Thursday 2 April 2015

ஈட்டிமுனை என்றாலும், ஈமானுக்காக ஷஹீதாகுவோம்!

  

இந்த உலகம் ஒரு மாயை, பிம்பம். இங்கு எதுவும் நிரந்தரமில்லை.
தூக்கம், துக்கம், எதுவும் நிரந்தரமில்லை.
வாலிபம், வயோதிகம் எதுவும் நிரந்தரமில்லை.
இன்பம், இவ்வுலக வாழ்க்கை எதுவும் நிரந்தரமில்லை.
மறுமையில் எல்லாம் நிரந்தரம். எதுவும் பொய்யில்லை.
ஆரோக்கியம் நிரந்தரம்; நோய் எப்போதும் இல்லை.
வாலிபம் நிரந்தரம்; வயோதிகம் எப்போதும் இல்லை.
இன்பம் நிரந்தரம்; துன்பம் எப்போதும் இல்லை.
வாழ்க்கை மட்டும்தான்; மரணம் இல்லவேயில்லை.

ஆம்! اخرت நிரந்தரம்; துன்யா நம்மை மறந்திடும். இந்த சிந்தனை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும், அதற்கு பலமான ஈமான் வேண்டும்.
பலமான  ஈமான், நாயகத் தோழர்களை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது.

1. அடுத்தவனின் ஒட்டகம், தன்வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக மனிதனின் ரத்தம் குடிப்பதை, மரபாக்கி வைத்திருந்த மக்களை ஈமானிய உணர்வு, இப்படி மாற்றியமைத்தது,
யர்மூக் யுத்தத்தில், தனக்கு கொண்டுவந்த தண்ணீரைக் கூட, எனக்கு வேண்டாம், என் தோழருக்கு கொடுங்கள் என்றார்கள்

2. மஸ்ஜிதுன் நபவியில் கைதிகள் கட்டப்பட்டிருப்பார்கள். வீட்டிலிருந்து ரொட்டி கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுத்து விட்டு வெறும் பேரித்தம்பழங்களை சஹாபிகள் சாப்பிடுவார்கள்.

இந்த ஈமானிய உறுதி, ஒருபோதும் சஹாபிகளுக்கு இந்த உலகத்தின் மீதான ஆசையை ஏற்படுத்தவில்லை. எவ்வளவோ சிரமங்களை சகித்தபோதும் நபியும், தோழர்களும் இந்த உலகம் வேண்டுமென்று இறைவனிடம் எப்போதும் கேட்டதில்லை.

1.مصعب بن عمير   பெரும் பணக்கார சஹாபி, இஸ்லாமானதற்குப் பிறகு உடுத்த துணியில்லாத நிலை. அவரின் மரணத்தில் நபி, அழுதே விட்டார்கள். வாழும் காலத்தில் அவருக்கு வளம் வேண்டுமென்று அவரும் நபியிடம் கேட்டதில்லை. என் தோழர்களுக்கு உலகச் செல்வங்கள் வேண்டுமென்று நபியும் இறைவனிடம் கேட்டதில்லை.

2. தொழுகையில் நிற்கும் சஹாபிகள், பசியால் கீழே விழுந்துவிடுவார்கள், அந்த நேரத்தில் கூட நபி உணவுக்காக அல்லாஹ்விடம் கேட்டதில்லை.


3.  நபியின் சபையில், ஏறத்தாழ எழுபது சஹாபிகள், உடுத்துவதற்கு சரியான துணியில்லாமல் தங்கள் மறைவிடங்களை மறைப்பதற்கு ஒருவர் பின் ஒருவராக நெருக்கமாக அமைந்திருப்பார்கள். இந்த நேரத்திலும் அல்லாஹ்விடம் உலகம் வேண்டி நபி கையேந்தவில்லை.

4. பத்துக்கு எட்டு சதுரஅடி வீட்டில் வாழ்ந்த நபி, விசாலமான வீடு வேண்டுமென்று கூட விரும்பியதில்லை. ஏனென்றால், அழிந்துபோகும் அறுபது, எழுபது வருட வாழ்கைக்காக ஏன் துஆவை வீணாக்க வேண்டும். அழியா மறுஉலக வாழ்க்கைக்கு கேட்கலாமே. என்று நபி இருந்துவிட்டார்கள்.

5.عدي بن حاتم  என்பவர், கிருஸ்துவ மதத்தில் இருந்தார். அவருக்கு நபியவர்கள், இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச்சொன்னாரகள். எல்லாவற்றையும் நன்கு கேட்டாலும் சஹாபிகளின் ஏழ்மைக் கோலத்தைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், நாமும் இப்படி ஆகிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தவே, நபி கூறினார்கள், தோழரே! இந்த ஏழ்மைக் கோலம் என் தோழர்களுக்கு நிரந்தரமில்லை. ஒரு காலம் வரும். அப்போது கீழ்காணும் மூன்று நிகழ்வுகள் ஏற்படும்.
1.       கிஸ்ராவின் கிரீடம் முஸ்லிம்களின் காலுக்கடியில் வரும்.
2.       எமன் தேசத்திலிருந்து ஒரு பெண், தனியே மக்கா வந்து பாதுகாப்பாக ஹஜ் செய்துவிட்டு போவாள்.   
3.       ஜகாத் பொருட்களை வாங்கும் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.

கிஸ்ரா வெற்றிகொள்ளப்பட்டு, அவர்களின் விலையுயர்ந்த போர்வை ஒன்று கொண்டுவரப்பட்டது, அந்தப் போர்வையை பத்திரப்படுத்தலாம் என்று கருத்துச்சொல்லபட்டது. அவர்களின் இந்த போர்வையால் நமக்கு வேதனைதான் இறங்கும். எனவே இதை துண்டுதுண்டாக வெட்டி எல்லோருக்கும் கொடுக்கலாம். என்ற அலி (ரலி) ன் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரித்தும் கொடுக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஒன்றரைரை அடி போர்வைத்துண்டை ஒருவர் இரண்டாயிரம் திர்ஹத்திற்கு விற்றார்.

உமரின் காலத்தில் ஒருபெண் தனியே ஹஜ் செய்து திரும்பினாள். அவளிடம் வழியில் எவ்வித அசம்பாவிதமும் நடக்க வில்லையா! என்றபோது, வழிநெடுகிலும் நான் கண்ட ஆண்கள் அனைவரும்  என் உடன்பிறந்த சகோதரர்கள் போன்றும் எனது தந்தை போன்றும் நடந்து கொண்டார்கள். என்னிடம் யாரும் தவறாக நடக்கவில்லை என்றாள்.

பிறகு இஸ்லாத்திற்கு வந்த عدي بن حاتم அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் கூறிய இரண்டு நிகழ்வையும் நான் பார்த்து விட்டேன்.  மூன்றாவதும் நிகழும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார்கள்.

நபியவர்கள் தான் உலகை, உலகச்செல்வங்க்களை அல்லஹ்விடம் கேட்கவில்லை என்றால் அவர்தம் தோழர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
6.  ஒருசமயம் அன்சாரிகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, மழைவேண்டி நபியிடம் செல்லலாம் என்று நபியிடம் வந்தபோது நபியவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு அன்சாரிகளை வரவேற்று, இன்று நான் நல்ல சந்தோஷத்தில் இருக்கிறேன். இன்று நான் எதைக் கேட்டாலும் எனக்கு அல்லாஹ் தருவான். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். நான் தருவேன் என்றார்கள். வந்த அன்சாரிகளோ, இந்த நேரத்தில் தண்ணீர் வேண்டுமென்று உலகாதாயத்தைக்  கேட்பதைவிட பாவமன்னிப்பு வேண்டுமென்று கேட்கலாம். என்று முடிவெடுத்து சொன்னபோது காருண்ய நபி உதித்த வார்த்தைகள் இவை.
اللهم إغفر للأنصار ولابناء الأنصارو لابناءأبناء الأنصار ............    என்ற துஆவை ஓதினார்கள்.

மறுமையின் வாழ்வை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த நாயகத்தோழர்கள், கணவன், மனைவியை, பெற்றவர்கள், பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றவர்களை, சகோதரன், சகோதரனை மறுமைக்காக இழக்க தயாரானார்கள், ஆம்! அழியும் உலகில் எல்லாம் மாயை! அழியாத உலகில் ஒன்று சேர்ந்து வாழ்வோம் நாளை. என்ற சிந்தனையோடு வாழ்ந்தார்கள்.

கணவன், மனைவியை:
பேரித்தம்பழத்தை தூக்கி எரிந்து விட்டு போருக்குச்சென்ற புது மாப்பிள்ளை.

பெற்றவர்கள், பிள்ளைகளை:
நூறு வயதை தாண்டிய அஸ்மா (ரலி) தன்மகன் அப்துல்லாஹிப்னு ஜுபைரை போருக்கு அனுப்பும்போது சொன்ன வார்த்தைகள், 
عش كريما، و مت كريما، ولا يأخذ ك القوم أسيرأ    நீயும் நானும் சொர்கத்தில் சந்திப்போம், போய் வா மகனே! ன்று வழியனுப்பிய வீரத்தாயின் வரலாறு என்றும் மறையாது.

சகோதரன், சகோதரனை:
உமரிப்னு கத்தாபும் ஜைதிப்னு கத்தாபும் சகோதரர்கள். யுத்தம் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. கவசம் ஒன்றுதான் இருந்தது, உமர் அவர்கள் தன் சகோதரரிடம் கவசத்தை நீ அணிந்துகொள்! நான் ஷஹீதாகிறேன் என்றார்கள். ஜைதும் அதே வார்த்தையை உமரைப் பார்த்து கூறினார்.
  
பிள்ளைகள் பெற்றவர்களை:
أبو بشير  என்றொரு சஹாபி, போருக்குச்செல்ல நபியிடம் அனுமதி கேட்டு நின்றபோது, அபூ பஷீரே! உங்களுக்கு عقربة என்றொரு மகன் இருக்கிறான். அவனுக்கு தாயும் இல்லை. அதுவும் சிறுபிராயத்தில் இருக்கிறான். நீங்கள் போருக்குப் போய்விட்டால் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாழாகிவிடும். எனவே! நீங்கள் பிள்ளையை பாருங்கள். என்றார்கள்.
இல்லை நாயகமே! என் பிள்ளை மதினாவின் சிறார்களோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிடுவான். அப்படியே வளர்ந்தும் விடுவான். ஜிஹாதின் சந்தர்பம் என்பது இன்னொருமுறை எனக்கு கிடைக்காது. என்று கூறி நபியிடம் ஆனுமதியும் பெற்று யுத்தம் சென்றுவிட்டார்.

யுத்தம் முடிந்து திரும்புகையில் அவரவர் பிள்ளைகள் தங்களது உறவுகளைத் தேடிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். தனியே ஒரு சிறுவன், நபியவர்களின் கரம் பற்றி, நாயகமே! எல்லோரும் தத்தமது உறவுகளோடு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே தாயில்லாதவன். இப்போது என் தந்தையும் காணவில்லையே என்றபோது, காத்தமுன்நபி அந்தப் பிஞ்சின் கரம் பிடித்து, கட்டியணைத்து, மகனே! உன் தந்தை போரில் ஷஹீதாகிவிட்டாரப்பா.
أما ترضى أن أكون أنا أبك و عايشة أمك என்றார்கள்.



இந்த ஈமானிய ஷஹாதத்துதான் இன்று 210 கோடி முஸ்லிம்களை தலைநிமிர்த்தி வாழ வைத்திருக்கிறது. உலகாதாயத்திற்காக தங்களுடைய ஈமானை விலைபேசி விற்றுவிடுகிற இஸ்லாமிய சமூகம், தங்களுடைய இறைநம்பிக்கையை பலப்படுத்த முயற்சிக்க வேண்டும். இனி வரும்காலங்களில் ஈட்டி முனை என்றாலும் ஈமானுக்காக மட்டுமே ஷஹீதாக வேண்டும். அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.    

No comments:

Post a Comment