Thursday 18 December 2014

அஹிம்சா வழி ( ல் ) ஆயுதம் தரிப்போம்!

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு, உங்களை சந்திக்கிறேன். என்னுடைய இணையதளம் என்ற இறுமாப்பை சக்திவாய்ந்த பல வெள்ளிமேடைகள் இடித்து தரைமட்டமாக்கி விட்டன. 
(அஜீஸ் பாகவி, சதக் மஸ்லஹி, பஷீர் உஸ்மானி, அப்பாஸ் ரியாஜி, வரஸத்துல் அன்பியா, உலமா.இன், உஸ்மானிகள் பேரவை, இவர்களின் வெள்ளிமேடைகள், இன்னும் நிறைய.) 
 நானும் பதிவிட வேண்டும் எனும் பந்தயத்தில் பலமுறை முயற்சித்தும் (பளுவின் காரணமாக) பின்தங்கி விட்டேன். வெள்ளிமேடைகளும் பெருகி விட்டன.  
எப்போதாவது வருவேன், ஏதேனும் ஒன்று தருவேன் வலைதள நண்பர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

புதிதாய் உருவாக்கி விட்ட ஆட்சிமுறை, இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் பார்கிறது என்ற என் பயமே இந்த ஒலியாக்கம். 
                            


 இந்தியா முழுவதும் இஸ்லாமிய சமூகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அடுக்கடுக்காக பல்வேறு இன்னல்களை ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என்ன?
1.       ஐவேளை தொழுகை
தொழுகையைக் கொண்டு உதவி தேடுமாறு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது. அல்லாஹ்வோடு நேரடியாக பேச முடிந்த ஒரே வணக்கம் தொழுகை. அந்த தொழுகையை விட்டதன் விளைவு இறை உதவி இல்லாமல் போனது.

நபி (ஸல்) அவர்களின் கடைசி வஸிய்யத். الصلوة يا امتي الصلوة يا امتي என்பதுதானே. ஒரு தகப்பனின் கடைசி வஸிய்யத்தை நிறைவேற்றுவது பிள்ளைகளின் பொறுப்பல்லவா! இந்த சமூகம் அந்த வஸிய்யத்தின் அடையாளத்தை விட்டதின் விளைவு, நாடே அந்நியமாகி விட்டது.    

உமர் ரலி, தொழுகையின் நேரத்தில்தான் குத்தப்பட்டார்கள். 6 நாட்களாக சாப்பிட்டதெல்லாம் காயத்தின் வழியே வெளியானது. மயக்கம் மாறி மாறி வந்தபோதும் தொழுகையை பற்றியே கேட்டார்கள்.                                      لاحض في الإسلام لمن لا صلوة له   என்ற வார்த்தையின் சக்கரவர்த்தி உமர் தானே.

ஹுசைன் ரலி. 52 நபர்களோடு கர்பலாவில். லுஹர் நேரம் வந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறும் தொழுகை முடிந்து யுத்தம் தொடரலாம் என்றபோதும் எதிரிகள் மறுத்து விட்டார்கள். படையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியினர் தொழுகவும் அடுத்த பகுதியினர் யுத்தம் செய்யவும் கட்டளையிட்டார்கள். பிறகு தொழுதவர்கள் யுத்தம் செய்யவும் யுத்தம் செய்தவர்கள் தொழுகவும் பணித்தார்கள். தொழுகையின் வீரியம் என்னவென்பதை நாயகத்தோழர்கள் விளங்கினார்கள், அமல் செய்தார்கள். எனவே இந்தச் சமூகம் கையிலெடுக்கவேண்டிய முதல் ஆயுதம் தொழுகை.  
2.       
   பெரும் பாவங்களை விடுதல்:
வட்டி, திருட்டு, சூனியம் ஏன், பொய்யும் பெரும்பாவம்தானே! வீட்டுக்கு வருகிற கடன்காரன் முதற்கொண்டு கடைக்கு வருகிற வாடிக்கையாளர் வரை எல்லோரிடமும் பொய் பேசித்தானே தப்பிக்கிறோம். வாழ்க்கையில் பலதடவை பேசிய பொய்கள்; நமது வாழ்க்கையையே இந்த நாட்டில் பொய்யாக்கி விட்டது.
நபியே! நம்மில் நல்லவர்கள் உயிரோடு இருக்க இறைவன் புறத்தில் இருந்து வேதனைகள் இறங்குமா!? என்று ஆயிஷா (ரலி) கேட்டபோது, பாவங்கள் மிகைத்து விட்டால், நல்லவர்கள் இருந்தாலும் வேதனைகள் வரும் என்றார்கள் நபியவர்கள். ஆக இந்தச் சமூகம் கையிலெடுக்க வேண்டிய இரண்டாவது ஆயுதம் பெரும் பாவங்களை விடுதல்.

3.       பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றே பிற சமயத்தவரிடமும்  ஒழுக்க மாண்புகளோடும், நன்னடத்தையுடனும்  நடந்து கொள்ள வேண்டும்.

மாமன், மச்சான் என்ற உறவுமுறைப் பேச்சுக்கள், மார்கத்தை விட்டு அவர்கள், விலகி நிற்கிறார்கள் என்பதைவிட, அவர்களால் முஸ்லிம்கள் தான் மார்க்கத்தை விட்டு தூரமாகி விட்டார்கள்.

சொந்த ஊரை விட்டு துரத்தப்பட்டு, சொந்தங்களை அண்டவிடாமல் துன்புருத்திய சமூகத்தை சந்திக்கும்போது வெறுப்பும், கோபமும் வருவது இயற்கையே! அந்த சூழலிலும் اليوم يوم الملحمة என்ற தம் தோழர்களிடம் 
اليوم يوم المرحمة  என்று சொல்லுங்கள் என்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறைதான் மக்கா வெற்றியின்போது பலநபரை இஸ்லாத்தின்மீது நல்லெண்ணம் கொள்ளவைத்தது.

நபியின் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு யஹூதி. தினமும் குப்பைகளை நபியின் வீட்டிற்கு முன்னால் கொட்டுவது வழக்கம். அந்த குப்பைகளையெல்லாம் கோபப்படாமல் கூட்டி அப்புறப்படுத்துவது நபியின் பழக்கம். ஒருநாள் நபி, வீட்டிற்கு முன்னால் குப்பை இல்லாததைக் கண்டு  لعل جارنا اليهود  مريض  என்பதோடு நில்லாமல் அந்த யஹூதியின் வீட்டிற்கு சென்று நலமும் விசாரித்தார்கள், நற்குண நாதர் (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறை அந்த யஹூதிக்கு இஸ்லாத்தைக் கொடுத்தது.

ஹசன் பசரி(ரஹ்) ஒருநாள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அவர்களது பக்கத்துவீட்டு கிருத்துவ நண்பர் அன்னாரை நலம் விசாரிக்க வந்தபோது தன் வீட்டிலிருந்து வரும் கழிவுநீர் ஹசன் பசரியின் வீட்டிற்குள் வருவதும் அதைப் பாத்திரத்தில் பிடித்து அவரே வெளியில் ஊற்றுவதையும் பார்த்த கிருத்துவ நண்பர், ஹசன் பசரியே! என் வீட்டுக் கழிவுநீர் உங்கள் வீட்டிற்குள் வருகிறதே, என்னிடம் சொல்லக்கூடாதா?! எவ்வளவு நாளாக இப்படி நடக்கிறது என்றார். இருபது வருடமாக இப்படித்தான் செய்து வருகிறேன் என்றார்கள் ஹசன் பசரி. இந்த அணுகுமுறையால் அந்த கிறிஸ்த்துவர் இஸ்லாத்தை ஏற்றார்.
ஆக, இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய மூன்றாவது ஆயுதம் பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்.
4.  
                 நமக்குள் ஒற்றுமை வேண்டும்:
எல்லோருடைய சுபாவமும் எல்லோருக்கும் ஒத்துப் போகாது. இது இயல்பு. சுபாவ மாறுபாடுகள்தான் நமக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. சின்னச்சின்ன பிரச்சனைகள், பெரியபெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏன், நபித்தோழர்களுக்குள் பிரச்சனைகள் இல்லையா? அவர்களெல்லாம், காலம் முழுதும் அடித்துக் கொண்டும், எதிரிகளாகவுமா வாழ்ந்தார்கள். கருத்துவேறுபாடுகள் கல்புக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அபூபக்கருக்கும், உமருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கோபப்பட்ட உமர் வேகமாக வீட்டிற்குப் போகிறார்கள். அபூபக்கரும் உமரிடம் மன்னிப்புகோர பின்னாலேயே போகிறார்கள். உமர் வேகமாக கதவை அடைக்க, மனமுடைந்து மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து விட்டார்கள் அபூபக்கர்(ரலி). அபூபக்கரிடம் நாம் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று வருத்தப்பட்ட  உமரும் அபூபக்கரைத் தேடி பள்ளிக்கு வந்தார்கள். இருவரும் தங்களது தவறை முன்மொழிந்து, ஒருவருக்கொருவர் மன்னிப்புக்குக் கேட்டு மல்லுக்கு நின்றார்கள்.
இதை மாநபி, மலர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டே ஒன்று சொன்னார்கள்; என்னை எல்லோரும் பொய்யனென்றபோது இந்த அபூபக்கர்தான் என்னை உண்மை படுத்தினார் என்றார்கள் உத்தம நபி.
வேறுபட்டக் கருத்துக்குள் பொறுத்துப் போகிற பக்குவம் வேண்டும்.

பிரச்சனைகளின் போது கையாள வேண்டிய காரியங்கள்:
   மன்னிக்கப் பழகனும்
மக்காவை விட்டு நபியவர்கள் விரட்ட பட்டபோது இரண்டு ரக்அத் தொழுக வேண்டி கஃபாவிற்குப் போனபோது  عثمان بن طلحة  எனும் கஃபாவின் பொறுப்புதாரி, நபியை உள்ளே விட மறுத்தபோது எனக்கொரு காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன். என்று நபியவர்கள் கலங்கிய உள்ளத்தோடு சென்று விட்டார்கள். எட்டாண்டுக்குப் பிறகு மறுபடியும் ஃபாவிற்கு போனார்கள். அன்றைக்கு மக்காவே மாநபி வசம். (விரிவஞ்சி விடுகிறேன் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.)    
 خذوها يا بني ابي طلحة خالدة تالدة لا ياخذها الا ظالم                                அபீ தல்ஹாவின் மகனே! நிரந்தரமாக உங்களிடமே இருக்கட்டும் இந்த சாவி! உங்களிடமிருந்து இதைப் பிடுங்குபவன் பாவி! என்றார்கள்.
என்றைக்கோ  நடந்து முடிந்த பிரச்சனைகளை தோண்டி எடுத்து பழி வாங்கும் மனிதர்களுக்கு தவறுகளை மன்னிக்க கற்றுக் கொடுத்தார்கள் காருண்ய நபி.

தவறுகளை  மறைக்கப் பழகனும்
என் மகள் நிறைய தவறு செய்து விட்டாள். தற்கொலைவரை போய்விட்டாள். இப்போது அவளை பெண் கேட்கிறார்கள். அவளது குறைகளையெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடவா? என்று உமர் (ரலி)யிடம் கேட்டபோது,
அவளது குறைகளை பிறரிடம் சொன்னால் உன்னை கடுமையாக தண்டிப்பேன். முஸ்லிமான, பத்தினியான பெண்ணை எப்படி மணம் முடித்துக்கொடுப்பாயோ அதைப் போன்றே இவளையும் மணம் முடித்துத் தர வேண்டும் என்றார்கள் உமர் (ரலி).

தவறுகளை மறக்கப் பழகனும்
சரித்திரத்தில் உமர் என்பவர் யார்?  உத்தம நபியின் உயிரெடுக்க வந்தவர்தானே! பலதடவை நபிக்கு யோசனை சொன்னபோதுகூட நீ யார் எனக்கு யோசனை சொல்வது, என்னையே கொள்ள வந்தவன்தானே நீ, என்று ஒருதடவை கூட நபி உமரைப் பார்த்து சொன்னதில்லையே!

நம்முடைய தவறுக்கு மன்னிப்பு கேட்க பழகனும்
  யுத்தகளத் தயாரிப்பில் நபி. சஹாபிகளின் வரிசையை சரிசெய்ய நபி ஈட்டியை பயன்படுத்தியபோது ஒரு நபித்தோழரின் வயிற்றில் பட்டுவிட நபியே! ஈட்டியால் எனக்கு நோவு தந்தீர்கள் என்றார். உடனே நபியும் பதிலுக்கு என்னை நோவினை செய்யுங்கள் என்றார்கள். நபியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த அந்த நபித்தோழர், நபியே! யுத்தம் போகப் போகிறேன்; நான் திரும்புவேனா? மாட்டேனா? தெரியாது. எனவே, உங்கள் மேனியை முத்தமிட ஆசை கொண்டேன் என்றார் நாயகத் தோழர். தவறு தன பக்கம் என்றபோது உடனே ஏற்றுக் கொண்டு தலைசாய்த்தார்களே அந்த நபியின் உம்மத்தா இன்று இந்த சுன்னத்தை மறந்து விட்டுத் தவிக்கிறது.?

மக்களை ஒன்று படுத்தனும்

பிரிவினைகள் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கும். இறை உதவியை தடுத்துவிடும்.

பிரிவினைவாதியால் அல்லாஹ்வின் அருள் தடைபடும் என்பது நபிமொழி.
 யாரைப் பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்; உங்களை நான் பரிசுத்தமாகவே பார்க்க விரும்புகிறேன் என்றார்கள் ஏந்தல் நபி.
ஆக இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய இந்தாவது ஆயுதம் நமக்குள் ஒற்றுமை

இன்டர்நெட்டில் வலம்வரும் இஞ்சினியர்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளாய் சித்தரிக்கப் படும் நிலை மாறவேண்டுமானால், கட்டாய மதமாற்றமெனும் காவிகளின் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டுமானால் மேற்சொன்ன இந் ஐந்தொழுக்கப் பயிற்சி முக்கியம்.

இந்த அஹிம்சாவழி ஆயுதங்கள்தான் இந்த நாட்டில் முஸ்லிகளை நிம்மதியாக வாழவைக்கும். அறவழிப் போரால் மட்டுமே இந்த சமூகத்தைக் காக்க முடியும்.

அல்லாஹ் அருள் புரியட்டும்!


 




   

No comments:

Post a Comment