சம் பேர்களை ஒன்று திரட்டக்கூடிய காரியத்தில் பங்காற்றியிருக்கிறார்கள், பங்காற்ற முடியும் என்று சொன்னால்,அதற்குத் தேவை அறிவும், கல்வியும், தெளிவும், சமுதாயத்தின் உணர்வும் அக்கறையும் தான் என்பதை நாம் சீராக சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த கல்வியை, ஞானத்தை, தெளிவை நமது சகோதரிகளுக்குப் புகட்ட வேண்டும். அத்தோடு இறையச்சத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் ஒரு பல்கலைக் கழகத்தின் மாணவியை பேட்டி கண்டார்கள், அந்த மாணவி நவீன காலத்தினுடைய மாணவியாக இருந்தாலும், இறையச்சமுள்ளவளாக, தன் உடலை மறைத்து பர்தாவோடு காணப்பட்டாள். நேர்கானலில் ஈடுபட்டவர் கேட்டார் உஷ்னமான காலத்தில் இந்த முக்காடையும், இந்த முழு அங்கியையும் எப்படியம்மா அணிந்திருக் கிறீர்கள்? அதன் சூட்டை எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகிறது? என்று கேட்ட பொழுது, அந்த சகோதரி சொன்னாள் ;قل نار جهنماشد حرا   நரகத்தினுடைய வெப்பம் இதை விட சூடு  என்று அல்லாஹ் சொல்கிறான் [9; 81]எனக் குறிப்பிட்டாள்.

பல்கலைக் கழகத்தில் படித்தாலும் ஈமானின் உணர்வையும் இறைவனுடைய பயத்தையும் அறிவையும் அவர் பெற்றிருந்த காரணத்தால்,இப்படி ஒரு தெளிவை அவளால் கொடுக்க முடிந்தது.
பெண்களுக்கு நாம் உலக அறிவை மட்டுமல்ல மார்க்க அறிவை, தெளிவை, மார்க்க உணர்வையும் கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் எங்கே இருந்தாலும் எதையும் சாதிக்க முடியும். வெளியே வர வேண்டிய அவசியமில்லை. உள்ளே இருந்து கொண்டே மிகப்பெரிய புரட்சிகளை நடத்த முடியும்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மிகப்பெரிய இமாமாக கருதப்படு கிறார்கள். தனது 14 வயதில் வெளியூருக்கு கல்வி பயில்வதற்காக, கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வேண்டி வருகிற போது, அவர்கள் எந்த பள்ளிக் கூடத்தில் படித்திருந்தார்கள்? அவர்களின் பள்ளிப் படிப்பை படித்துக் கொடுத்தது, அவர்களது தாயும் சகோதரியும் என்று வரலாறு சொல்கிறது. அப்படியானால்,அவர்களின் தாயும்,சகோதரியும் இமாமுக்கு உயர்நிலை பள்ளிக்கூடமாக இருந்திருக்கிறார்கள்.

இமாம் தஹாவி [ரஹ்அவர்கள் பிரபலமான ஹதீஸ் தொகுப்பாளரும், ஆய்வாளரும் ஆவார்.அவர்கள் தொகுத்த நபிமொழித் தொகுப்பான தஹாவி என்ற நூல் அரபிக் கல்லூரிகளிலும்,பல்கலைக் கழகங்க ளிலும் உயர் நிலை பாடத்திட்டதில் இணைக்கப்பட்டு பயிற்று விக்கப்படுகிறது. இந்த நூலை தொகுத்தவர் இமாம் தஹாவியின் மகள் தான். இமாம் தஹாவி அவர்கள் ஹதீஸையும் அதன் விளக்கத்தையும் சொல்லிக் கொண்டே போவார்.அந்தப் பெண்மனி அதை எழுதிக் கொள்வார். இப்படித்தான் அந்த நூல் தயாரானது.

இமாம் இப்னு ஜவ்ஸி [ரஹ்அவர்கள் தங்களது ஆரம்பக் கல்வியை தங்களுடைய மாமியிடமிருந்துப் பெற்றார்கள்.

இப்னு அபீ உஸைபா [ரஹ்அவர்களின் சகோதரியும் மகளும் மருத்துவ நிபுணர்களாக விளங்கிய லேடி டாக்டர்களாகும்.

இமாம் இப்னு அஸாகிர் [ரஹ்அவர்கள் மிகப்பெரிய நபிமொழி அறிஞர்.இவருக்கு ஹதீஸ் கலை போதித்த பேராசிரியர்களின் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது. இஸ்லாம் கல்வியை ஆண்களைப்போல பெண்களுக்கும் கடமையாக்கியதால் இஸ்லாமிய பெண்மனிகள் மிகப்பெரிய கல்விமான்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

கௌதுல் அஃலம் எனப்போற்றப்படுகின்ற முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்களை ஒரு மகானாக செதுக்கிய பெருமை, அவர்களின்  தாய்க்கு  இருந்தது என்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

இதன்படி, இஸ்லாமிய சகோதரிகளுக்கு அறிவையும் தெளிவையும் நாம் கொடுத்தால் தங்களது வீட்டில் இருந்து கொண்டே தெளிவான முறையில் தங்கள் பிள்ளைகளையும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் வழி நடத்திச் செல்ல முடியும் என்பது தெரிகிறதல்லவா!

இஸ்லாமிய வரலாற்றை இன்னும் புரட்டிப் பார்த்தால் இந்தியாவின் முதல் சக்கரவர்த்திகளில் ஒருவர் ஜஹாங்கிர், அவரின் மனைவி நூர்ஜஹான். அந்த நூர்ஜஹானை மணந்து கொண்ட பிறகு அவரின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களையும், திருத்தங்களையும் வரலாறு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

அந்த முதல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி, தன் மனைவியை மேடைக்கு கொண்டு வந்ததில்லை, வீதிக்கு கொண்டு வந்ததில்லை. நூர்ஜஹான் வெளியில் வராமல் உள்ளே இருந்தாலும் கூட ரிமோட் தன் கையில் வைத்துக்கொண்டு மன்னர் ஜஹாங்கிர் மூலம் அவர் தான் நிர்வாகம் நடத்தினார்,

வரலாறு சொல்கிறது நூர்ஜஹான் வந்த பிறகு ஜஹாங்கிருடைய வாழ்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதாவது, மொடக்குடிகாரராக இருந்த அவரை பக்குவப்படுத்திய பெருமை நூர்ஜஹானையே சேரும். அதுமட்டுமல்ல ஆட்சியிலும், நிர்வாகத்திலும், அதிகாரம் எடுக்கக்கூடிய முடிவிலும், நூர்ஜஹானுடைய பங்களிப்பு, அவரின் தலையீடு அதிகமாகவே இருந்ததுநாட்டிலே மிகப்பெரிய அளவில் கல்வியும், கலையும், அறிவும் வளர்ச்சியடைந்ததில் நூர்ஜஹானுடைய பங்கீடும், தலையீடும் மிக அதிகமாக இருந்தது என வரலாறு சொல்கிறது.

புரஃபசர் மிஸ்டர் ஆர்னால்ட் “ப்ரீசிங் ஆஃப் இஸ்லாம் என்ற நூலில் இஸ்லாமிய பெண்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சொல்லும் போது, ஒரு வரலாற்றைச் சொல்கிறார். அதாவது, தாத்தாரியாக்களின் படையெடுப்பு, கி.பி 13ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சாம்ராஜ்யங்களைத் தகர்த்தது. ஆனால் எந்த தாத்தாரியாக்கள், இஸ்லாமிய சாம்ராஜ்யங் களைத் தகர்த்தார்களோ, பள்ளிவாசல்களை இடித்தார்களோ, பக்தாத் மாநகரத்தை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தார்களோ, அந்த தாத்தாரியாக்களின் சாம்ராஜ்யம் கிட்டதட்ட 40 வருடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக மாறியது. இந்த மாற்றத்தின் பின்னனியாக இருந்தவர்கள் இஸ்லாமியப் பெண்மணிகள் என்று அவர் எழுதுகிறார்.

இது எப்படி நடந்தது என்றால், அவர்கள் இஸ்லாமிய நாட்டை கைப்பற்றிய பொழுது, ஆண்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினாலும், இஸ்லாமிய பெண்களை யெல்லாம் கைதிகளாக பிடித்துச் சென்று விட்டார்கள். எல்லா அரசர்களுக்கும் எல்லா சிப்பாய்களுக்கும் இஸ்லாமியப் பெண்மணிகள் அங்கே மனைவிகளாக ஆக்கப்பட்டனர்.

ஆனால் அந்த இஸ்லாமிய பெண்மணிகள், தங்கள் ஆண்களை இழந்து விட்டாலும், ஈமானை இழக்கவில்லை, இஸ்லாத்தை இழக்க வில்லை. இஸ்லாமிய உணர்வோடு இஸ்லாத்தைப் பாதுகாக்கவேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது என்ற உணர்வோடு அவர்கள் அந்தரங்கத்தில் தங்கள் கணவன்மார்களுக்கு மெதுவாக அமைதியாக இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார்கள். அழைப்புப் பணியில் அவர்கள் ஊமையாக ஈடுபட்டார்கள்., அதனுடைய பாதிப்பு என்னவென்றால், மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் வரலாறு மாறியது.

எல்லா வரலாற்றையும் புரட்டி பார்த்தால், இந்த உண்மை தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசரின் மனைவி முஸ்லிம் பெண்ணாக இருப்பாள். அல்லது அரசரின் தாய் முஸ்லிமாக இருப்பாள், அந்த தாய் தனது பிள்ளையை இஸ்லாமிய அடிப்படையில் வளர்த்த காரணத்தால் அந்த சாம்ராஜ்யமே முஸ்லிமாக மலர்வதற்குக் காரணமாக ஆனது.

வரக்கத்தான் என்பவர் தான், இஸ்லாத்திற்கு வந்த தாத்தாரியாக்களின் முதல் அரசர், முதல் ஆட்சியாளர். இவர் இஸ்லாத்திற்கு வந்ததற்கு என்ன காரணம்? இவருடைய தாய் முஸ்லிமாக இருந்தார்கள். தன் பிள்ளையை ஒரு முஸ்லிமுடைய இலட்சணத்தில் வளர்த்தார்கள்.குழந்தைப் பருவத்தில் இஸ்லாம் ஊட்டப்பட்டது. ஆனால் மதம் என்ற பெயரில் அல்ல.ஒழுக்கம் என்ற முறையில் அவர் முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டார்.

ஒரு நாள் ஒரு முஸ்லிம் பெரியவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவர் இஸ்லாதில் இணைந்தார். ஆனால் அவர் இஸ்லாம் ஆனதற்கு இது மட்டும் காரணமல்ல.  ஏற்கனவே அவரின் தாய் ஊட்டிய அந்த ஒழுக்க பண்பாடுகளும், வளர்ப்பு முறையும் தான் பிரதான காரணம். 

வரக்கத்தான் என்ற அந்த மன்னர் இஸ்லாத்தை ஏற்ற பொழுது அவருடன் இருந்த எல்லா சிப்பாய்களும், மக்களும் இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாமிய சாம்ராஜ்யமே அங்கிருந்து தொடங்கியது என்று அறிய முடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம், அவர்களின் வீடுகளில் வந்த மனைவிமார்களும், சகோதரிகளும், தாய்மார்களும், இஸ்லாமிய புரட்சியை அமைதியான முறையில் ஏற்படுத்திக் கொடுத்தது தான் என்று அவர் எழுதுகிறார்.

ஆக, இஸ்லாமிய பெண்களுக்கு தேவையானது, அறிவும், தெளிவும், ஞானமும், இஸ்லாமிய உணர்வும் தான். அதை நாம் ஊட்டினால், அவர்கள் உள்ளே இருந்து கொண்டே மிகப்பெரிய சரித்திர புரட்சியை, மிகப்பெரிய சரித்திர மாற்றத்தை அவர்களால் உருவாக்க முடியும், இஸ்லாத்தையும் தங்களது ஒழுக்கத்தையும் பாதுகாக்க முடியும், இஸ்லாமிய வளர்ச்சிக்கு அவர்கள் காரணமாக முடியும் என்பதை இந்த வரலாற்று நிகழ்வுகளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் இரண்டு விஷயம் இங்கே மிக முக்கியமானது. இஸ்லாத்தில் ஆண்கள் ஆண்கள் தான்.பெண்கள் பெண்கள் தான். இவர்களுக்கு மத்தியில் இருக்கும் அடிப்படையான வேறுபாட்டை புறம் தள்ளிவிட முடியாது.நடை உடை பாவனைகளில் ஆண்களைப் போல பெண்களோ,பெண்களைப் போல ஆண்களோ இருப்பது சாபக்கேடானதாகும்.

இரண்டாவது,நமக்கு முன் ஒரு கேள்வி வைக்கப்பட்டால், ; பெண்களுக்கு எது அவசியம்? கல்வியா? கற்பா?, கல்வியா? ஒழுக்கமா? என்றால், கற்பொழுக்கமுள்ள கல்வி என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.ஆனால்,கல்வியால் கற்பொழுக்கத்தில் கீரல் விழும் என்றால்,அதற்குக் காரணமாக அமைகின்ற கல்வியைத் தேடுவதற்கு இஸ்லாம் சிபாரிசு செய்யாது.

எனவே அந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மற்றும் அந்த சாம்ராஜ்யத்தினுடைய சரித்திர நிகழ்ச்சியைப் பார்த்து படிப்பினை பெறுவோம்.
அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் [பேருதவிசெய்வானாக ஆமீன்.

                                 நன்றி: S.S. அஹ்மத் பாகவி