Wednesday 27 March 2013

விடுமுறையும் விளையாட்டும்


வாழ்க்கை மனிதனுக்கு கிடைத்த மாபெரும் முதலீடு.ஒவ்வொரு வினாடியும் விலை மதிப்பற்றது. தனது முதலீட்டின் மூலம் அபரிமிதமான லாபம் சம்பதிப்பவன்தான் அறிவாளி. இஸ்லாமும் உயர்தரமான நோக்கத்துக்காக வாழ்வதையே வலியுறுத்துகிறது. வீனானவர்றை புறக்கனிப்பவர்களையே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் என்பது இறைமறையின் வாக்கு (23:03)வீண் விளையாட்டில் காலம் கழிப்பவன் லட்சியவாதியாக இருக்க முடியாது . அதற்காக அறவே விளையாடக் கூடாது என்று சொல்லவில்லை. உடலையும் உள்ளதையும் உற்சாகப்படுத்தும் அளவுக்கு மார்க்கம் அனுமதித்த முறையில் விளையாடுவதில் தவறில்லை. ஹதீஸ்களில் காணப்படும் விளையாட்டுகள் அனைத்தும் உயர்ந்த நோக்கம் கொண்டவை. விளையாட்டும் கூட வீண் போகக் கூடாது. வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும் என்று கருதும் உயர்ந்த மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே இருக்க முடியும். 

அம்பு எறிவது, குதிரை சவாரி,மனைவியுடன் விளையாடுவது. இவை தவிர ஒரு முஸ்லிமுடைய அனைத்து விளையாட்டும் வீணானவை என நபி (ஸல் ) சொன்னார்கள்.(திர்மிதீ ) இவை மூன்றும் வெறும் விளையாட்டல்ல. அம்பு எறிவதும்,குதிரை சவாரியும் அக்காலத்தின் மிகச்சிறந்த யுத்தப்  பயிற்சி.

கடைசியாக சொன்ன விளையாட்டு மனிதஇனம் நிலைப்பதற்கும் பல்கிப் பெருகுவதற்கும் காரணமாக இருக்கிறது. நீச்சல் கற்றுக் கொள்வதையும் ஹதீஸில் சிலாகித்து கூறப் பட்டுள்ளது. அது நல்ல உடற் பயிற்சியாகவும் தற்காப்பு பயிற்சியாகவும் இருப்பதோடு தற்க்காலத்தில் சிறந்த யுத்தப் பயிர்சியாகவும் இருக்கிறது. ஓட்டப் பயிற்சியும் பயனுள்ள விளையாட்டுகளின் பட்டியலில் சேரும்.அதனால் உடல் ஆரோக்கியமாகும்: உற்சாகமடையும் என்பதில் சந்தேகமில்லை.

 நபித்தோழர்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற பல நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடிகிறது. உமர்(ரலி)அவர்களுக்கும் ஜூபைர் (ரலி)அவர்களுக்கும் இடையில் இரண்டு தடவை ஓட்டப்பந்தயம் நடந்தது.ஆளுக்கொருமுறை வெற்றிபெற்று போட்டியை சமன் செய்தார்கள்.

விளையாடலாமா? 

 சிரமப்பட்டு படித்து பரீச்சை எழுதிய பிள்ளைகளை பெற்றோர்கள் விடுமுறை காலங்களில் கொஞ்சம் சுதந்திரமாகவே விட்டுவிடுவார்கள். எனினும் மார்க்கத்தை படித்துக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது விளையாட அனுமதித்தாலும் மார்க்கம் விதித்த வரம்புக்குட்பட்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

 1. சதுரங்கம் (செஸ் ), சொக்கட்டான் ,மிருகங்களை மோதவிடுதல்,போன்ற ஷரீஅத்தில் பகிரங்கமாக தடுக்கப்பட்ட விளையாட்டாக இருக்கக் கூடாது.

 2. அனுமதிக்கப்பட்ட விளையாட்டாக இருந்தாலும் அதில் ஹராம் கலக்கக் கூடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறைக்க வேண்டிய இடங்களை முழுமையாக முறையாக மறைக்க வேண்டும். உடல் உறுப்புகளை எடுத்துக் காட்டும்படியாக ஆடை இருக்கக் கூடாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடக்கூடாது. தற்காலத்தில் கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டிலும் மலிந்து கிடக்கும் சூதாட்டம் அறவே கூடாது. மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது.

 ஒரு மனிதர் கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்,இதைக் கண்ட அப்துல்லாஹிப்னு முகFப்பல் (ரலி)அவர்கள், கல்லெறிந்து விளையாடாதீர். நபி(ஸல்)கல்லெறிவதை தடை செய்திருக்கிறார்கள்.அதன் மூலம் வேட்டையாடவும் முடியாது,விரோதியைதாக்கவும் முடியாது.எனினும் இந்தக் கல் யாருடைய பல்லையும் உடைத்துவிடும்,கண்ணை பிடுங்கி விடும் என்று கூறினார்கள். (புகாரி ) 

 3.விளையாட்டின் மூலம் தொழுகை போன்ற கடமைகளும் குர்ஆன்,ஹதீஸ்,பிக்ஹு போன்றவற்றை படிப்பது உட்பட செய்யவேண்டிய வேலைகளும் வீணாகி விடக்கூடாது. 
உமர்(ரலி)அவர்களுடன் ஒரு குழு ஹஜ்ஜுக்கு புறப்பட்டது,போகும் வழியில் 'கவ்வாத்'என்பவரை கவி பாடுமாறு மக்கள் வேண்டினர்.அவரும் கவி பாடிக் கொண்டு வந்தார். Fபஜ்ரு நேரம் வந்தவுடன் உமர் (ரலி) அவர்கள் கவ்வாத் அவர்களே!நிறுத்துங்கள் தொழுகைக்கு நேரமாகி விட்டதுஎன்று கூறினார்கள். குறிப்பிட்ட எல்லை நிர்ணயித்து ஓடுபவர்களாகவும் ஒருவருக்கொருவர் சிரிப்பவர்களாகவும் சஹாபாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இரவு நேரம் வந்துவிட்டால் துறவிகளாக (வணங்கக் கூடியவர்களாக) ஆகிவிடுவார்கள் என்று பிலாளிப்னு ஸஅத் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்.(மிஷ்காத்)

 4. விளையாட்டு உடற்ப்பயிற்சியாக இருக்கவேண்டும்.அதனால் ஆரோக்கியம் மேம்பட வேண்டும். எதிரியை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மன அழுத்தத்தையும், சோர்வையும் நீக்குவதற்கு விளையாட்டு பயன் படவேண்டும். வெறும் டைம்பாஸுக்காக விளையாடுவதோ, பொழுதும் அதிலேயே மூழ்கிக் கிடப்பதோ கூடாது. இப்னு அப்பாஸ்( ரலி )அவர்கள் நீண்ட நேரம் குர்ஆன்,ஹதீஸ் பேசிவிட்டு பிறகு தோழர்களிடம் கொஞ்சம் ருசியை மாற்றி கொள்ளலாம்.என்று கூறி வரலாறு மற்றும் கவிதைகளை சொல்லி உற்சாகப் படுத்துவார்கள்.  
எனவே கூறப்பட்ட நிபந்தனைகளின்படி வரும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இறைவன் அருள் புரிவானாக!

Monday 25 March 2013

மௌலவிகளே! வருக! வளர்க!


என் இதயக்கனிகளே! உங்களை வரவேற்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஓங்கி உயர்ந்து வளர வேண்டுமென பேறுவகையோடு வாழ்த்தி துஆ செய்கிறேன். அதற்காக நீங்கள் உழைககவும்,என்னுடன் ஒத்துழைக்கவும் வேண்டுமென விரும்புகிறேன். மலரும் நிமிடமெல்லாம் நீங்கள் வளரும் ஆய்வாளர்களாக ஆக வேண்டும். கல்வியும், ஞானமும் தேடாமல் வருவதுமில்லை. அல்லாஹ் கேட்காமல் கொடுப்பதுமில்லை. கேட்டதின் அளவு கிடைக்கும். விரும்பாதவர்களை விட்டு விலகிச் சென்று விடும். மூளையின் மூலை மழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'சுயம்' என்பதே அதன் சாணை. ஆம், சுயமாகத் தேடுதல்- சுய அறிவு-சுய சிந்தனை-சுய மரியாதை இப்படி அனந்தமனந்தம் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களால் உயரவும் முடியும். இறுதி மூச்சு வரை இறைவன் உதவியோடு சொந்தக் கால்களில் மானம் மரியாதையோடு உறுதியாக நிற்கவும் முடியும். உண்மைக் கல்வி இந்த உரத்தைக் கொடுக்கும். ஏனெனில், அது உண்னமயான அல்லாஹ்விடமிருந்து வருகிறது. அனைத்துக் கல்வியையும் அல்லாஹ்வோடு, அவனது கலாமோடு, அவனது ரசூலோடு சம்பத்தப் படுத்துங்கள். நீங்கள் ஈருலக சாதனையாளராவீர்கள். சமுதாயம் தேடுங்கள்; ஆதாயம் தேடாதீர்கள். இறைப் பொருத்தம் தேடுங்கள்; இந்த உலகம் தேடாதீர்கள். மேல் கையாக இருக்க முயலுங்கள்; கீழ்க் கையாகாதீர்கள். அறிவைக் கொடுங்கள்; அறியாமையை அகற்றுங்கள். மக்கள் மனதில் குடியிருங்கள்; அவர்கள் பணத்தில் மனதை பறிகொடுத்து விடாதீர்கள். இவை அனைத்திலும் மூலதனம் கல்வியே. கல்விக்கு முன்னால் பணியாத பணமுமில்லை- மனமுமில்லை. 'சுயம்' என்பதை தாரக மந்திரமாக்கி இரவு-பகல் இதிலேயே லயித்து விடுங்கள். தெருவில் அலைபவைகள் அலையட்டும். உங்கள் மனதை அதனோடு தொலைத்து விடாதீர்கள். மனதைக் கல்விக் கயிற்றால் அமலின் அடிமரத்தில் கட்டிப் போடுங்கள். பிறகு நீங்கள் வந்நவர்கள் மட்டுமல்ல- வளர்ந்தவர்களாகி விடுவீர்கள்! எனவேதான் உங்களுக்கு யூஸூபிய்யாவின் குரலில் அழைப்புக் கொடுக்கிறேன்! மௌலவிகளே! வருக! வளர்க! அல்லாமா,அ.க. கீரனூரி(ரஹ்) த ங்களது மாணவச் செல்வங்களுக்கு போதித்தது

Saturday 23 March 2013

இறையருள் வேண்டி .............


மாட்சிமை தங்கிய உலமா பெருமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்) வெள்ளிமேடை ஜாம்பவான்களுக்கு மத்தியில் சொல் யுத்த களத்தில் அடியேன் ஆரம்பித்திருக்கும் இந்த போர்களப் பூக்கள் ஒருவகையில் பேராசைதான். என்றாலும் முட்டையுடைத்து வெளி வரும் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி உரமேற்றும் தாய் பறவை போல நான் சிறகடித்துப் பறக்கும் வரை என்னை ஊக்கப் படுத்தும் உலமாக்களின் துஆவையும் பேராதரவையும் என்றும் எதிர்பார்க்கிறேன்! இங்கு விமர்சனங்கள் மட்டும் வரவேற்கப் படுகின்றன!

Friday 22 March 2013

யூசுபிய்யா அரபிக்கல்லூரி ஒரு அழகிய அறிமுகம்




இறைவா ! நீ கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது;
                   நீ தடுக்க நினைப்பதை யாரும் கொடுக்க முடியாது