Wednesday 22 May 2013

ஏமாற்றும் உலகம்..!


 இந்த உலகைப் படைத்தவன் அல்லாஹ்! இந்த உலகின் உண்மை நிலைகளை அறிந்தவன் அல்லாஹ்! வானம் பூமி, சூரியன், சந்திரன், சமுத்திரம், மலை, பிரபஞ்சமென்று எல்லாவற்றையும் படைத்து இந்த உலகம் ஒரு ஏமாற்றும் உலகம். யாரும் இதை நிரந்தரமாய் தேடவேண்டாம் என்கிறான்.
ஒரு பொருளை உற்பத்தி செய்தவனே இந்த பொருளை வாங்க வேண்டாம் என்றால் அறிவுள்ள யாரும் அந்த பொருளை வாங்கமாட்டார்கள். இறைவன் இந்த உலகை அறிமுகப் படுத்தும் போதே  متاع الغرور  என்றுதான் அறிமுகப் படுத்துகிறான். நபியவரகள் கூட      الدنيا لا تزن عند الله جناح بعوضة .. என்றார்கள். 
இந்த உலகின் தங்கம்,வெள்ளிக்கு நாம் தரும் மதிப்பில் துளியளவுகூட அல்லாஹ்விடம் இல்லை.
                                                                               
  وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فَضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُون وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ 
இறைமறுப்பாளர்களின் வீட்டு  முகடுகளை வெள்ளியாக்கியிருப்பேன். நீங்களும் அதன் மீது ஆசைப்பட ஆரம்பித்து இறை மறுப்பாளர்களாகி விடுவீர்கள். என்ற கருத்துப் பட அல்லாஹ் سورة الزخرف ٣٣-٣٤ ஆயத்தில் குறிப்பிடுகிறான்.
மாநபி (ஸல்) ஒருமுறை இப்படியும் கூறினார்கள்:      الدنيا جيفة وطلابها كلاب                                                           
உலகில் மாமிசம் சாப்பிடும் பிராணிகள் நிறைய உண்டு. குறிப்பாக காக்கைக்கு  கூட ஒப்பிடாமல் நாயிற்கு இந்த உலகத்தை ஒப்பாக்கியதன் உள்ளர்த்தம் என்ன என்பதை ஞானிகள் இப்படி விளக்கம் தருகிறார்கள்.

1. காகத்திற்கு மாமிசம் கிடைத்தால் அது தன் கூட்டத்தை அழைத்து கூடி சாப்பிடும், ஆனால் நாய் அப்படியில்லை. தான் மட்டும் சாப்பிட வேண்டுமென்று நினைக்கும். மனிதனும் அப்படித்தான். தானே எல்லாவற்றையும் சுருட்ட வேண்டும் என்று நினைப்பான்.
2. காக்கா தன் இனத்தைச் சாப்பிடாது. நாய் தன் இனத்தைச் சாப்பிடும். மனிதன் தன் சொந்த பந்தங்களைக் கூட அடித்துச் சாப்பிடுகிறான்.
3. ஒரு காக்கா இறந்து விட்டால் அந்த இடத்திற்கு மறுபடியும் வேறு காக்கா செல்லாது, ஆனால் நாய் அப்படியில்லை. ஒரு நாய் இறந்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு நாய் வந்து நாட்டாமை செய்ய ஆரம்பிக்கும். மனிதனும் அப்படியே! "அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும்" என்ற பழமொழி போன்று.
4. காக்கா பகலில் மாமிசம் சாப்பிட்டாலும் இரவில் கூட்டுக்குப் போய்விடும். நாய் அப்படியில்லை. பகலில் மாமிசம் சாப்பிடும், இரவில் அந்த மாமிசத்திற்கு காவல் காக்கும். மனிதனும் அப்படியே! பகலில் கடைக்குள் அவனிருக்கிறான், இரவில் கடை அவனுக்குள் இருக்கிறது.
5. காகம் வெறும் கறியை மட்டும் சாப்பிடும், எலும்பை விட்டுவிடும். நாய் எலும்பையும் சேர்த்துச் சாப்பிடும். மனிதனும் அப்படித்தான். வட்டி,லஞ்சம் போன்றவைகளில் தன் பணத்தையும் வசூல் செய்கிறான், பிறர் பணத்தையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். இப்பொழுது சொல்லுங்கள்! நபியவர்கள் எவ்வளவு பெரிய தத்துவத்தை கூறியுள்ளார்கள்.

ஆக இந்த உலகம் பொய்!  இந்த உலகிலுள்ள அழகும் பொய், அசிங்கமும் பொய். வெள்ளையும் பொய், கருப்பும் பொய். அதிகாரம் பொய், அரசபதவிகள் பொய். வெள்ளையாய் இருப்பவர்கள் சொர்க்கத்திற்கும், கருப்பாய் இருப்பவர்கள் நரகத்திற்கும் சொந்தமானவர் களில்லை.
மனித வாழ்வை   அல்லாஹ் மிகத் தெளிவாக நிர்ணயம் செய்து இருக்கிறான்.
                                                                             نحن قسمنا بينهم معيشتهم
சம்பவம் 1. ஒரு நீக்ரோ சஹாபி நபியைப் பார்த்து சொன்னார், நான் எவ்வளவு கருப்பாக இருக்கிறேன், நீங்கள் எவ்வளவு அழகாகவும், வெண்மையாகவும் இருக்கிறீர்கள். நபி கூறினார்கள்: ஆயிரம் ஆண்டுகள் நடந்தால் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்  உங்கள் முகம் நாளை மறுமையில் பிரகாசமாக இருக்கும் என்றார்கள். உடனே அந்த சஹாபி கேட்டார். நபியே! நான் சொர்க்கம் செல்வேனா! என்றார். நபி ஆம்! என்றார்கள். அங்கேயே அந்த சஹாபியின் உயிர் பிரிந்து விட்டது. நபியவர்கள் தங்களது கையால் அவரை அடக்கம் செய்தார்கள். கருப்பென்பதால் இந்த சஹாபி நரகவாதியில்லையே!

சம்பவம் 2. பிலால் இப்னு ரபாஹ் (ரலி)  இவரும் ஒரு நீக்ரோ சஹாபி. கஃபாவின் மீதேறி பாங்கு சொன்னவர்கள். மஸ்ஜிதுன் நபவியின் தலைமை முஅத்தினாக பணிபுரிந்தவர்கள். முஅத்தின் என்றால் ஆடு,மாடு,கோழி போன்றதை அறுக்கவும், ஜனாஸாவிற்கு அடிகழுவதும் தான் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. நபி (ஸல்) கூறினார்கள்:  இக்லாஸான முறையில் பாங்கு சொல்பவரை கப்ரில் புழு பூச்சிகள் தீண்டாது, மறுமையில் முத்து மேடையில் இருப்பார்கள்   என்றார்கள்.

ضحّاك رح கூறுகிறார்கள்: ( عبد الله بن زيد (رضي எப்பொழுது பாங்கு சொல்லும் முறையை கனவில் பார்த்து சொன்னார்களோ பிறகு நபியவர்கள் பிலாலை பாங்கு சொல்ல பணித்தார்கள். பிலால் பாங்கு சொன்னபோது கடுமையான சப்தமொன்று கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்ட நபியவர்க்ள் இப்படிச் சொன்னார்கள். பிலாலின் சப்தத்தால் அர்ஷ்வரை உள்ள கதவுகள் திறக்கப் பட்டன.  அந்த சப்தத்தை தான் இப்போது நீங்கள் கேட்டீர்கள் என்றார்கள். கருப்பானவர் என்பதால் அல்லாஹ்விடம் அந்தஸ்த்தில் குறைந்தவராகி விட்டாரா?
அது மட்டுமா!  முதன் முதலாக நபியவர்கள் சுவனம் செல்லும் போது நபியின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்தவராக சுவனம் செல்பவர் இந்த பிலால். அடிமையென்பதால் இந்த சஹாபி நரகவாதியில்லையே!

சம்பவம் 3. முற்காலததில் பெண் பார்ப்பவர்கள் ஐந்து விஷயங்களை கவனிப்பார்கள். 1. அழகானவளா? 2.பணவசதி எப்படி? 3. பரம்பரை எப்படி?           4. பிள்ளைப் பேறு பெறுவாளா? 5. அடிமையா? சுதந்திரமானவளா?
இந்த ஐந்திலும் குறையுள்ளவர்கள் ராபியத்துல் பஸரிய்யா (ரஹ்).
ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்தில் எழுந்து தன் கணவரிடம் கேட்பார்களாம். என்னிடம் ஏதேனும் தேவையிருக்கிறதா? இருந்தால் பூர்த்தி செய்வார்கள். இல்லையெனில் தொழுகையில் ஈடுபடுவார்கள். இவருடைய கணவர் இறந்த பிறகு ஒருநாள் ஹஸன் பஸரி (ரஹ்) ராபியத்துல் பஸரிய்யாவை பெண் கேட்டு வந்தார்கள். அப்பொழுது ராபியா நான்கு கேள்விகளை ஹஸன் பஸரியிடம் கேட்டார்கள்,
 ராபியா: நான் சீதேவியா? மூதேவியா?
ஹஸன்: தெரியாது
ராபியா: என் செயலேடு வலது கையில் தரப்படுமா? இடது கையிலா?
ஹஸன்: தெரியாது
ராபியா: ஸிராத் பாலத்தில் எழுவேனா? விழுவேனா?
ஹஸன்: தெரியாது
ராபியா: நான் சுவர்க்க வாதியா? நரக வாதியா?
ஹஸன்: தெரியாது
ராபியா: இந்த நான்கையும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் ஹஸன் பஸரியவர்களே என்னை விட்டு விடுங்கள் என்றார்கள். அழகில்லையென்பதால் இவரென்ன நரகவாதியா!
இந்த உலகின் அழகும் நம்மை ஏமாற்றும், அசிங்கமும் நம்மை ஏமாற்றும். இறைவன் இந்த இரண்டை வைத்து சுவர்க்க நரக முடிவுகளை எடுப்பதில்லை.

நபியவர்கள் கூறினார்கள்: நரகில் சில மனிதர்கள் இப்படி இருப்பார்கள். அவர்களின் மேலுதடு சுருண்டு நீண்டு நெற்றி வரை விரிந்து கிடக்கும். கீழுதடு தொப்புள் வரை நீண்டு இருக்கும். பல் மலையளவு இருக்கும், கண் நீல நிறமாய் இருக்கும் என்றார்கள். இந்த எச்சரிக்கை அழகானவர்களுக்கும் தானே!

நீதி: இந்த உலகம் ஏமாற்றும் உலகம். இங்கு நாம் பார்க்கும் எல்லாம் பொய். அடிமைகள் தங்களின் அமலால் மகான்களாய் உயர்ந்து விடுகிறார்கள், மகான்களாய் தங்களை காட்டிக் கொண்டவர்கள் அடிமையை விட அல்லாஹ்விடம்  கேவலமாகி விடுகிறார்கள். எனவே இவ்வுலக வாழ்வில் முழுவதுமாய் மூழ்கிவிடாமல் மறுவுலக சிந்தனையோடு வாழும் பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக!
   
  

No comments:

Post a Comment