Thursday 5 June 2014

கொடுத்து வாழ்வதில் கோடி இன்பம்!


அல்லாஹ் இந்த சமூகத்தை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறான். யாருக்கு எவ்வளவு என்பதையும் முடிவு செய்து விட்டான்.
ஆனால், உலக ஆசை, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆர்வம், நிலப் பேராசை என்று மனிதனின் அபிலாஷைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அசம்பாவிதங்கள் பெருகியும், தர்மச் சிந்தனைகள் குறைந்தும் வருகின்றன.
பத்து ரூபா நோட்டை தேய்த்துப் பார்த்து விட்டு, சில்லரை இல்லையென்று, யாசகம் கேட்டவனை ஏமாற்றிவிடுகிற நிலப் பிரபுகள் இன்னும் வாழத்தானே செய்கிறர்கள்.
பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, மீதம் ஒன்பது ரூபாயை பிச்சைக் காரனிடமிருந்து எதிர்பார்க்கிற பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் பிறருக்கு உதவுவதற்காகவே, பைத்துல்மால்களும், வக்ஃபுகளும் ஏற்படுத்தப்பட்டன என்பது எவ்வளவு பெரிய தர்மச் சிந்தனை.
பைத்துல்மால்
அபூபக்கரின் காலத்தில், பைத்துல்மால் கட்டிடமிருந்தாலும், நடைமுறை படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அபூபக்கரின் மரணத்தருவாயில் பைத்துல்மாலின் சொத்து ஒரு திர்ஹம். (16.19ரூபாய்)
உமர் ரலியின் ஆட்சி காலத்தில் பஹ்ரைனின் ஆளுனராக அபூஹீரைராஹ் இருந்தார்கள். வருடத்திற்கு ஐந்து லட்சம் திர்ஹம் கொண்டு வருவார்கள். இவ்வளவையும் என்ன செய்வது என்ற ஆலோசனை செய்யப் பட்டபோது, அலி ரலியவர்கள், இருப்பில்லாமல் செலவழிக்க வேண்டும் என்றார்கள். வலீதிப்னு ஹிஷாம் என்பவர், சிரியா போன்ற பகுதிகளில் நிதித்துறை தனியாக செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன். நாமும் அப்படி செய்யலாமே என்ற யோசனையைச் சொன்னபோது, கலிஃபா அந்தக் கருத்தையே ஏற்றார்கள். பிறகுதான் பைத்துல்மால் நடைமுறைக்கு வந்தது. அப்துல்லாஹிப்னு அர்கம் ரலி “Finance minister” ஆகப் பொறுப்பேற்றார்கள். வருடத்திற்கு மூன்று கோடி திர்ஹம் இருப்பு இருந்தது. (485,700,000ரூபாய்)

ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு. அப்பாஸிய ஆட்சி காலத்தில் பாக்தாத் நகரத்தின் கஜானா இருப்பு, ஒன்னே முக்கால் கோடி தீனார். ஒரு தீனாரென்பது, 4.25 கிராம் தங்கம். இன்றைய கணக்குப்படி குவைத் தீனார் 1க்கு 211.00 ரூபாய். (3,692,500,000 ரூபாய்). அவ்வளவும் நாட்டிலுள்ள (ஏழை) மக்களின் நலம் காக்க.

பத்தாயிரம் ரூபாயை தர்மம் செய்துவிட்டு பதினய்யாயிரம் ரூபாயிற்கு போஸ்ட் அடித்து ஒட்டுகிறவர்கள் வாழும்போது, தங்கள் சொத்துக்களையே பிறருக்காக வக்ஃப் செய்த ஜீவன்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சீமான்தனம்.
வக்ஃப்
கைபரில் கிடைத்த நிலத்தை நான் என்ன செய்யட்டும் என்று உமர் ரலி, நபியிடம் கேட்டபோது, அதை நீங்களே வைத்துக் கொள்ளவும் செய்யலாம், அல்லது அதில் வரும் லாபத்தை வக்ஃபும் செய்யலாம் என்றபோது, உமர் அவர்கள் இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதுவே இஸ்லாத்தில் முதல் வக்ஃப் என்று சொல்லப்படுகிறது.
பிறகு, பல்வேறு சஹாபிகளும் தங்கள் சொத்துக்களை வக்ஃப் செய்திருக்கிறார்கள்.

அன்னை ஹப்ஃஸா (ரலி): தங்களுக்கு சொந்தமான நிலத்தை வக்ஃபு செய்து அதன் முத்தவல்லியாக அப்துல்லாஹிப்னு உமர் அவர்களை நியமனம் செய்தார்கள்.

உஸ்மான் ரலி: 35000க்கு வாங்கிய “ரூமா” கிணற்றை மக்களுக்காக வக்ஃபு செய்தார்கள்.

அலி ரலி: வருடத்திற்கு 40ஆயிரம் தீனார் வருமானம் தரக்கூடிய தரமான நிலத்தை வக்ஃபு செய்தார்கள். அதுமட்டுமல்ல, நல்ல ஊற்றுள்ள வேறொரு இடத்தை ஹீஸைன் ரலி அவர்களை பொறுப்புதாரியாக்கி அந்த நிலத்தை வக்ஃபு செய்திருந்தார்கள். பின்னொரு நாளில் முஆவியா ரலி, இரண்டு லட்சம் திர்ஹத்திற்கு அந்த இடத்தை ஹீஸைன் ரலி அவர்களிடம் கேட்டபோது, என் தந்தை நரகத்தை விட்டு பாதுகாப்புப் பெறவேண்டியும், அல்லாஹ்வை அஞ்சியும் இந்த இடத்தை வக்ஃபு செய்தார்கள். அப்படிப்பட்ட இடத்தை நான் விற்கமாட்டேன் என்றார்கள். (வக்ஃபு சொத்துக்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் பொறுப்புதாரிகளாக இருப்பவர்கள், இப்படி பதில் சொல்ல வேண்டும்.)

ஸஃது ரலி: மூன்றாம் நாள், நாற்பதாம் நாள் பாத்திஹா என்று மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் தாயின் மரணத்திற்குப் பிறகு செய்து விட்டு, கடைசியில் கணக்குப் பார்க்கிற பிள்ளைகளாக இன்றைய தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஸஃது ரலி தன் தாயிற்காக ஒரு தோட்டத்தையே வக்ஃபு செய்தார்கள்.

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரலி: முதலில் ஐநூறு ஒட்டகங்களை அல்லாஹ்வின் பாதையில் வக்ஃப் செய்தார்கள். பிறகு ஆயிரம் குதிரைகளை வக்ஃபு செய்தார்கள். பிறகு ஐம்பதாயிரம் மதிப்புள்ள நிலத்தையும், நாலு லட்சம் மதிப்புள்ள தோட்டத்தையும் வக்ஃபு செய்தார்கள்.

அனஸ், ஜீபைர்: பொதுவாகவே இருவர் இணைந்து வியாபாரம் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் மேற்சொன்ன இருவரும் தங்களுக்குப் பாத்தியப்பட்ட இடத்தை இணைந்தே வக்ஃபு செய்தார்கள்.

சட்டமேதை ஷாஃபிஈ: தங்களது தோழர்கள் ஹஜ்ஜீக்கு வந்தால் அவர்கள் இளைப்பாருவதற்காக அரஃபாவில் ஒரு இடத்தை வாங்கி வக்ஃபு செய்தார்கள்.
ஷாஃபிஈ கூறுவார்களாம், மக்கா, மதினாவில் விலைக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. காரணம், எதைக் கேட்டாலும் எதாவதொரு சஹாபியின் வக்ஃபு சொத்தாக இருக்கிறது.

அபகரிப்பு தண்டனைகள்:
வக்ஃபு வாரியத்தின் முன்னால் சேர்மேன் ஒருவர் இப்படிச் சொன்னார்: ஏறத்தாழ என்பதனாயிரம் கோடி ரூபாய் வக்ஃபுச் சொத்துக்கள் பெரும், பெரும் பணமுதலைகளிடம் மாட்டியிருக்கிறது என்றார்.

ஒருதடவை நபியவர்கள், சஹாபாக்களிடம், கியாமத் நாளில் ஒரு மனிதன் கழுத்தில் ஒட்டகத்தை தொங்கவிட்டு வருவான். அது கத்திக்கொண்டே இருக்கும். இவர்கள் உலகில் பிறரின் சொத்துக்களை அபகரித்தவர்கள். இதேபோன்று குதிரை, ஆடு இவைகளை சுமந்தும் என்னிடம் வருவார்கள். அப்போது நான், உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்களிடம் கூறிவிடுவேன். அந்த நிலையில் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை என்றார்கள்.

கொடுப்பதெற்கென்றே பிறந்த சஹாபிகள் கோமாளிகள்!? கோமாளிகளாய் வாழும் பிண்டங்கள் இன்று கொடைவள்ளல்கள்!

சஹாபிகள் படைத்தவனுக்காகப் படைப்புகளுக்குக் கொடுத்தார்கள்,
சாமான்யர்கள் படைப்புகளுக்காகப் படைப்புகளுக்குக் கொடுக்கிறார்கள்.

ரஹ்மானே! கொடுத்து வாழ்வதில் இன்பம் கண்ட சஹாபிகளின் கூட்டத்தில் எங்கள் அனைவரையும் சேர்த்தருள்வாயாக! ஆமீன்.