Monday 25 March 2013

மௌலவிகளே! வருக! வளர்க!


என் இதயக்கனிகளே! உங்களை வரவேற்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஓங்கி உயர்ந்து வளர வேண்டுமென பேறுவகையோடு வாழ்த்தி துஆ செய்கிறேன். அதற்காக நீங்கள் உழைககவும்,என்னுடன் ஒத்துழைக்கவும் வேண்டுமென விரும்புகிறேன். மலரும் நிமிடமெல்லாம் நீங்கள் வளரும் ஆய்வாளர்களாக ஆக வேண்டும். கல்வியும், ஞானமும் தேடாமல் வருவதுமில்லை. அல்லாஹ் கேட்காமல் கொடுப்பதுமில்லை. கேட்டதின் அளவு கிடைக்கும். விரும்பாதவர்களை விட்டு விலகிச் சென்று விடும். மூளையின் மூலை மழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'சுயம்' என்பதே அதன் சாணை. ஆம், சுயமாகத் தேடுதல்- சுய அறிவு-சுய சிந்தனை-சுய மரியாதை இப்படி அனந்தமனந்தம் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களால் உயரவும் முடியும். இறுதி மூச்சு வரை இறைவன் உதவியோடு சொந்தக் கால்களில் மானம் மரியாதையோடு உறுதியாக நிற்கவும் முடியும். உண்மைக் கல்வி இந்த உரத்தைக் கொடுக்கும். ஏனெனில், அது உண்னமயான அல்லாஹ்விடமிருந்து வருகிறது. அனைத்துக் கல்வியையும் அல்லாஹ்வோடு, அவனது கலாமோடு, அவனது ரசூலோடு சம்பத்தப் படுத்துங்கள். நீங்கள் ஈருலக சாதனையாளராவீர்கள். சமுதாயம் தேடுங்கள்; ஆதாயம் தேடாதீர்கள். இறைப் பொருத்தம் தேடுங்கள்; இந்த உலகம் தேடாதீர்கள். மேல் கையாக இருக்க முயலுங்கள்; கீழ்க் கையாகாதீர்கள். அறிவைக் கொடுங்கள்; அறியாமையை அகற்றுங்கள். மக்கள் மனதில் குடியிருங்கள்; அவர்கள் பணத்தில் மனதை பறிகொடுத்து விடாதீர்கள். இவை அனைத்திலும் மூலதனம் கல்வியே. கல்விக்கு முன்னால் பணியாத பணமுமில்லை- மனமுமில்லை. 'சுயம்' என்பதை தாரக மந்திரமாக்கி இரவு-பகல் இதிலேயே லயித்து விடுங்கள். தெருவில் அலைபவைகள் அலையட்டும். உங்கள் மனதை அதனோடு தொலைத்து விடாதீர்கள். மனதைக் கல்விக் கயிற்றால் அமலின் அடிமரத்தில் கட்டிப் போடுங்கள். பிறகு நீங்கள் வந்நவர்கள் மட்டுமல்ல- வளர்ந்தவர்களாகி விடுவீர்கள்! எனவேதான் உங்களுக்கு யூஸூபிய்யாவின் குரலில் அழைப்புக் கொடுக்கிறேன்! மௌலவிகளே! வருக! வளர்க! அல்லாமா,அ.க. கீரனூரி(ரஹ்) த ங்களது மாணவச் செல்வங்களுக்கு போதித்தது

No comments:

Post a Comment