Thursday 16 January 2014

அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை!


சமுதாயத்தை சரி செய்வதற்கு எத்தனையோ தலைவர்கள் முளைத்தார்கள்; வீறுகொண்டு பேசினார்கள். சூடேற்றுகிற எழுத்துகளை பதித்தார்கள், பல்வேறு பதவிகளுக்கு பொறுப்பேற்றார்கள். தனக்குப் பின்னால் பெரும் மக்கள் வெள்ளத்தை வைத்திருந்தார்கள், விலையுயர்ந்த வாகனங்களிலும், ஆடைகளிலும் பவனி வந்தார்கள். தனது அத்துனை திறமைகளையும் பிரயோகித்து உலகில் மாற்றங்களையும் ஏற்படுத்தினார்கள். ஆனாலும் தோற்றுப் போனார்கள். எந்த சமூகத்தை வழிநடத்தினார்களோ அந்த சமூகமே அவர்களைத் தூக்கியெறிந்தது. காரணம், தன் சமூகத்தை அணுகும் முறைகளை சரியாக பேணவில்லை.  
இஸ்லாம் இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. இஸ்லாத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தான். அவர்களுடைய அணுகுமுறைதான் காரணம். உலகில் பெரும் பெரும் பணமுதலைகள் செய்யமுடியாத காரியத்தை மூவேளை உணவைகூட நிறைவாக சாப்பிட வழியில்லாத, தங்குவதற்கு நல்ல குடில் கிடைக்கப் பெறாத, "காசிம் நபியின் வீட்டில் வசிக்க காசுக்குத் தகுதியில்லை" என்ற வரிகளுக்குள் தன்வாழ்க்கையை வகைப் படுத்தி வாழ்ந்த சர்தாரே மதினா (ஸல்) அவர்கள் செய்து முடித்தார்கள். விளைவு; துரத்தியடித்த சமூகமே நபியை தூக்கிவைத்துக் கொண்டாடியது.

நபியின் அணுகுமுறைகளில் சில:

உதாரணம்1: ஒரு கிராமவாசி பள்ளியில் சிறுநீர் கழித்தார். சஹாபிகள் அவரைத் தடுக்க முற்பட்டபோது; நபியவர்கள், அவரிடம் நடந்து கொண்ட அணுகுமுறை தான் 300 நபர்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

உதாரணம்2: அப்துல்லாஹிப்னு உபை எனும் முனாஃபிக்கிற்கு தொழ வைத்தபோது சஹாபிகளில் பலரும் அதை விரும்பவில்லை.
நபி கூறினார்கள்:  والله اني كنت أرجو ان يسلم به ألف من قومه' நபியின் எண்ணம் போலவே ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.

உதாரணம்3: அபூ சுப்யான் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு பாதுகாப்பு. இஸ்லாத்தைப் பரம எதிரியாய் நினைத்த அபூசுப்யானுக்கு இந்த அணுகுமுறை பிடித்துப் போனது.  தான்மட்டுமல்ல! ஆயிரக்கணக்கான மக்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்.

நபியின் அணுகுமுறைக்கும் பிற மனிதர்களின் அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

உதாரணம்4: நம்மிடம் ஒருவர் வந்து ஹஜ்ஜுக்கு செல்கிறேன், துஆ செய்யுங்கள் என்றால் நம்முடைய சிந்தனை இப்படியிருக்கும்; இவனெல்லாம் ஹஜ்ஜுக்குப் போய் என்ன செய்யப் போறான். நேற்றுவரை குடியும், கூத்தியாளுமாய் இருந்தவன். அங்க போய் என்ன செய்யப் போறானோ! என்று நோகடிக்கிறவர்கள் நாம்.

உதாரணப் புருஷரின் வாழ்வில் : ஒருநாள் உமர் ரலி அவர்கள், நபியிடம் வந்து நான் உம்ரா செல்கிறேன் என்றபோது நபியவர்கள், உங்களது துஆவில் எங்களை மறந்து விடாதீர்கள் என்றார்கள். இந்த வார்த்தையால் உலகமே கிடைத்த சந்தோஷம் பெற்றேன் என்றார்கள் உமர்.
عن عمر بن الخطاب رضي الله عنه قال ك استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة فأذن لي وقال : " لا تنسنا يا أخي من دعائك " فقال كلمة ما يسرني أن لي بها الدنيا رواه أبو داود والترمذي

யாரை எப்படி அணுக வேண்டும், என்ற அறிவு பலபேருக்கு இருப்பதில்லை.இந்த அணுகுமுறை அறிவில்லாததால் தான் பல பிரச்சனைகள் உருவாகி விடுகிறது.

உதாரணம்5: நம்மைப் பற்றி ஒருவன் தவறாகப் பேசுகிறபோது, விட்டேனாப்பார் பேர்வழி என்று கிளம்பி விடுகிறோம். பிறகு நீதிமன்ற வழக்குவரைகூட போய்விடுகிறோம். திட்டியவனைப் பழிவாங்காமல் தீட்டுக் கழிப்பதில்லை என்று சபதம் எடுக்கிறோம். பிறகு தலைமுறை தாண்டிய பகையை வளர்த்துக் கொள்கிறோம்.

உதாரணப் புருஷரின் வாழ்வில்:
عن أبي هريرة رضي الله عنه - قال : قال رسول الله صلى الله عليه وسلم. ألا تعجبون كيف يصرف الله عني شتم قريش ولعنهم يشتمون مذمما ويلعنون مذمما وأنا محمد

நபியை مذمم என்று அசிங்கப் படுத்தியபோது கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் எனக்கு முஹம்மது என்று பெயர், அவர்கள் யாரையோ مذمم என்று சொல்கிறார்கள். என்பதுபோல இருந்தார்கள்.

அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறைகளைப் பற்றி, வாழும் பாக்கியத்தை படைத்தவன் அல்லாஹ் தந்தருள்வானாக! 
               மேலதிக தகவலுக்கு  இங்கே கிளிக் செய்யுங்கள்.








No comments:

Post a Comment