Thursday 2 April 2015

ஈட்டிமுனை என்றாலும், ஈமானுக்காக ஷஹீதாகுவோம்!

  

இந்த உலகம் ஒரு மாயை, பிம்பம். இங்கு எதுவும் நிரந்தரமில்லை.
தூக்கம், துக்கம், எதுவும் நிரந்தரமில்லை.
வாலிபம், வயோதிகம் எதுவும் நிரந்தரமில்லை.
இன்பம், இவ்வுலக வாழ்க்கை எதுவும் நிரந்தரமில்லை.
மறுமையில் எல்லாம் நிரந்தரம். எதுவும் பொய்யில்லை.
ஆரோக்கியம் நிரந்தரம்; நோய் எப்போதும் இல்லை.
வாலிபம் நிரந்தரம்; வயோதிகம் எப்போதும் இல்லை.
இன்பம் நிரந்தரம்; துன்பம் எப்போதும் இல்லை.
வாழ்க்கை மட்டும்தான்; மரணம் இல்லவேயில்லை.

ஆம்! اخرت நிரந்தரம்; துன்யா நம்மை மறந்திடும். இந்த சிந்தனை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும், அதற்கு பலமான ஈமான் வேண்டும்.
பலமான  ஈமான், நாயகத் தோழர்களை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது.

1. அடுத்தவனின் ஒட்டகம், தன்வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக மனிதனின் ரத்தம் குடிப்பதை, மரபாக்கி வைத்திருந்த மக்களை ஈமானிய உணர்வு, இப்படி மாற்றியமைத்தது,
யர்மூக் யுத்தத்தில், தனக்கு கொண்டுவந்த தண்ணீரைக் கூட, எனக்கு வேண்டாம், என் தோழருக்கு கொடுங்கள் என்றார்கள்

2. மஸ்ஜிதுன் நபவியில் கைதிகள் கட்டப்பட்டிருப்பார்கள். வீட்டிலிருந்து ரொட்டி கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுத்து விட்டு வெறும் பேரித்தம்பழங்களை சஹாபிகள் சாப்பிடுவார்கள்.

இந்த ஈமானிய உறுதி, ஒருபோதும் சஹாபிகளுக்கு இந்த உலகத்தின் மீதான ஆசையை ஏற்படுத்தவில்லை. எவ்வளவோ சிரமங்களை சகித்தபோதும் நபியும், தோழர்களும் இந்த உலகம் வேண்டுமென்று இறைவனிடம் எப்போதும் கேட்டதில்லை.

1.مصعب بن عمير   பெரும் பணக்கார சஹாபி, இஸ்லாமானதற்குப் பிறகு உடுத்த துணியில்லாத நிலை. அவரின் மரணத்தில் நபி, அழுதே விட்டார்கள். வாழும் காலத்தில் அவருக்கு வளம் வேண்டுமென்று அவரும் நபியிடம் கேட்டதில்லை. என் தோழர்களுக்கு உலகச் செல்வங்கள் வேண்டுமென்று நபியும் இறைவனிடம் கேட்டதில்லை.

2. தொழுகையில் நிற்கும் சஹாபிகள், பசியால் கீழே விழுந்துவிடுவார்கள், அந்த நேரத்தில் கூட நபி உணவுக்காக அல்லாஹ்விடம் கேட்டதில்லை.


3.  நபியின் சபையில், ஏறத்தாழ எழுபது சஹாபிகள், உடுத்துவதற்கு சரியான துணியில்லாமல் தங்கள் மறைவிடங்களை மறைப்பதற்கு ஒருவர் பின் ஒருவராக நெருக்கமாக அமைந்திருப்பார்கள். இந்த நேரத்திலும் அல்லாஹ்விடம் உலகம் வேண்டி நபி கையேந்தவில்லை.

4. பத்துக்கு எட்டு சதுரஅடி வீட்டில் வாழ்ந்த நபி, விசாலமான வீடு வேண்டுமென்று கூட விரும்பியதில்லை. ஏனென்றால், அழிந்துபோகும் அறுபது, எழுபது வருட வாழ்கைக்காக ஏன் துஆவை வீணாக்க வேண்டும். அழியா மறுஉலக வாழ்க்கைக்கு கேட்கலாமே. என்று நபி இருந்துவிட்டார்கள்.

5.عدي بن حاتم  என்பவர், கிருஸ்துவ மதத்தில் இருந்தார். அவருக்கு நபியவர்கள், இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச்சொன்னாரகள். எல்லாவற்றையும் நன்கு கேட்டாலும் சஹாபிகளின் ஏழ்மைக் கோலத்தைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், நாமும் இப்படி ஆகிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தவே, நபி கூறினார்கள், தோழரே! இந்த ஏழ்மைக் கோலம் என் தோழர்களுக்கு நிரந்தரமில்லை. ஒரு காலம் வரும். அப்போது கீழ்காணும் மூன்று நிகழ்வுகள் ஏற்படும்.
1.       கிஸ்ராவின் கிரீடம் முஸ்லிம்களின் காலுக்கடியில் வரும்.
2.       எமன் தேசத்திலிருந்து ஒரு பெண், தனியே மக்கா வந்து பாதுகாப்பாக ஹஜ் செய்துவிட்டு போவாள்.   
3.       ஜகாத் பொருட்களை வாங்கும் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.

கிஸ்ரா வெற்றிகொள்ளப்பட்டு, அவர்களின் விலையுயர்ந்த போர்வை ஒன்று கொண்டுவரப்பட்டது, அந்தப் போர்வையை பத்திரப்படுத்தலாம் என்று கருத்துச்சொல்லபட்டது. அவர்களின் இந்த போர்வையால் நமக்கு வேதனைதான் இறங்கும். எனவே இதை துண்டுதுண்டாக வெட்டி எல்லோருக்கும் கொடுக்கலாம். என்ற அலி (ரலி) ன் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரித்தும் கொடுக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஒன்றரைரை அடி போர்வைத்துண்டை ஒருவர் இரண்டாயிரம் திர்ஹத்திற்கு விற்றார்.

உமரின் காலத்தில் ஒருபெண் தனியே ஹஜ் செய்து திரும்பினாள். அவளிடம் வழியில் எவ்வித அசம்பாவிதமும் நடக்க வில்லையா! என்றபோது, வழிநெடுகிலும் நான் கண்ட ஆண்கள் அனைவரும்  என் உடன்பிறந்த சகோதரர்கள் போன்றும் எனது தந்தை போன்றும் நடந்து கொண்டார்கள். என்னிடம் யாரும் தவறாக நடக்கவில்லை என்றாள்.

பிறகு இஸ்லாத்திற்கு வந்த عدي بن حاتم அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் கூறிய இரண்டு நிகழ்வையும் நான் பார்த்து விட்டேன்.  மூன்றாவதும் நிகழும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார்கள்.

நபியவர்கள் தான் உலகை, உலகச்செல்வங்க்களை அல்லஹ்விடம் கேட்கவில்லை என்றால் அவர்தம் தோழர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
6.  ஒருசமயம் அன்சாரிகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, மழைவேண்டி நபியிடம் செல்லலாம் என்று நபியிடம் வந்தபோது நபியவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு அன்சாரிகளை வரவேற்று, இன்று நான் நல்ல சந்தோஷத்தில் இருக்கிறேன். இன்று நான் எதைக் கேட்டாலும் எனக்கு அல்லாஹ் தருவான். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். நான் தருவேன் என்றார்கள். வந்த அன்சாரிகளோ, இந்த நேரத்தில் தண்ணீர் வேண்டுமென்று உலகாதாயத்தைக்  கேட்பதைவிட பாவமன்னிப்பு வேண்டுமென்று கேட்கலாம். என்று முடிவெடுத்து சொன்னபோது காருண்ய நபி உதித்த வார்த்தைகள் இவை.
اللهم إغفر للأنصار ولابناء الأنصارو لابناءأبناء الأنصار ............    என்ற துஆவை ஓதினார்கள்.

மறுமையின் வாழ்வை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த நாயகத்தோழர்கள், கணவன், மனைவியை, பெற்றவர்கள், பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றவர்களை, சகோதரன், சகோதரனை மறுமைக்காக இழக்க தயாரானார்கள், ஆம்! அழியும் உலகில் எல்லாம் மாயை! அழியாத உலகில் ஒன்று சேர்ந்து வாழ்வோம் நாளை. என்ற சிந்தனையோடு வாழ்ந்தார்கள்.

கணவன், மனைவியை:
பேரித்தம்பழத்தை தூக்கி எரிந்து விட்டு போருக்குச்சென்ற புது மாப்பிள்ளை.

பெற்றவர்கள், பிள்ளைகளை:
நூறு வயதை தாண்டிய அஸ்மா (ரலி) தன்மகன் அப்துல்லாஹிப்னு ஜுபைரை போருக்கு அனுப்பும்போது சொன்ன வார்த்தைகள், 
عش كريما، و مت كريما، ولا يأخذ ك القوم أسيرأ    நீயும் நானும் சொர்கத்தில் சந்திப்போம், போய் வா மகனே! ன்று வழியனுப்பிய வீரத்தாயின் வரலாறு என்றும் மறையாது.

சகோதரன், சகோதரனை:
உமரிப்னு கத்தாபும் ஜைதிப்னு கத்தாபும் சகோதரர்கள். யுத்தம் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. கவசம் ஒன்றுதான் இருந்தது, உமர் அவர்கள் தன் சகோதரரிடம் கவசத்தை நீ அணிந்துகொள்! நான் ஷஹீதாகிறேன் என்றார்கள். ஜைதும் அதே வார்த்தையை உமரைப் பார்த்து கூறினார்.
  
பிள்ளைகள் பெற்றவர்களை:
أبو بشير  என்றொரு சஹாபி, போருக்குச்செல்ல நபியிடம் அனுமதி கேட்டு நின்றபோது, அபூ பஷீரே! உங்களுக்கு عقربة என்றொரு மகன் இருக்கிறான். அவனுக்கு தாயும் இல்லை. அதுவும் சிறுபிராயத்தில் இருக்கிறான். நீங்கள் போருக்குப் போய்விட்டால் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாழாகிவிடும். எனவே! நீங்கள் பிள்ளையை பாருங்கள். என்றார்கள்.
இல்லை நாயகமே! என் பிள்ளை மதினாவின் சிறார்களோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிடுவான். அப்படியே வளர்ந்தும் விடுவான். ஜிஹாதின் சந்தர்பம் என்பது இன்னொருமுறை எனக்கு கிடைக்காது. என்று கூறி நபியிடம் ஆனுமதியும் பெற்று யுத்தம் சென்றுவிட்டார்.

யுத்தம் முடிந்து திரும்புகையில் அவரவர் பிள்ளைகள் தங்களது உறவுகளைத் தேடிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். தனியே ஒரு சிறுவன், நபியவர்களின் கரம் பற்றி, நாயகமே! எல்லோரும் தத்தமது உறவுகளோடு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே தாயில்லாதவன். இப்போது என் தந்தையும் காணவில்லையே என்றபோது, காத்தமுன்நபி அந்தப் பிஞ்சின் கரம் பிடித்து, கட்டியணைத்து, மகனே! உன் தந்தை போரில் ஷஹீதாகிவிட்டாரப்பா.
أما ترضى أن أكون أنا أبك و عايشة أمك என்றார்கள்.



இந்த ஈமானிய ஷஹாதத்துதான் இன்று 210 கோடி முஸ்லிம்களை தலைநிமிர்த்தி வாழ வைத்திருக்கிறது. உலகாதாயத்திற்காக தங்களுடைய ஈமானை விலைபேசி விற்றுவிடுகிற இஸ்லாமிய சமூகம், தங்களுடைய இறைநம்பிக்கையை பலப்படுத்த முயற்சிக்க வேண்டும். இனி வரும்காலங்களில் ஈட்டி முனை என்றாலும் ஈமானுக்காக மட்டுமே ஷஹீதாக வேண்டும். அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.    

Thursday 29 January 2015

நன்றி மறப்பது நன்றன்று........!













Man gets and forgets  God gives and forgives
பெறுவதும், மறப்பதும் மனித குணம்,
தருவதும், மன்னிப்பதும் இறைவனின் குணம்.


 காலில் அணியும் செருப்பு முதல் தலையில் அணியும் தொப்பி வரை.
வீடு, வியாபாரம், வாகனம் இப்படி எல்லாவற்றிலும் நல்லதை, தரமானதை மனிதன் விரும்புகிறான்.

அல்லாஹ், காரணங்களுக்கு அப்பாற்பட்டவன். உலகில், நல்லவர்கள் என்று போற்றப்பட்டவர்களை அசிங்கப் படுத்தியும், இவர்கள் மாதிரி மோசமானவர்கள் யாருமில்லை என்றவர்களை தரத்தால் உயர்த்தியும் காட்டுகிறான்.

கடைவீதிக்கு வந்த காத்தமுன் நபி, தன் தோழர் ஒருவரை இறுகப் பிடித்துக் கொண்டு இவருக்கு யாரேனும் விலை தருவீர்களா! என்றபோது, அந்தத் தோழர், நாயகமே! என்னைப்போய் யாராவது விலை பேசுவார்களா? நான் என்ன விலைக்குப் போவேன் என்றார். இங்கு வேண்டுமானால் உனக்கு விலை இல்லாமல் போகலாம். அல்லாஹ்விடம் உனது தகுதி உயர்ந்தது என்றார்கள் நபியவர்கள்.

அபுல்ஹிகம் என்றழைக்கப் பட்டவன்தானே அபுஜஹ்லாக மாறினான். 
உம்மியாகப் பிறந்த நபிதானே உலகுக்கு அறிவொளி தந்தார்கள்.
கண்தெரியாதவர்தானே என்ற நினைவிற்குத்தானே عبس وتولى என்ற அத்தியாயம் இறக்கப் பட்டது.

என்நாவில் முடிச்சிருக்கிறது பேசினால் சரியாக விளங்காது.
 وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي * يَفْقَهُوا قَوْلِي 
என்னைவிட என் சகோதரர் ஹாரூன் நன்றாகப் பேசுவார்.
 وَأَخِيْ هَارُوْنُ هُوَ أَفْصَحُ مِنِّيْ لِسَانًا
  என்று மூஸா சொல்லியும் . அல்லாஹ், மூசாவைத்தானே நபியாக தேர்ந்தெடுத்தான்.

லைலாவை அழைத்து, அப்போதைய அரசர் கேட்டாராம். உன்னைப்போய் எப்படி மஜ்னூன் காதலித்தான் என்று. அதற்கு லைலா சொன்னாள், அரசே! உங்களிடம் மஜ்நூனின் கண்ணில்லையே.
எனவே! நம்முடைய வணக்கங்கள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டுமெனில் அவற்றிக்கு வர்ணம் பூச வேண்டும்.

முதல் பூச்சு: அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல்:

உணவு. இது இல்லையென்றால் பட்டினி.
 நீர். இது இல்லையென்றால் தாகம்.
உடை . இது இல்லையென்றால் நிர்வாணம். இவ்வளவுதானா இறைவன் கொடுத்தது. இல்லை, இல்லவே இல்லை. இதோ என் மடியில் கிடக்கும் என் மனைவி, அவள் மடியில் புரளும் என் பிள்ளைகள். என்னை ஈன்ற என் பெற்றோர், அவர்கள் ஊட்டும் உணவு, காட்டும் பாசம். என் உயிரான உறவுகள். என் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரம். என் முடிமுதல் அடிவரை. அத்தனையும் அவன் அருள்தானே! நான் நன்றிக்கடன் பட்டவனல்லவா! மனிதன் செய்யும் உபகாரத்திற்கே நான் நன்றி காட்டும் பொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்மீது கடமையல்லவா!
என் அடியார்களில் குறைவானவர்களே எனக்கு நன்றி செலுத்துகிறார்கள். இதில் நான் எதில் கட்டுப்பட்டவன். و قليل من عبادي الشكور
உன் அடியார்களில் அதிகம்பேர் நன்றி மறந்தவர்களே! ولا تجد أكثرهم شاكرون
இந்த சாத்தானியக் கூற்றுக்கு நான் சொந்தமாகிவிடக் கூடாதே! ஆம்! நான் நன்றி செலுத்த வேண்டும்.

நன்றி மறவாதீர்:  
63 வருட காலத்தில் உலகெலாம் ஒளிவெள்ளமாக்கிய உத்தமத்தூதர், தாஜூல் மதினா (ஸல்) அவர்கள், தன் தோழர்களிடம், என் நண்பர்களே! நீங்கள் எனக்கு செய்த உபகாரத்திற்கெல்லாம் ஏதோ ஒருவகையில் நான் பிரதி உபகாரம் செய்துவிட்டேன். ஆனால், மக்களெல்லாம் என்னை புறக்கணித்தபோது, என்னை ஏற்றுக்கொண்டு, மகளை திருமணம் முடித்துக் கொடுத்து, மதினா பயணத்தில் கூட்டாளியாக இருந்து, இன்னும் எவ்வளவோ எனக்காக செய்த அபூபக்கருக்கு மட்டும், நான் கியாமத்தில்தான்  பிரதி உபகாரம் செய்யமுடியும் என்றார்கள். இந்த வாக்குறுதியே அபூபக்கருக்கு செய்த பிரதி உபகாரம் தானே!

நன்றி மறவாதீர்: சக்ராத்தில் உமர் அவர்கள், தன்மகன் அப்துலாஹ்வை ஆயிஷாவிடம் அனுப்பி, நபிக்குப் பக்கத்தில் அடக்கம் பெற என்தந்தைக்கு அனுமதி தாருங்கள் என்றபோது,  ஆயிஷா அனுமதி கொடுத்தார்கள். ஏன் தெரியுமா!? إفك  உடைய விஷயமாக நபியவர்கள், பலரிடமும் ஆலோசனை செய்தபோது உமர் அவர்கள், நபியே! பரிசுத்தமான தங்களுக்கு பாவம் செய்யும் பெண்ணையா அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான், இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றார்கள். இந்த வார்த்தையை உள்ளத்தில் நிறுத்திய ஆயிஷா, இன்று பிரதி உபகாரமாய் இல்லத்திலும் இடம் கொடுக்க சம்மதித்தார்கள். கடன்பட்டு மட்டுமல்ல, நன்றிக்கடனுக்குக் கூட பிரதி செய்வதில் சஹாபியர்களுக்கு அலாதியான ஆர்வமிருந்தது.
நன்றி மறந்தால்:  
من لم يشكر النعم فقد تعرض لزولها ، ومن شكرها فقد قيدها بعقالها                                   

இரண்டாம் பூச்சு: துன்பத்தில் பொறுமை.

சின்ன சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் உயிர் துறந்து விடுகிறார்கள்.
காதலித்த பெண் கிடைக்க வில்லையென்றால், வியாபாரத்தில் நஷ்டமென்றால், வட்டிக் கடன் என்றால் உடனே சாவுதான் தீர்வென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.
இணையத்தில் படித்த ஒரு செய்தி. கத்தி, விஷம், கயிறு, இவைகளை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் மலை உச்சிக்குப் போகிறான். எப்படி சாவதென்று யோசிக்கிறான். சாவதற்கு இவ்வளவு யோசித்த நீங்கள், வாழ்வதற்கு ஒரு வழிகூட யோசிக்க வில்லையே என்று மனைவி கேட்டாளாம்.
துன்பத்தின் போது என்ன செய்ய வேண்டும்.
முன்னோர்களை நினைவு கூறுதல். عبدالله بن مسعود  அவர்கள் கூறுகிறார்கள். ஹுனைன் யுத்தம் முடிந்து கனீமத் பொருட்களின் பங்கீடு நடந்தது. அப்போது, சிலருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஓரிரண்டு நபருக்கு நூறு ஒட்டகம் வரை வழங்கப்பட்டது. இதைப் பார்த்த வாலிபர் ஒருவர், இந்த பங்கீடு நியாயமாக இல்லை. என்றார். இந்த செய்தி நபியவர்களுக்கு தெரிய வந்தபோது அல்லாஹ்வும், ரசூலையும் தவிர வேறுயார்தான் நீதமாக நடக்க முடியும்.!?  மூஸாவின் சமுதாயம், அவரை ரொம்பவே  சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறார்கள். அவரும் பொறுமையாக இருந்தார். அல்லாஹ் மூஸாவிற்கு அருள்புரிய வேண்டும். என்றார்கள். ஆக துன்பத்தின்போது முன்னோர்களை நினைவில் கொள்ள வேண்டும்.

துன்பத்தின்போது அல்லாஹ்வின் உதவியை நம்ப வேண்டும்:

நஜ்து தேசம் சென்று திரும்புகையில் ஒரு மரத்தடியில் நபி இளைப்பாறிய சமயம், நபியின் வாளை எடுத்துக் கொண்டு உன்னை இப்போது காப்பாற்றுபவர் யார்? என்றதும் நபி, அல்லாஹ் என்றார்கள். உடனே அவரது கையிலிருந்த வாள் கீழே விழ நபி எடுத்துக் கொண்டு இப்போது உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்றார்கள். ஆக துன்பத்தில் அல்லாஹ்வின் உதவி உண்டு என்பதை நம்பவேண்டும்.

துன்பத்திற்கு நற்கூலி உண்டு என்பதை நம்பவேண்டும்:
ஒரு முஃமினின் காலில் குத்தும் முள்ளிற்கும் நன்மை உண்டல்லவா!
عبدالله بن مسعود அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முஃமினுக்கு காய்ச்சல் வந்தால் கூட மரத்திலிருந்து இலைகள் உதிர்வதுபோல அவனது பாவங்கள் உதிர்கின்றன என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

துன்பத்தில் பொறுமை வேண்டும்:
ஒருநாள் ஃபாத்திமா (ரலி), கணவர் அலி, பிள்ளைகள் ஹசன் ஹுசைன் இவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு தந்தையின் நினைவு வரவே நபிக்கும் ரொட்டி எடுத்துக் கொண்டு போய் கொடுத்தபொழுது மாநபி சொன்னார்கள், மூன்று நாளைக்குப் பிறகு என்வயிற்றுக்குள் செல்லும் முதல் உணவு து என்றார்கள். ஆக துன்பத்தின் போது பொறுமை காக்க வேண்டும். அல்லாஹ்  அருள்புரிவானாக!






Thursday 25 December 2014

சிறந்து பிறந்த செம்மல் நபி(ஸல்) !


சமுதாயத்தில் வீரியமான பேச்சுக்களால் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்கள் உண்டு. ஊருக்காகவும், பேருக்காகவும் உழைத்த தலைவர்கள் நிறைய உண்டு. ஏன் இலச்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் உண்டு. இவர்களில் எவருமே பிறக்கும்போதே சிறப்போடு பிறக்கவில்லை.  எவருடைய பிறப்பும் எதிர்பார்க்கப்படவும் இல்லை.  இவர் பிறப்பாரென்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்று சொள்ளப்படுமளவு எந்த தலைவர்களும் பிறக்கவுமில்லை. பிறக்காத எந்த தலைவரின் பெயரும் இதுவரை யாருக்கும் பெயராக வைக்கப்படவும் இல்லை.
ஆனால், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் பிறக்கும்போதே சிறப்போடு பிறந்தார்கள். இந்த நபி எப்போது வருவார் என்ற எதிபார்ப்புகளோடு பிறந்தார்கள், கடைசி நபி எங்கள் குடும்பத்தில் வரவேண்டுமென்று, நபி வருவதற்கு முன்னாலேயே முஹம்மது நபியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
எதிர்பார்ப்பு 1:  
                           و إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب و حكمة ثم جآءكم ..........الخ    
ஆன்ம உலகில் நபிமார்களின் ஆன்மாக்களை ஒன்றுகூட்டி உங்களுக்கு பிறகு வரப்போகும் நபியை ஏற்று, அவருக்கு உதவியும் செய்யவேண்டும், என்ன செய்வீர்களா? என்று அல்லாஹ் கேட்டபோது, அந்த ரூஹுகளெல்லாம் கண்டிப்பாக அவரை ஏற்று, அவருக்கு உதவியும் செய்வோம் என்றார்கள்.(03:81)
இறுதி நபியை முதன்முதலாக நபிமார்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எதிபார்ப்பு 2:
                                 و إذ قال عيسي ابن مريم يا بني إسرائل إني رسول الله اليكم ..............الخ 
இஸ்ரவேலர்களே! நான் கொண்டுவந்த வேதத்தையும், என் தூதுவத்தையும் உண்மைபடுத்தும் ஒரு இறைத்தூதர் அஹ்மத் என்ற பெயரில் வரவிருக்கிறார்(61:06) என்ற சுபச்செய்தியை ஈஸா நபி தன் சமூகத்திற்கு சொன்னதின் உள்ளர்த்தம், இறுதி நபியை மக்களும் எதிபார்க்கிறார்கள்.
எதிர்பார்ப்பு 3: 
                       ربنا و ابعث فيهم رسولا منهم يتلوا عليهم ........إلخ
எங்கள் இறைவனே! உன்னுடைய வேதத்தை ஓதிக் காண்பித்து, ஞானத்தை கற்றுத்தரும் ஒரு தூதுவரை வெளிக்கொண்டுவா. என்று இப்ராஹீம் நபி துஆ செய்கிறார்கள். ‘’ஒரு தூதுவரை’’ என்பது நபி (ஸல்) அவர்களையே குறிக்கும். எனவேதான் பின்னொரு காலத்தில் நபியவர்கள், انا دعوة أبي إبراهيم و بشري عيسي و رؤيا امي   நான் இப்ராஹிமின் துஆவாக இருக்கிறேன் என்றார்கள். நபியின் வருகையை இந்த சமூகத்தின் தந்தையான இப்ராஹீம் நபியே எதிர்பார்த்தார்கள்.
எதிர்பார்ப்பு 4: நபி பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னாள்,
 أسعد الحميدي   என்ற அரசன் பல்வேறு நாடுகளை வெற்றி கொண்டு, மக்கா, மதினாவிற்கும் யுத்தம் நாடி வருகிறான். இவ்விரு பூமியின் புனிதத்தையும், இறுதி நபியின் வருகையையும், அவரின் வாழ்விடம் மதினா என்பதையும் அறிந்த மன்னன் யுத்தத்தை கைவிட்டு தன் தாயகம் திரும்பும் வேளை, நாயகம் வந்தால் இதைக் கொடுங்கள் என்று ஒரு கடிதத்தையும் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால்,ஆயுள் வரை, ‘நபியை’ காணும் பாக்கியம் பெறவில்லை. பின்னொரு காலத்தில் நபியவர்கள், ஹிஜ்ரத் செய்து மதினா வந்தபோது அந்தக் கடிதம் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில்,
                شهدت على احمد  انه رسول من  الله باري النسم           
               فلو مد عمري إلى عصره لكنت وزيرا له وبن عم     என்று எழுதப்பட்டிருந்தது.
நபியவர்கள்கூட ஒரு கட்டத்தில் இப்படி கூறினார்கள், لا تسبوأ الطبع أنه أسلم   என்றார்கள். ஆக முஹம்மது நபியின் வருகை ஒன்று மட்டும்தான் எதிபார்க்கப் பட்டது. இந்த எதிர்பாப்பு வேறெவருக்கும் இல்லை.
பரிசுத்தமான பாரம்பரியம்:
و تقلبك في الساجدين     என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனத்திற்கு வாசகம் அமைக்கிற இமாம் ராஜி  அவர்கள், 
كان روحه من الساجدين إلى الساجدين   என்று பதிவு செய்கிறார்கள். நபியின் உயிர், வணக்கசாலிகளுக்குள்ளேயே மாறி மாறி வந்திருக்கிறது. நபியின் பரம்பரையில் ஆதம் (அலை) வரை, யாருமே சிலை வணங்கிகள் கிடையாது.
பிறப்புக்கு முன்; நபியின் தகப்பனாரை பார்க்கும்போதெல்லாம் மக்காவின் பெண்ணொருத்தி உங்களை நான் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறேன் என்பாள். அப்துல்லாஹ் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள், எப்பொழுது ஆமினாவிற்கும் அப்துல்லாஹ்விற்கும் திருமணம் முடிந்ததோ அதன்பிறகு அப்துல்லாஹ்வைப் பார்த்தாலும் பேசாமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள். அவளிடம் அப்துல்லாஹ் கேட்டார்கள். ஏன் இப்பொழுதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை, ஒதுங்கிப் போகிறாய் என்றபோது, அந்தப் பெண் கூறினாள், உங்கள் நெற்றியில் ஒரு ஒளியைப் பார்த்தேன், அந்த ஒளியை அடையவேண்டும் என்பதற்காக உங்களை திருமணம் முடிக்க நாடினேன். அதற்காகத்தான் உங்களைச் சுற்றி சுற்றி வந்தேன், இப்போது அந்த ஒளி உங்களிடமிருந்து போய்விட்டது என்றாள்.
அப்துல்லாஹ், மக்காவில் அழகானவர், ஆமினா அவ்வளவு அழகில்லை, திருமணத்திற்குப் பிறகு ஆமினா அழகுமிக்கவராகவும், அப்துல்லாஹ் அழகு குறைந்தவராகவும் காண ஆரம்பித்தனர், காரணம், அப்துல்லாஹ்வின் உடம்பில் மனித்துளிகளாக நபி இருந்தவரை அப்துல்லாஹ் அழகானவராக இருந்தார், எப்பொழுது நபியவர்கள், ஆமினாவின் கருவறை சென்று விட்டார்களோ அன்றிலிருந்து ஆமினா மெருகேற ஆரம்பித்தார்கள்.

  கி.பி. 570 ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை இந்த அவனியை அலங்கரிக்க அண்ணல் நபி பிறந்தார்கள்.
عثمان بن أبي العاص، عبدالرحمن بن عوف  இவ்விருவரின் தாய்மார்களும் ஆமினா அம்மையாரோடு பிரசவ நேரத்தில் உடனிருந்தவர்கள்.  عبدالرحمن بن عوف ன் தாயார் ஷஃபா அவர்கள் கூறுகிறார்கள். நபியர்களை நான் கையில் வாங்கியதும் எங்கும் ஒளிவெள்ளம். நட்ச்சத்திரங்களெல்லாம் என்னை நெருங்கி வந்தன, என்மேல் விழுந்து விடுமோ என்று நான் பயந்தேன். என்கிறார்கள்.
ஆமினா கூறுகிறார்கள், நபி பிறக்கும் அந்த நேரத்தில் ஒரு அசரீரி அல்லது இல்ஹாம் போடப்பட்டது.
إنك قد حملت بسيد هذه الأمة فإذا وقع إلي الارض فقولي اعيده بالواحد من شر كل حاسد فاذا وقع بسميه محمدا              
மேலும் ஆமினா கூறினார்கள். يطوف به من مشرق إلى المغرب والبحار  என்று சப்தம் கேட்டது. என் பிள்ளையை சில வினாடிகள் காணவில்லை. என்கிறார்கள்.
அதன்பிறகு கஃபாவில் இருந்த அப்துல் முத்தலிபுக்கு செய்தி சொன்னபோது, விரைந்து வந்த அப்துல் முத்தலிப் குழந்தயை தூக்கிக் கொண்டு பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்துவிட்டு வெளியே வந்து முஹம்மத் என்று பெயரும் வைத்தார். சுற்றிலும் இருந்தவர்கள், என்ன முத்தலிப் அவர்களே! இந்தப் பெயர் உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வைக்கப் படவில்லையே! ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று கேட்டபோது,
      أردت أن يحمده الله في السماء وان يحمده الخلق في الأرض என்று கூறினார். எல்லா வகையிலும் சிறப்போடும் அதிசயங்களோடும் ஏந்தல் நபி அவதரித்த இம்மாதத்தை சிறப்புறச் செய்வோமாக!
WWW.alshirazi.com/compilations/.../3.htm  என்ற தலைப்பில் நபியின் பிறப்பு இன்னும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.








  
                                             


Thursday 18 December 2014

அஹிம்சா வழி ( ல் ) ஆயுதம் தரிப்போம்!

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு, உங்களை சந்திக்கிறேன். என்னுடைய இணையதளம் என்ற இறுமாப்பை சக்திவாய்ந்த பல வெள்ளிமேடைகள் இடித்து தரைமட்டமாக்கி விட்டன. 
(அஜீஸ் பாகவி, சதக் மஸ்லஹி, பஷீர் உஸ்மானி, அப்பாஸ் ரியாஜி, வரஸத்துல் அன்பியா, உலமா.இன், உஸ்மானிகள் பேரவை, இவர்களின் வெள்ளிமேடைகள், இன்னும் நிறைய.) 
 நானும் பதிவிட வேண்டும் எனும் பந்தயத்தில் பலமுறை முயற்சித்தும் (பளுவின் காரணமாக) பின்தங்கி விட்டேன். வெள்ளிமேடைகளும் பெருகி விட்டன.  
எப்போதாவது வருவேன், ஏதேனும் ஒன்று தருவேன் வலைதள நண்பர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

புதிதாய் உருவாக்கி விட்ட ஆட்சிமுறை, இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் பார்கிறது என்ற என் பயமே இந்த ஒலியாக்கம். 
                            


 இந்தியா முழுவதும் இஸ்லாமிய சமூகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அடுக்கடுக்காக பல்வேறு இன்னல்களை ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என்ன?
1.       ஐவேளை தொழுகை
தொழுகையைக் கொண்டு உதவி தேடுமாறு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது. அல்லாஹ்வோடு நேரடியாக பேச முடிந்த ஒரே வணக்கம் தொழுகை. அந்த தொழுகையை விட்டதன் விளைவு இறை உதவி இல்லாமல் போனது.

நபி (ஸல்) அவர்களின் கடைசி வஸிய்யத். الصلوة يا امتي الصلوة يا امتي என்பதுதானே. ஒரு தகப்பனின் கடைசி வஸிய்யத்தை நிறைவேற்றுவது பிள்ளைகளின் பொறுப்பல்லவா! இந்த சமூகம் அந்த வஸிய்யத்தின் அடையாளத்தை விட்டதின் விளைவு, நாடே அந்நியமாகி விட்டது.    

உமர் ரலி, தொழுகையின் நேரத்தில்தான் குத்தப்பட்டார்கள். 6 நாட்களாக சாப்பிட்டதெல்லாம் காயத்தின் வழியே வெளியானது. மயக்கம் மாறி மாறி வந்தபோதும் தொழுகையை பற்றியே கேட்டார்கள்.                                      لاحض في الإسلام لمن لا صلوة له   என்ற வார்த்தையின் சக்கரவர்த்தி உமர் தானே.

ஹுசைன் ரலி. 52 நபர்களோடு கர்பலாவில். லுஹர் நேரம் வந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறும் தொழுகை முடிந்து யுத்தம் தொடரலாம் என்றபோதும் எதிரிகள் மறுத்து விட்டார்கள். படையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியினர் தொழுகவும் அடுத்த பகுதியினர் யுத்தம் செய்யவும் கட்டளையிட்டார்கள். பிறகு தொழுதவர்கள் யுத்தம் செய்யவும் யுத்தம் செய்தவர்கள் தொழுகவும் பணித்தார்கள். தொழுகையின் வீரியம் என்னவென்பதை நாயகத்தோழர்கள் விளங்கினார்கள், அமல் செய்தார்கள். எனவே இந்தச் சமூகம் கையிலெடுக்கவேண்டிய முதல் ஆயுதம் தொழுகை.  
2.       
   பெரும் பாவங்களை விடுதல்:
வட்டி, திருட்டு, சூனியம் ஏன், பொய்யும் பெரும்பாவம்தானே! வீட்டுக்கு வருகிற கடன்காரன் முதற்கொண்டு கடைக்கு வருகிற வாடிக்கையாளர் வரை எல்லோரிடமும் பொய் பேசித்தானே தப்பிக்கிறோம். வாழ்க்கையில் பலதடவை பேசிய பொய்கள்; நமது வாழ்க்கையையே இந்த நாட்டில் பொய்யாக்கி விட்டது.
நபியே! நம்மில் நல்லவர்கள் உயிரோடு இருக்க இறைவன் புறத்தில் இருந்து வேதனைகள் இறங்குமா!? என்று ஆயிஷா (ரலி) கேட்டபோது, பாவங்கள் மிகைத்து விட்டால், நல்லவர்கள் இருந்தாலும் வேதனைகள் வரும் என்றார்கள் நபியவர்கள். ஆக இந்தச் சமூகம் கையிலெடுக்க வேண்டிய இரண்டாவது ஆயுதம் பெரும் பாவங்களை விடுதல்.

3.       பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றே பிற சமயத்தவரிடமும்  ஒழுக்க மாண்புகளோடும், நன்னடத்தையுடனும்  நடந்து கொள்ள வேண்டும்.

மாமன், மச்சான் என்ற உறவுமுறைப் பேச்சுக்கள், மார்கத்தை விட்டு அவர்கள், விலகி நிற்கிறார்கள் என்பதைவிட, அவர்களால் முஸ்லிம்கள் தான் மார்க்கத்தை விட்டு தூரமாகி விட்டார்கள்.

சொந்த ஊரை விட்டு துரத்தப்பட்டு, சொந்தங்களை அண்டவிடாமல் துன்புருத்திய சமூகத்தை சந்திக்கும்போது வெறுப்பும், கோபமும் வருவது இயற்கையே! அந்த சூழலிலும் اليوم يوم الملحمة என்ற தம் தோழர்களிடம் 
اليوم يوم المرحمة  என்று சொல்லுங்கள் என்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறைதான் மக்கா வெற்றியின்போது பலநபரை இஸ்லாத்தின்மீது நல்லெண்ணம் கொள்ளவைத்தது.

நபியின் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு யஹூதி. தினமும் குப்பைகளை நபியின் வீட்டிற்கு முன்னால் கொட்டுவது வழக்கம். அந்த குப்பைகளையெல்லாம் கோபப்படாமல் கூட்டி அப்புறப்படுத்துவது நபியின் பழக்கம். ஒருநாள் நபி, வீட்டிற்கு முன்னால் குப்பை இல்லாததைக் கண்டு  لعل جارنا اليهود  مريض  என்பதோடு நில்லாமல் அந்த யஹூதியின் வீட்டிற்கு சென்று நலமும் விசாரித்தார்கள், நற்குண நாதர் (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறை அந்த யஹூதிக்கு இஸ்லாத்தைக் கொடுத்தது.

ஹசன் பசரி(ரஹ்) ஒருநாள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அவர்களது பக்கத்துவீட்டு கிருத்துவ நண்பர் அன்னாரை நலம் விசாரிக்க வந்தபோது தன் வீட்டிலிருந்து வரும் கழிவுநீர் ஹசன் பசரியின் வீட்டிற்குள் வருவதும் அதைப் பாத்திரத்தில் பிடித்து அவரே வெளியில் ஊற்றுவதையும் பார்த்த கிருத்துவ நண்பர், ஹசன் பசரியே! என் வீட்டுக் கழிவுநீர் உங்கள் வீட்டிற்குள் வருகிறதே, என்னிடம் சொல்லக்கூடாதா?! எவ்வளவு நாளாக இப்படி நடக்கிறது என்றார். இருபது வருடமாக இப்படித்தான் செய்து வருகிறேன் என்றார்கள் ஹசன் பசரி. இந்த அணுகுமுறையால் அந்த கிறிஸ்த்துவர் இஸ்லாத்தை ஏற்றார்.
ஆக, இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய மூன்றாவது ஆயுதம் பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்.
4.  
                 நமக்குள் ஒற்றுமை வேண்டும்:
எல்லோருடைய சுபாவமும் எல்லோருக்கும் ஒத்துப் போகாது. இது இயல்பு. சுபாவ மாறுபாடுகள்தான் நமக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. சின்னச்சின்ன பிரச்சனைகள், பெரியபெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏன், நபித்தோழர்களுக்குள் பிரச்சனைகள் இல்லையா? அவர்களெல்லாம், காலம் முழுதும் அடித்துக் கொண்டும், எதிரிகளாகவுமா வாழ்ந்தார்கள். கருத்துவேறுபாடுகள் கல்புக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அபூபக்கருக்கும், உமருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கோபப்பட்ட உமர் வேகமாக வீட்டிற்குப் போகிறார்கள். அபூபக்கரும் உமரிடம் மன்னிப்புகோர பின்னாலேயே போகிறார்கள். உமர் வேகமாக கதவை அடைக்க, மனமுடைந்து மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து விட்டார்கள் அபூபக்கர்(ரலி). அபூபக்கரிடம் நாம் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று வருத்தப்பட்ட  உமரும் அபூபக்கரைத் தேடி பள்ளிக்கு வந்தார்கள். இருவரும் தங்களது தவறை முன்மொழிந்து, ஒருவருக்கொருவர் மன்னிப்புக்குக் கேட்டு மல்லுக்கு நின்றார்கள்.
இதை மாநபி, மலர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டே ஒன்று சொன்னார்கள்; என்னை எல்லோரும் பொய்யனென்றபோது இந்த அபூபக்கர்தான் என்னை உண்மை படுத்தினார் என்றார்கள் உத்தம நபி.
வேறுபட்டக் கருத்துக்குள் பொறுத்துப் போகிற பக்குவம் வேண்டும்.

பிரச்சனைகளின் போது கையாள வேண்டிய காரியங்கள்:
   மன்னிக்கப் பழகனும்
மக்காவை விட்டு நபியவர்கள் விரட்ட பட்டபோது இரண்டு ரக்அத் தொழுக வேண்டி கஃபாவிற்குப் போனபோது  عثمان بن طلحة  எனும் கஃபாவின் பொறுப்புதாரி, நபியை உள்ளே விட மறுத்தபோது எனக்கொரு காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன். என்று நபியவர்கள் கலங்கிய உள்ளத்தோடு சென்று விட்டார்கள். எட்டாண்டுக்குப் பிறகு மறுபடியும் ஃபாவிற்கு போனார்கள். அன்றைக்கு மக்காவே மாநபி வசம். (விரிவஞ்சி விடுகிறேன் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.)    
 خذوها يا بني ابي طلحة خالدة تالدة لا ياخذها الا ظالم                                அபீ தல்ஹாவின் மகனே! நிரந்தரமாக உங்களிடமே இருக்கட்டும் இந்த சாவி! உங்களிடமிருந்து இதைப் பிடுங்குபவன் பாவி! என்றார்கள்.
என்றைக்கோ  நடந்து முடிந்த பிரச்சனைகளை தோண்டி எடுத்து பழி வாங்கும் மனிதர்களுக்கு தவறுகளை மன்னிக்க கற்றுக் கொடுத்தார்கள் காருண்ய நபி.

தவறுகளை  மறைக்கப் பழகனும்
என் மகள் நிறைய தவறு செய்து விட்டாள். தற்கொலைவரை போய்விட்டாள். இப்போது அவளை பெண் கேட்கிறார்கள். அவளது குறைகளையெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடவா? என்று உமர் (ரலி)யிடம் கேட்டபோது,
அவளது குறைகளை பிறரிடம் சொன்னால் உன்னை கடுமையாக தண்டிப்பேன். முஸ்லிமான, பத்தினியான பெண்ணை எப்படி மணம் முடித்துக்கொடுப்பாயோ அதைப் போன்றே இவளையும் மணம் முடித்துத் தர வேண்டும் என்றார்கள் உமர் (ரலி).

தவறுகளை மறக்கப் பழகனும்
சரித்திரத்தில் உமர் என்பவர் யார்?  உத்தம நபியின் உயிரெடுக்க வந்தவர்தானே! பலதடவை நபிக்கு யோசனை சொன்னபோதுகூட நீ யார் எனக்கு யோசனை சொல்வது, என்னையே கொள்ள வந்தவன்தானே நீ, என்று ஒருதடவை கூட நபி உமரைப் பார்த்து சொன்னதில்லையே!

நம்முடைய தவறுக்கு மன்னிப்பு கேட்க பழகனும்
  யுத்தகளத் தயாரிப்பில் நபி. சஹாபிகளின் வரிசையை சரிசெய்ய நபி ஈட்டியை பயன்படுத்தியபோது ஒரு நபித்தோழரின் வயிற்றில் பட்டுவிட நபியே! ஈட்டியால் எனக்கு நோவு தந்தீர்கள் என்றார். உடனே நபியும் பதிலுக்கு என்னை நோவினை செய்யுங்கள் என்றார்கள். நபியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த அந்த நபித்தோழர், நபியே! யுத்தம் போகப் போகிறேன்; நான் திரும்புவேனா? மாட்டேனா? தெரியாது. எனவே, உங்கள் மேனியை முத்தமிட ஆசை கொண்டேன் என்றார் நாயகத் தோழர். தவறு தன பக்கம் என்றபோது உடனே ஏற்றுக் கொண்டு தலைசாய்த்தார்களே அந்த நபியின் உம்மத்தா இன்று இந்த சுன்னத்தை மறந்து விட்டுத் தவிக்கிறது.?

மக்களை ஒன்று படுத்தனும்

பிரிவினைகள் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கும். இறை உதவியை தடுத்துவிடும்.

பிரிவினைவாதியால் அல்லாஹ்வின் அருள் தடைபடும் என்பது நபிமொழி.
 யாரைப் பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்; உங்களை நான் பரிசுத்தமாகவே பார்க்க விரும்புகிறேன் என்றார்கள் ஏந்தல் நபி.
ஆக இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய இந்தாவது ஆயுதம் நமக்குள் ஒற்றுமை

இன்டர்நெட்டில் வலம்வரும் இஞ்சினியர்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளாய் சித்தரிக்கப் படும் நிலை மாறவேண்டுமானால், கட்டாய மதமாற்றமெனும் காவிகளின் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டுமானால் மேற்சொன்ன இந் ஐந்தொழுக்கப் பயிற்சி முக்கியம்.

இந்த அஹிம்சாவழி ஆயுதங்கள்தான் இந்த நாட்டில் முஸ்லிகளை நிம்மதியாக வாழவைக்கும். அறவழிப் போரால் மட்டுமே இந்த சமூகத்தைக் காக்க முடியும்.

அல்லாஹ் அருள் புரியட்டும்!