Thursday 23 January 2014

இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்!







முதலில் ‘அரசியல்’ என்றால் என்ன என ஆய்வோம். ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்தான் அரசு இயல் (Politics) எனப்படுகிறது.

அரசின் அமைப்பு, குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படை சட்டமே (Constitution) அரசியல் சாசனம், அல்லது அரசியல் சட்டம் எனப்படுகிறது.

மனிதர்கள் ஒரு பத்துப்பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். பதின்மரில் ஒருவர் மூத்தவர் (தலைவர்); அவரது வழிகாட்டலின் பேரில் செயல்பட இருவர், அல்லது மூவர் (அமைச்சர்கள்). சிறார்கள் அந்த இடத்தில் வாழ்ந்து வளர வேண்டியவர்கள் (குடிமக்கள்).

ஆயினும், ‘தத்துவம்’ (Philosopy), அல்லது ‘கோட்பாடு’ (Theory) என்ற தகுதி அடிப்படையில் பார்த்தால், மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே அரசியல் எனும் தத்துவம் உருப்பெற்றது.

அரசு மற்றும் அதோடு தொடர்புடைய கோட்பாடுகளான அரசியல் கடமை, அரசியல் சட்டம், சமூக நீதி, அரசியல் அமைப்பு போன்றவற்றை ஆராயும் துறையாக அரசியல் தத்துவம் பரிணமித்தது, மிகவும் பின்னால்தான். கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428-347) எழுதிய ரிபப்ளிக் (குடியரசு) எனும் நூலும், அவருடைய மாணவரும் கிரேக்கத் தத்துவ அறிஞருமான அரிஸ்டாட்டில் (384-322) எழுதிய ‘பாலிடிக்ஸ்’ (அரசியல்) எனும் நூலும்தான் அரசியல் தத்துவத்தில் எழுதப்பட்ட ஆரம்ப வழிகாட்டிகள் என்பர்.

இதே அரசியல், ‘அறிவியல்’ எனும் அந்தஸ்தை அடைந்தது 19ஆம் நூற்றாண்டில்தான் என்கிறார்கள். பலவிதமான சமூக அறிவியல் பிரிவுகள் உருவாகத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டுவரை, ‘அரசியல் அறிவியல்’ எனும் நவீனத்துறை உருவாகியிருக்கவில்லை. அரசியல் கட்சிகள் நவீன வடிவத்தில் 19ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றினவாம்!

உண்மையில் அரசியலும் அரசியல் சாசனமும் 6ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையும்படுத்தப்பட்டு, உலகின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை இஸ்லாமிய அரசியலுக்கு உண்டு. அதை இறைவனின் ஆணையின்பேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கி, அன்றைய நவீன அரசாட்சி முறையை உலகுக்கு எடுத்திக்காட்டினார்கள்.

இதனாலேயே, நவீன வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் H. ஹார்ட் தமது ‘THE 100’ (நூறுபேர்) எனும் நூலில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முதலிடம் அளித்தார். அதற்கு அவர் சொன்ன அறிவுபூர்வமான காரணம் கவனத்திற்குரியது.

ஹார்ட் சொன்னார்: நூறு உலகத் தலைவர்களில் முதலாமவர் முஹம்மத். ஏனெனில், சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் அவர் ஒருவரே. அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றின் தலைவர்; பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்.

சமயமும் அரசியலும்

சமயத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே பலரும் கருதுகின்றனர். இக்கருத்து முதன்முதலில் ஐரோப்பியக் கிறித்தவ நாடுகளில்தான் தோன்றியது. அங்கே கிறித்தவ திருச்சபைகள் மக்களின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்தன; போப்புகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரம் செலுத்திவந்தனர்; தாங்கள் விரும்பக்கூடியவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்புப் பத்திரம் வழங்கிவந்தனர்.

திருச்சபைகளின் எல்லைமீறிய போக்கைக் கண்டு வெகுண்டெழுந்த முற்போக்குவாதிகள் சிலர், போப்புகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர். பணத்துக்குச் சொர்க்கத்தையே விலைபேசும் பாதிரிமார்களின் போக்கால் மதத்தின் மீதே வெறுப்பு கொண்ட அவர்கள், அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரகடப்படுத்தினர்.

இவ்வாதத்திற்கு ஆதாரமாக, ‘‘சீசருக்கு வழங்க வேண்டியதை சீசருக்கும் கர்த்தருக்கு வழங்க வேண்டியதைக் கர்த்தருக்கும் வழங்கிவிடுங்கள்’’ என்ற பைபிளின் கருத்தை மேற்கோள் காட்டிப் பரப்புரை செய்தனர்; சீசருக்கும் (அரசருக்கும்) கர்த்தருக்கும் (கடவுளுக்கும்) பிரிவினையை உருவாக்கிய அவர்கள் மதத்திலிருந்து அரசியலை வெளியேற்றிவிட்டனர்.

இஸ்லாத்தில் இப்பிரிவினைக்கு இடமே இல்லை. ஏனெனில், எவராலும் பணத்திற்குப் பதிலாகச் சொர்க்கத்தை விற்க முடியாது. ஓரிறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் பாவிகளின் பாவத்தை மன்னிக்க இயலாது. இதில் இஸ்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது.

எனவே, கிறித்தவ மதத்தில் ஏற்பட்டுவிட்ட இழுபறி நிலை இஸ்லாத்தில் கிடையாது. ஆதலால், அரசியலும் மார்க்கத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம்தான்; அரசியல் மார்க்கத்தின் வழிகாட்டலின் பேரிலேயே அமைய வேண்டிய ஒரு துறைதான் எனும் தத்துவத்தை முதலில் புரிந்துகொள்வது நல்லது.

இஸ்லாமும் அரசியலும்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அது மற்றத் துறைகளுக்கு வழிகாட்டியிருப்பதைப் போன்றே, இம்மை வாழ்வின் அச்சாணியாக விளங்கும் அரசியல் துறைக்கும் நல்வழி காட்டியுள்ளது. அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை உணர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த அதிகார சக்தியைத் தமக்கு வழங்குமாறு இறையிடம் பிரார்த்தித்தும் உள்ளார்கள்.

மக்கா இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டபோது, மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிடுமாறு இறைவன் ஆணையிட்டான். அப்போது இந்த வேண்டுதலைச் செய்யுமாறு அவன் தன் பிரியமான தூதருக்கு ஆணையிட்டான்:

‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (17:80)

திருமறை விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள்.

ஆட்சியதிகாரம் என்பது, இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால், மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், குர்ஆன் மூலம் தடுக்காத பல காரியங்களை, அதிகாரத்தின் மூலம் தடுக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்)

ஆட்சியதிகாரம் என்பது, இத்துணை பெரும் வீரியம் மிக்கது என்பதாலேயே அல்லாஹ் தன் திருமறையில் நல்லடியார்களுக்குச் சில வாக்குறுதிகளை வழங்குகின்றான்.

‘‘உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் (சில) வாக்குறுதிகளை அளித்துள்ளான்; அவர்களுக்கு முன்பு இருந்தவர்களை இப்பூமியில் அதிகாரம் உள்ளவர்களாய் அவன் ஆக்கியதைப் போன்று, இவர்களையும் அதிகாரம் உள்ளவர்களாய் நிச்சயமாக ஆக்குவான். அவர்களுக்காகத் தான் உவந்துகொண்ட அவர்களின் மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக அவன் நிலை நிறுத்துவான்; அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பின்னர் அமைதியை மாற்றாக அவர்களுக்கு அவன் நிச்சயமாக வழங்குவான். (24:55)

கவனிக்க வேண்டிய வாக்குறுதிகள். நாம் செய்ய வேண்டியது இரண்டு. ஒன்று, அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு, நல்லறங்கள் புரிய வேண்டும். தீமைகளைக் கைவிடுவதும் ஒரு நல்லறம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இதற்குப் பிரதியாக அல்லாஹ் நமக்கு அளிப்பது முப்பெரும் பரிசுகளாகும். 1. நல்லாட்சி புரியும் வாய்ப்பு. 2. அல்லாஹ்வுக்குப் பிரியமான இந்த மார்க்கத்தில் நிலைத்திருப்பது. 3. அச்சத்திற்குப் பின் அமைதி. மூன்றும் முக்கியமானவை; உயிர்நாடியானவை. அல்லாஹ் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தான்.

வரலாற்றுச் சான்றுகள்

முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் (அலை) அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள். யூஷஉ பின் நூன் (அலை) அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் (அலை) அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர்.

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர்.

கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும்.

மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியாவின் சிரநேயிக்கா (கைரவான்), செப்டர் (தாவூடா) ஆகிய நகரங்களும் கிழக்கில் சீனா எல்லைவரையும் முஸ்லிம்கள் கரத்தில் வந்தன. இராக்கின் பல நகரங்களும் ஈரானின் குராசான், அஹ்வாஸ் ஆகிய நகரங்களும் வெற்றிகொள்ளப்பட்டன. துருக்கியரின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. (தஃப்சீர் இப்னு கஸீர்)

இவ்வாறு முஸ்லிம்களின் வெற்றி தொடர்ந்தது. இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாம் கால் பதிக்காத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அது அவனியெங்கும் பரவிவிட்டது. உலக மக்கட்தொகை 690 கோடியாக இருந்த 2010ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 161 கோடியாக (23.4%) இருந்தது. இதுவே 2030இல் 219கோடியாக (26.4%) உயரும் என PEW எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. அப்போது உலக மக்கட்தொகை 830 கோடியாக இருக்கலாம்.

இஸ்லாமிய ஆட்சிமுறை

இன்றைய உலகில் இரண்டு வகையான ஆட்சிமுறைகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. 1. முடியாட்சி (Monarchy). அரசர் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி. பிளவுபடாத இறையாண்மை, அல்லது ஒரு நாட்டின் நிரந்தரமான தலைமைப் பொறுப்பை ஏற்ற தனிமனிதரின் ஆட்சி.

இது இப்போது பரம்பரை வழியில் ஆட்சியுரிமை கொண்ட அரசுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. அரசர்களின் தெய்வீக உரிமையாக ஆட்சி கருதப்பட்டது.

2. மக்களாட்சி, அல்லது ஜனநாயகம் (Democracy). வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சிமுறை; உயர்ந்த அதிகாரம் மக்களிடம் குவிந்திருக்கும் அரசாங்க வடிவம்.

பொது வாக்களிப்பு, பதவிக்கான போட்டி, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது.

1. இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (முஸ்லிம்)

தனிமனிதன் தனிமனிதனையோ, மக்கள் மக்களையோ, ஆட்சியாளர்கள் குடிமக்களையோ எந்த வகையிலும் சுரண்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்துவற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.

2. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடலாம் என்பதால், இஸ்லாம் தேர்வு முறையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், ஆட்சியின் (கிலாஃபத்) தலைநகரில் உள்ள அறிவுஜீவிகள் (அஹ்லுஷ் ஷூரா) அளிக்கும் யோசனையின் பேரில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைநகர் மக்கள் வந்து அவருக்கு வாக்கு (பைஅத்) அளித்தனர்.

அதையடுத்து இதர நகரவாசிகள் தங்கள் வாக்குகளை அளித்தனர். எப்படியானாலும் ஆலோசனையாளர்களின் கருத்தைக் கேட்டே ஆட்சித் தலைமைக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் சாசனம் திருக்குர்ஆனாகவே இருக்கும். அதுதான இறைமொழி; மாற்றம், திருத்தம், கூடுதல், குறைவு ஆகிய எந்த மாறுதலுக்கும் உட்படாத நிலையான சாசனம்.

4. இஸ்லாமிய ஆட்சி, ஆலோசனை (ஷூரா) அடிப்படையில் அமைய வேண்டும். 5. அது கிலாஃபத்தாகவும் (அரசியல்) இமாமத்தாகவும் (ஆன்மிகம்) இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியாகவோ குடும்ப மன்னராட்சியாகவோ கட்டுப்பாடற்ற குடியாட்சியாகவோ அது இருக்காது.

ஆட்சித் தலைவருக்கான இலக்கணம்

1. ஆட்சித் தலைவர் பருவமடைந்த இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கல்வி அறிவு, ஆட்சித் தகுதி, நிர்வாகத் திறமை, நேர்மை, உடல் ஆரோக்கியம் முதலான அம்சங்கள் உள்ளவராகவும் அவர் இருக்க வேண்டும்.

2. நீதியும் நேர்மையும் ஆட்சியாளரின் முதல்தரமான குணங்களில் அடங்கும்.

திருக்குர்ஆனில் இறைவன் ஆணையிடுகின்றான்:

உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றுக்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மக்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். (4:58)

பதவியும் நம்பி ஒப்படைக்கப்படும் ஒன்றுதான்; தீர்ப்புக்கு வேண்டிய நீதி ஆட்சிக்கும் பொருந்தும். ஒருவரோ ஒரு கூட்டமோ பிடிக்கவில்லை என்பதற்காக நீதி தவறிவிடக் கூடாது. இதனாலேயே மற்றொரு வசனத்தில்,

‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

3. சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான். (ஷாமிஉத் திர்மிதீ)

4. பகட்டும் படோடாபமும் ஆட்சிக்கு ஆபத்து. பதவி வரும்போதுதான் பணிவு வர வேண்டும்; எளிமை மிளிர வேண்டும். ஆட்சிக்கு மட்டும் அவர் தலைவர் அல்லர்; பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் தலைவராக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

5. தவறு சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை ஆட்சியாளர் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியிழைக்கும் அரசனிடம் உண்மை உரைப்பதுதான் சிறந்த அறப்போராகும். (நஸயீ, முஸ்னது அஹ்மத்)

அநீதியிழைக்கப்பட்ட ஒருவன், அதை உரக்கச் சொல்ல உரிமையுண்டு. அந்த அப்பாவி தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, குரல்வளையை நெறிப்பது சர்வாதிகாரமாகும்.

திருக்குர்ஆன் கூறுகிறது: அநீதியிழைக்கப்பட்டவர் தவிர வேறு யாரும் தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (4:148)

6. சட்டத்திற்குமுன் அனைவரையும் சமமாக நடத்துவது ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்பாகும். தெரிந்தவனுக்கு ஒரு நீதி; தெரியாதவனுக்கு ஒரு நீதி இருக்கலாகாது. எளியவனுக்கு முன்னால் விரைப்பாக நிற்கும் சட்டம், வலியவனின் கண்சாடைக்கே வளைந்து சாஷ்டாங்கமாக விழக்கூடாது.

‘‘நீங்கள் பேசினால் நியாயமே பேசுங்கள்; உறவினராக இருந்தாலும் சரி’’ (6:152) என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது இந்த இறையாணையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

‘‘என் அருமை மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவரது கரத்தையும் நான் துண்டிப்பேன்’’ என்ற நபிமொழி பிரபலமானது. (புகாரீ)

கடமையில் கண்ணும் கருத்தும்

7. ஆட்சியாளர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு இயலாதவர், அல்லது மனமில்லாதவர் ஆட்சிக் கட்டிலில் அமரவே கூடாது. மக்கள் நலனைப் புறக்கணிக்கும் ஆட்சியாளன் மாபெரும் பாவி ஆவான்.

‘‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’’ என்பது நபிமொழியாகும். (புகாரீ)

பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளனுக்கே இந்தக் கதி என்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொந்த வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல்வாதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்:

முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகின்றான். (புகாரீ)

8. எல்லாவற்றையும்விட, ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாகாது.

நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துர் ரஹ்மான்! ஆட்சிப் பொறுப்பை கேட்டுப்பெறாதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (இறை) உதவி கிடைக்கும்’’ என்று சொன்னார்கள். (முஸ்லிம்)

9. இந்த இலக்கணங்களும் உயர் பண்புகளும் ஆட்சியாளர்களிடம் அமைய வேண்டுமென்றால், அவர்களிடம் ‘இறையச்சம்’ (தக்வா), மறுமை நம்பிக்கை, நபிவழி (சுன்னத்) வாழ்க்கை ஆகியவை இருக்க வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களுக்கு இறைவனிடம் உயர் தகுதியும் பெரிய பதவியும் நிச்சயமாகக் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்:

இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமப்படுத்தினால், அவரை நீயும் சிரமப்படுத்துவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக! (முஸ்லிம்)

குடிமக்களின் பொறுப்பு

இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணத்தில், நல்ல குடிமக்களுக்கான இலக்கணமும் அடங்கும். 1. ஆரம்பமாக, அவர்கள் நல்ல ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். 2. அடுத்து நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; பாவத்தில் கட்டுப்படக் கூடாது.

3. சட்டத்தை -இஸ்லாமிய அரசியல் சாசனத்தை- முஸ்லிம் குடிமக்கள் மதித்து நடக்க வேண்டும். 4. பொது அமைதி, சட்ட ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது.

5. நாட்டின் வளர்ச்சிக்கும் பொது நன்மைக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

(நன்றி: பாக்கியாத் 150ஆம் ஆண்டு மலர்)

Thursday 16 January 2014

அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை!


சமுதாயத்தை சரி செய்வதற்கு எத்தனையோ தலைவர்கள் முளைத்தார்கள்; வீறுகொண்டு பேசினார்கள். சூடேற்றுகிற எழுத்துகளை பதித்தார்கள், பல்வேறு பதவிகளுக்கு பொறுப்பேற்றார்கள். தனக்குப் பின்னால் பெரும் மக்கள் வெள்ளத்தை வைத்திருந்தார்கள், விலையுயர்ந்த வாகனங்களிலும், ஆடைகளிலும் பவனி வந்தார்கள். தனது அத்துனை திறமைகளையும் பிரயோகித்து உலகில் மாற்றங்களையும் ஏற்படுத்தினார்கள். ஆனாலும் தோற்றுப் போனார்கள். எந்த சமூகத்தை வழிநடத்தினார்களோ அந்த சமூகமே அவர்களைத் தூக்கியெறிந்தது. காரணம், தன் சமூகத்தை அணுகும் முறைகளை சரியாக பேணவில்லை.  
இஸ்லாம் இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. இஸ்லாத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தான். அவர்களுடைய அணுகுமுறைதான் காரணம். உலகில் பெரும் பெரும் பணமுதலைகள் செய்யமுடியாத காரியத்தை மூவேளை உணவைகூட நிறைவாக சாப்பிட வழியில்லாத, தங்குவதற்கு நல்ல குடில் கிடைக்கப் பெறாத, "காசிம் நபியின் வீட்டில் வசிக்க காசுக்குத் தகுதியில்லை" என்ற வரிகளுக்குள் தன்வாழ்க்கையை வகைப் படுத்தி வாழ்ந்த சர்தாரே மதினா (ஸல்) அவர்கள் செய்து முடித்தார்கள். விளைவு; துரத்தியடித்த சமூகமே நபியை தூக்கிவைத்துக் கொண்டாடியது.

நபியின் அணுகுமுறைகளில் சில:

உதாரணம்1: ஒரு கிராமவாசி பள்ளியில் சிறுநீர் கழித்தார். சஹாபிகள் அவரைத் தடுக்க முற்பட்டபோது; நபியவர்கள், அவரிடம் நடந்து கொண்ட அணுகுமுறை தான் 300 நபர்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

உதாரணம்2: அப்துல்லாஹிப்னு உபை எனும் முனாஃபிக்கிற்கு தொழ வைத்தபோது சஹாபிகளில் பலரும் அதை விரும்பவில்லை.
நபி கூறினார்கள்:  والله اني كنت أرجو ان يسلم به ألف من قومه' நபியின் எண்ணம் போலவே ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.

உதாரணம்3: அபூ சுப்யான் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு பாதுகாப்பு. இஸ்லாத்தைப் பரம எதிரியாய் நினைத்த அபூசுப்யானுக்கு இந்த அணுகுமுறை பிடித்துப் போனது.  தான்மட்டுமல்ல! ஆயிரக்கணக்கான மக்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்.

நபியின் அணுகுமுறைக்கும் பிற மனிதர்களின் அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

உதாரணம்4: நம்மிடம் ஒருவர் வந்து ஹஜ்ஜுக்கு செல்கிறேன், துஆ செய்யுங்கள் என்றால் நம்முடைய சிந்தனை இப்படியிருக்கும்; இவனெல்லாம் ஹஜ்ஜுக்குப் போய் என்ன செய்யப் போறான். நேற்றுவரை குடியும், கூத்தியாளுமாய் இருந்தவன். அங்க போய் என்ன செய்யப் போறானோ! என்று நோகடிக்கிறவர்கள் நாம்.

உதாரணப் புருஷரின் வாழ்வில் : ஒருநாள் உமர் ரலி அவர்கள், நபியிடம் வந்து நான் உம்ரா செல்கிறேன் என்றபோது நபியவர்கள், உங்களது துஆவில் எங்களை மறந்து விடாதீர்கள் என்றார்கள். இந்த வார்த்தையால் உலகமே கிடைத்த சந்தோஷம் பெற்றேன் என்றார்கள் உமர்.
عن عمر بن الخطاب رضي الله عنه قال ك استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة فأذن لي وقال : " لا تنسنا يا أخي من دعائك " فقال كلمة ما يسرني أن لي بها الدنيا رواه أبو داود والترمذي

யாரை எப்படி அணுக வேண்டும், என்ற அறிவு பலபேருக்கு இருப்பதில்லை.இந்த அணுகுமுறை அறிவில்லாததால் தான் பல பிரச்சனைகள் உருவாகி விடுகிறது.

உதாரணம்5: நம்மைப் பற்றி ஒருவன் தவறாகப் பேசுகிறபோது, விட்டேனாப்பார் பேர்வழி என்று கிளம்பி விடுகிறோம். பிறகு நீதிமன்ற வழக்குவரைகூட போய்விடுகிறோம். திட்டியவனைப் பழிவாங்காமல் தீட்டுக் கழிப்பதில்லை என்று சபதம் எடுக்கிறோம். பிறகு தலைமுறை தாண்டிய பகையை வளர்த்துக் கொள்கிறோம்.

உதாரணப் புருஷரின் வாழ்வில்:
عن أبي هريرة رضي الله عنه - قال : قال رسول الله صلى الله عليه وسلم. ألا تعجبون كيف يصرف الله عني شتم قريش ولعنهم يشتمون مذمما ويلعنون مذمما وأنا محمد

நபியை مذمم என்று அசிங்கப் படுத்தியபோது கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் எனக்கு முஹம்மது என்று பெயர், அவர்கள் யாரையோ مذمم என்று சொல்கிறார்கள். என்பதுபோல இருந்தார்கள்.

அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறைகளைப் பற்றி, வாழும் பாக்கியத்தை படைத்தவன் அல்லாஹ் தந்தருள்வானாக! 
               மேலதிக தகவலுக்கு  இங்கே கிளிக் செய்யுங்கள்.








Wednesday 1 January 2014

முஹம்மது நபி (ஸல்) - பா.ராகவன்


யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. ரோமானியர்கள் ஆண்டாலும், கிரேக்கர்கள் ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் அதுவரை அவர்கள் வெறும் சுண்டைக்காயாகவே இருந்தார்கள். ஆள்பவர்கள் அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். யூதர்கள் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். கிறிஸ்துவர்களோ, மதம் மாற்றமுடியுமா என்கிற நோக்கில் மட்டுமே அவர்களைப் பார்ப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்!யூதமதமும் கிறிஸ்துவ மதமும் பண்பட்ட மதங்கள் என்றும், சிறு தெய்வ வழிபாடுகளில் மூழ்கியிருந்த அரேபியர்களின் நம்பிக்கைகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல என்றும் ஒரு கருத்து அங்கே ஆழமாக வேரூன்றியிருந்தது.அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள்.
அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.எழுச்சி என்றால், வெறும் சொல்லில் அடங்கிவிடக்கூடிய எழுச்சியல்ல அது. உலக சரித்திரத்தில் வேறு எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும் இன்றுவரையிலும் கூட அதற்கு நிகரான எழுச்சி நடந்ததில்லை. ஒட்டுமொத்த அரேபியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட எழுச்சி அது.அது கி.பி. 622-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, திங்கட்கிழமை. ஒரு மனிதர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தார்.அவ்வளவுதான். ஒட்டுமொத்த அரேபியர்களும் மதம் பெயர்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.
அவர் பெயர் முகம்மது. இயேசுவுக்குப் பிறகு இறைவன் அனுப்பியதாக நம்பப்படும் இறைத்தூதர் (நபி) இறுதித் தூதரும் அவரேதான்.
முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் - இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.
ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.
காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
பிறந்த சிலகாலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தவர் அவர். ஏழை வியாபாரியான அபூதாலிப் என்கிற தமது பெரியப்பாவின் அரவணைப்பில்தான் அவர் வளர்ந்தார்.இந்தப் பின்னணியை ஒரு காரணமாகக் கருதிவிட முடியாது என்றாலும், மிக இளம் வயதிலேயே கேளிக்கைகளையும் விளையாட்டுப் பேச்சுகளையும் அறவே தவிர்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார். இளம் வயதென்றால் பத்துப் பன்னிரண்டு வயதுகளிலேயே.
அபூதாலிப்பால் முகம்மதுவுக்குச் சரியான பள்ளிப்படிப்பைத் தர இயலவில்லை. அவரது ஏழைமை அதற்குப் பெரும் தடையாக இருந்தது. அன்றைய தினம் அரேபியாவின் பெரும்பான்மை மக்களின் நிலைமை இதுதான். வளமை என்பது மிகச்சிலருக்கே உரிய விஷயமாக இருந்திருக்கிறது. கல்வியும் அத்தகையவர்களுக்கே உரித்தானதாக இருந்திருக்கிறது. படிப்பில் ஈடுபடாத அரபுக் குழந்தைகள், இளம் வயதிலேயே முரட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், வாலிப வயதில் வாளேந்துவதும் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது.
முகம்மதுவின் வயதில் இருந்த அத்தனை பிள்ளைகளும் வீதியில் ஆடிப்பாடி, அடித்துப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், முகம்மது மட்டும் தனியே எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பவராக இருந்திருக்கிறார். அதைப் பார்த்து கேலி செய்யும் பிள்ளைகளிடம் "பிறவி எடுத்ததன் நோக்கம் இந்தக் கேளிக்கைகளில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று சொல்லக்கூடியவராக இருந்திருக்கிறார். அவரது தனிமை விரும்பும் சுபாவத்தையும், எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இயல்பையும் மிகச்சிறிய வயதிலிருந்தே மற்றவர்கள் கவனித்து வந்திருந்தாலும், அதை ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்தி அப்போதே யாரும் யோசித்ததில்லை.
அன்றைய அரேபியர்களின் இயல்புக்குச் சற்றும் நெருக்கமில்லாதது அது. அவர்கள் பக்திமான்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்ராஹிம் (ஆபிரஹாம்) நபி கட்டுவித்த "கஃபா" என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.ஆனால், இந்த பக்திப்பாதை, முகம்மதுவின் ஆன்மிகப் பாதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாததாக இருந்தது. துளியும் படிப்பறிவில்லாதவராக இருந்த முகம்மது, தமக்குள் ஒடுங்கி, அதன்மூலம் பெற்றிருந்த ஆன்மிகத் தேர்ச்சியை அநேகமாக யாராலுமே உணர இயலவில்லை.
ஆனால், அவர் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை இருந்தது. பண்பான இளைஞர், பக்தி மிக்க இளைஞர் என்கிற அளவில் ஏற்பட்டிருந்த மரியாதை. ஏழைகளுக்கு வலிந்து போய் உதவக்கூடியவராக இருக்கும் இளைஞர் என்பதால் உண்டாகியிருந்த மரியாதை.தாம் ஓர் இறைத்தூதர் என்பதை அவர் அறிவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்த மரியாதை அது. என்ன வித்தியாசம் என்றால், அரேபியர்களிடம் அன்று பக்தி உண்டே தவிர, "ஆன்மிகம்" என்பது அவர்களுக்கு அந்நியமானதொன்று. தமது குழுச் சண்டைகளுக்கும் இனப்போர்களுக்கும் கடவுளர்களைத் துணைநிற்கச் சொல்லி வேண்டுவார்களே தவிர, உள்ளார்ந்த அன்பை விதைத்து, சகோதரத்துவம் பயிரிடும் உத்தேசம் யாருக்கும் கிடையாது.இந்தக் காரணத்தினால்தான் அரேபியர்களிடையே சுலபமாக கிறிஸ்தவம் ஊடுருவ முடிந்தது. இதே காரணத்தினால்தான் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்தபடியாகவே அவர்கள் பொருட்படுத்தப்பட்டார்கள். இதனாலேயேதான் "காட்டரபிகள்" என்றும் அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்டதொரு இனத்தில்தான் முகம்மது பிறக்கிறார். ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம். ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.
ஒரு சம்பவம் நடந்தது. கடும் மழை. பெரிய வெள்ளம். மெக்கா நகரின் மத்தியில் இருந்த "கஃபா" ஆலயத்தின் புராதனமான சுவர்கள் வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டன. ஏற்கெனவே மிகவும் பழுதாகியிருந்த ஆலயம் அது. இடித்துவிட்டுப் புதுப்பிக்கலாம் என்று நினைத்த அரேபியர்களுக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. இறைவனின் ஆலயத்தை இடிப்பதன்மூலம் ஏதாவது அபவாதம் நேருமோ என்கிற பயம். ஆனால், அந்த வெள்ளத்தில், ஆலயத்தின் சுவர்கள் தாமாகவே இடிந்ததில் மிகவும் நிம்மதியடைந்தார்கள்.இனி பிரச்னையில்லை. இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டான்; ஆலயத்தை மீண்டும் திருத்தமாக எழுப்பிவிடலாம் என்று முடிவு செய்தார்கள். பல்வேறு இனக்குழுவினராகப் பிரிந்து இருந்த அரேபியர்கள் இந்த ஒரு விஷயத்தில் ஒன்றுசேர்ந்து, நிதி சேர்த்து, ஆலயப் புனரமைப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.ஆரம்பத்தில் எல்லாமே சிறப்பாகத்தான் இருந்தது. கட்டுமானப்பணி வேகமாகத்தான் நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டம் வந்தபோது, அவர்களின் இயல்பான முரட்டு சுபாவம் மேலோங்கி, அடித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
விஷயம் இதுதான். "கஃபா"வின் இடிக்கப்பட்டதொரு சுவரிலிருந்து, "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற கல் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். கொஞ்சம் விசேஷமான கல் போலிருக்கிறது. அதைத் திரும்பப் பதித்தாகவேண்டும். ஆனால் யார் பதிப்பது? எத்தனையோ இனக்குழுவினர் (கோத்திரத்தார் என்று அவர்களைக் குறிப்பிடுவது இஸ்லாமியர் வழக்கம்.) சேர்ந்துதான் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலைச் சேர்ந்து கட்டுவதும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் திரும்பப் பதிக்கும் பணியை மேற்கொள்வதும் ஒன்றல்ல. இது பெருமை சம்பந்தப்பட்டது. கௌரவம் தொடர்பானது.ஆகவே, நீயா நானா போட்டி எழுந்துவிட்டது. எந்தக் கணமும் மோதல் யுத்தமாகி, ரத்தம் பெருகலாம் என்கிற நிலைமை. முன்னதாக, இதேபோல் எத்தனையோ பல உப்புப்பெறாத காரணங்களுக்காக வாளேந்தித் தலைசீவியவர்களே அவர்கள். சமாதானமல்ல; சண்டையே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஒரு சிறு வாய்ப்புக்கிடைத்தாலும் அடித்துக்கொண்டு மடிவதற்கு அத்தனை பேருமே தயாராக இருந்தார்கள்.
இவர்களின் இத்தகைய இயல்பையும், "கஃபா" மறுகட்டுமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையையும் நன்கறிந்த மெக்கா நகரப் பெரியவர்களுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது ரத்த நதி பெருகுவதைத் தடுத்தாகவேண்டும் என்று நினைத்தார்கள். எத்தனையோ விதமாகக் குரைஷிகளிடம் (மெக்காவில் வசித்துவந்த அரேபியர்கள் இவர்கள்தாம்.) பேசிப்பார்த்தார்கள்.ஆனால் எதற்கும் பலனில்லை. யாரும் உரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள். யுத்தம் செய்வோம். வெற்றி பெறுபவர்கள் அந்தப் புனிதக் கல்லைத் திரும்பப் பதிக்கும் பரிசினைப் பெறுவார்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.கட்டக்கடைசி முயற்சியாக ஒரு முதியவர், தன் பங்குக்கு ஒரு யோசனையை முன்வைத்தார். யுத்தத்தை ஒருநாள் ஒத்திப்போடலாம். யாராவது ஒருவர் சொல்லும் யோசனைக்காவது கொஞ்சம் செவிசாய்க்கலாம்.ஆனால், யார் அந்த ஒருவர்?அன்றைய பொழுது மறைந்து, மறுநாள் காலை விடியும்போது யார் முதலில் "கஃபா"வுக்குள் வணங்குவதற்காகச் செல்கிறாரோ, அவர்தான். யாராயிருந்தாலும் சரி. அந்த முதல் வணக்கம் செலுத்தப் போகிறவரிடம் பிரச்னையைக் கொண்டுசெல்வது. அவர் சொல்லும் யோசனை எதுவானாலும் கேட்டு, அதன்படி செயல்படுவது.அதுசரி. அவர் என்ன யோசனை சொல்லவேண்டும்? சண்டைக்குத் தயாராக இருக்கும் இனக்குழுவினரிடையே, யார் அந்தக் கல்லைப் பதிக்கலாம் என்று மட்டுமே அவர் சொல்லலாம். அவர் குறிப்பிடும் குழுவினர் கல்லைப் பதிப்பார்கள். மற்றவர்கள் ஒத்துழைக்கவேண்டும்.ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் இரு தரப்பினருமே அன்றைய இரவு முழுவதும் "கஃபா"வின் வெளியே காத்திருந்தார்கள்.
மறுநாள் பொழுது இன்னும் விடியக்கூட இல்லை. இருள் பிரியாத அந்நேரத்தில் ஓர் உருவம் அமைதியாக "கஃபா"வுக்குத் தொழச் சென்றது. அவர்தான், அவர்தான் என்று அனைவரின் உதடுகளும் முணுமுணுத்தன.தொழுது முடித்து அவர் திரும்பியபோது அத்தனை பேரும் மொத்தமாக எதிரே வந்து நின்று யாரென்று உற்றுப்பார்த்தார்கள்.முகம்மதுதான் அவர். அப்போது அவருக்கு இருபத்துமூன்று வயது. ஆணழகராகவும் அறிவில் சிறந்தவராகவும் அமைதிவிரும்பியாகவும் ஒட்டுமொத்த மெக்காவுக்கும் அவர் அப்போது நன்கு அறிமுகமாகியிருந்தார். முன்பே சொன்னதுபோல், அவரிடம் அனைவருக்குமே அன்பும் மரியாதையும் மேலோங்கியிருந்தது.ஆகவே, ஒரு சரியான நபர்தான் ஆலயத்துள் முதல் நபராகச் சென்றிருக்கிறார், இவரிடம் நமது பிரச்னையைச் சொல்லித் தீர்வு கேட்கலாம் என்று நம்பிக்கையுடன் அவரை அணுகிப் பேசத் தொடங்கினார்கள்.
முகம்மது பொறுமையாகக் கேட்டார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்?இரு தரப்பினர் இருக்கிறோம். "ஹஜ்ருல் அஸ்வத்" என்கிற கல்லை யார் "கஃபா"வின் சுவரில் பதிக்கவேண்டும்? முகம்மதுதான் சொல்லவேண்டும்.முகம்மது புன்னகை செய்தார். இரண்டடி நகர்ந்து, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துத் தரையில் விரித்தார். அந்தக் கல்லைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.கல் வந்தது. அதைத் துண்டின் நடுவே வைக்கச் சொன்னார். வைத்தார்கள். அவ்வளவுதான். இனி ஆளுக்கொரு புறம் துண்டின் நுனியைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டார்கள். அப்படியே எடுத்துப் போய்ப் பொருத்தி, பூசிவிடுங்கள் என்றார்.
நன்கு கவனிக்கவேண்டிய இடம் இது. முகம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள்தான் புதைந்திருக்கிறது. அரேபியர்களிடையே ஒற்றுமை என்கிற அவரது பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இதுதான். அவர் ஒரு நபி என்று அறியப்படுவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த சம்பவம் இது.நாற்பது, நானூறல்ல; நாலாயிரம் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த அரேபியர்களை ஒரு மேல்துண்டின் நான்கு முனைகளை ஒற்றுமையுடன் பிடிக்க வைத்ததன்மூலம் மாபெரும் யுத்தமொன்றைத் தவிர்த்தாரே, அது. அதுதான் ஆரம்பம்.முகம்மது என்றொருவர் உதிக்காமலே போயிருந்தால் அரேபியர்களுக்கு சரித்திரம் என்று ஒன்று இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.