Wednesday 11 December 2013

ஸஃபரும், சன்மார்க்க முஸ்லிம்களும்


சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில்இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
 இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும் ரஜப் மாதத்தில் பூரியான்பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் இஸ்லாத்தில் ஒரு வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. 
ஒன்று, இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்தல் அவசியம்.
 மற்றொன்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்து இயம்பிய வழிமுறையில் செய்தல் அவசியம். இவைகள் இரண்டையும் விடுத்து காலம்காலமாக செய்த செயல் என்றோமுன்னோர்கள் செய்தவைகள் என்றோசெய்வோமேயானால் நாளை மறுமையில் எந்த பயனும் கிடைக்காது மாறாக புதுமையை புகுத்திய குற்றத்திற்காக தண்டனையை பெற்று தரும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஆதாரமாக உள்ளது.
இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை,காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்),பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிட்டது போன்று சிறந்த வார்த்தையாகிய குர்ஆனிலும் சிறந்த நடைமுறையாகிய நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலும் இல்லாத ஒன்றை யார்
செய்தாலும்சொன்னாலும்அங்கிகரித்தாலும் அனைத்தும் வழிகேடுகளாகும்,வழிகேடான வணக்கங்கள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்க போதுமானதாகும்.
இதுபோன்ற வழிகேடுகளில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதி அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை வரை எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் பிற்படுத்துவதும் அல்லது தடுப்பதுமாகும். இந்த காலங்களில் இப்படி ஏதாவது சுபநிகழ்ச்சிகளை நடைபெற செய்தால் நன்மை கிடைக்காது என்று உறுதியாக நம்பி பிற்படுத்துகின்றனர்.  தூய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இருப்பவர்களும் மாற்று மதத்தாரை காப்பி அடிப்பதை போன்று அடிபிறழாமல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எந்ததளவிற்கெனில் திருமணமான புதுமண தம்பதிகளையும் ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்து பீடை கழிக்கின்றனர் எவ்வாறு மாற்று மதத்தினர்கள்  செய்கின்றார்களோ அதே போன்று.
யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே! (நூல் அபூ தாவூது).
இந்த ஹதீதின் சாராம்சம் என்னவெனில் சமுதாயத்தின் மற்றும் நாட்டின் எண்ணிக்கையில் பெயரளவு முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்களும் காட்டி தந்த அழகிய வழிமுறையினை பின்பற்றி வாழ்ந்து உயர்ந்த நிலையான சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக வாழாமல்மார்க்கம் அனுமதித்திருக்கின்றதாஅல்லாஹ் அங்கிகரிப்பானாமற்றும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதுமோ அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது செய்தார்களா?, சொன்னார்களாஅல்லது அங்கீகாரம் வழங்கினார்களாஎன்றெல்லாம் பார்க்காமல் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்களை பார்த்து பின்பற்றி வருகின்றார்களே அவர்கள் அந்த சமுதாயத்தையே சார்ந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்கள்.
இன்னும் இந்த ஸபர் பீடையை கழிக்க அல்லது நீக்க இவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள செயல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கின்றன. அதாவது ஸஃபர் மாதத்தின் கடைசி புதனன்று வீடுகளை சுத்தம் செய்து அந்தந்த பகுதியை சேர்ந்த ஜமாஅத் தலைவர்களின் உத்தரவின் மூலம் மா இலைகளில் மையினால் என்னவென்றே தெரியாத மற்றும் புரியாத ஒருசில அரபி எழுத்துக்களை எழுதி அதனை எல்லா வீடுகளுக்கும் வினியோகம் செய்து அந்த மா இலையில் எழுதப்பட்ட வார்த்தையை தண்ணீரில் கரைத்து எல்லோரும் குடித்துவிட்டுபல்வேறு வகையான உணவு பண்டங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்றைய தினத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அல்லது பார்சல் எடுத்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து ஆற்றங்கரைக்கோ,கடற்கரைக்கோபுல்வெளிகளுக்கோ சென்று குளித்துவிட்டு நேராக அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப சினிமா தியேட்டர்களுக்கோ அல்லது தர்ஹாக்களுக்கோ சென்று அருள்(?!) பெற்றுவிட்டால் ஸஃபர் மாத பீடை நீங்கும் என்ற எண்ணத்தில் இன்றும் அறியாமை கால பழக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த அனாச்சாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணம் வினோதமானது அதாவது நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத ஆரம்பத்தில் நோய்வாய்பட்டு கடைசி புதனன்று நிவாரணம் பெற்றார்கள்நோய் ஏற்பட்ட நாட்களை பீடையென்றும் நிவாரணம் கிடைத்த நாளை பீடை போக்கிய நாளென்றும் கருதி இதுபோன்ற சடங்கு சம்பிரதாங்களை செய்து வருகின்றனர். 
இந்த காரணம் சரியென்றிருந்தால் அதனை அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்க வேண்டும் அல்லது அருமை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் வாய் மொழிந்திருக்க வேண்டும்,ஆனால் அதன்பிறகு நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிர் வாழ்ந்த அடுத்தடுத்த வருடங்களில் வரக்கூடிய ஸபர் மாதத்தை நான் நோயுற்று நிவாரணம் பெற்ற காரணத்திற்காக இவ்வாறு இவ்வாறாக செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கவுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கத்தில் ஏதோ ஒருசிலர் தன்னுடைய வருமானத்திற்காக புதிதாக புகுத்தி உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு துன்பத்தை நீக்குவோனும் மேலும் நன்மையை கொடுப்போனும் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் கிடையாது என்பதை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்
  وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ هُو إِلَّا لَهُ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ                    َ     இன்னும் (நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை (அவ்வாறே) அவன் உனக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குர்ஆன் 6: 17).                      (நன்றி: இமாம் ஹபீப்)

ஸஃபர் மாதம் - ஒரு வரலாற்றுப் பார்வை


ஸஃபர் மாதம் தொடர்பாக மௌட்டீக காலம் முதற்கொண்டு பல மூடநம்பிக்கைகள் இருந்ததை வரலாற்றில் காண முடியும். ஸஃபர் அது வயிற்றுப் புழு. மனிதனுடைய வயிற்றில் இருந்து அவனை கொன்று விடுகிறது. அவனுக்குரிய மரண நேரம் வருவதற்கு முன்பே இறந்து விடுகிறான்என்று நம்பினர். ஸஃபர் மாதத்தையே பீடை மாதமாக கருதினர். (அவ்னுல் மஃபூத்)


ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதப்பட்டது.  மௌட்டீக காலத்தில் இந்த மாதத்திற்கு ஸஃபருல் கைர் - நல்ல ஸஃபர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்லது என்று நம்பியதால் நல்லதாகவோ கெட்டது என்று நம்பியதால் கெட்டதாகவோ ஆகப்போவதில்லைஎன்பதே நம்முடைய நம்பிக்கை. (அத்தியரா)  


ஸஃபர் மாதம் முஹர்ரம் மாதத்திற்கு அடுத்து வருகிறது. முஹர்ரம் யுத்தம் ஹராமாக்கப்பட்ட மாதம். எனவே அதற்கு அடுத்து வரும் ஸஃபர் மாதத்தில் அதிமான யுத்தங்களும் குழப்பங்களும் நடக்கும் என்று நம்பினர். (நபிய்யுர் ரஹ்மா)


எனினும் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் புரட்சிகரமான பல நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் காணமுடியும். நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் எதுஎன்பதில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு கருத்தின் படி அது ஸஃபர் மாதம் என்றும் கூறப்பட்டுள்ளது.  (மௌசூஅதுத் திஃபாஃ அன் ரஸூலில்லாஹ் ஸல்)


ஹதீஸ் கலை வல்லுணர் இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் தான் பிறந்தார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா)


நபிப்பட்டம் கிடைத்து 14 ஆம் ஆண்டு 26 ஆம் தேதியன்று (கி.பி. 622, செப்டம்பர் - 12) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) புறப்படுவத்றகு முன் அவர்களை கொலை செய்வது பற்றி எதிரிகள் ஆலோசனை நடத்தினர். (நவூது பில்லாஹ்) குரைஷிகளின் பாராளுமன்றமாகிய தாருந்நத்வாவில் இதற்கான கூட்டம் நடந்தது. ஷைத்தான் இந்த கூட்டத்தொடருக்கு தலைவனாக இருந்தான். எல்லா குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து கொலை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்என்ற கருத்தை ஏற்று அப்படியே முடிவு செய்தான். மறுநாள் பிறை 27 ஆன்று நபியவர்கள் புறப்பட்டார்கள். ஆனால் எதிரிகளின் இந்த திட்டம் பலிக்க வில்லை. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றிவிட்டான்.


உலக சரித்திரத்தில் தடம் பதித்த இந்த ஹிஜ்ராவுடைய நிகழ்வு இந்த ஸஃபர் மாதத்தில் தான் ஆரம்பமானது. (அர்ரஹிகுல் மக்தூம்) 


நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாது:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான் அப்வா அல்லது வத்தான் யுத்தத்திற்காக நபியவர்கள் புறப்பட்டார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபியவர்கள் 60 முஹாஜிரீன்களுடன் சென்றார்கள். இதில் அன்ஸாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுவே நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாதாகும். சண்டை எதுவும் நடக்கவில்லை. எதிரிகள் தப்பித்துவிட்டனர். எனினும் இந்த பயணத்தில் பனூளம்ரா என்ற கோத்திரத்தாருடன் நபியவர்கள் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் வாதில் குரா யுத்தம் நடந்தது. கைபர் யுத்தம் முடிந்து திரும்பும் போது இவர்களுடைய கோட்டை முற்றுகையிடப்பட்டது. இங்கும் இஸ்லாத்தை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் இருந்தனர். நான்கு நாள் முற்றுகைக்குப் பின் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.


யுத்தத்திற்கான அனுமதி:
எந்த காரியமாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் செய்ய முடியும். முஸ்லிகளை எதிர்க்கும் எதிரிகளுடன் யுத்தம் செய்வதற்கும் அல்லாஹ்வின் அனுமதி தேவை.


ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதம் 12 ஆம் தேதியன்று இறைநிராகரிப்பாளர்களுடன் யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் இறைவசனம் இறங்கியது. எவர்களுக்கு எதிராக போர் புரியப்படுகிறதோ அவர்களுக்கு (யுத்தம் செய்ய) அனுமதியளிக்கப் பட்டுவிட்டது.ஏனெனில் அவர்கள்கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். (22:39)

இதுவே யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் முதல் வசனமாகும். இதற்கு முன்பு யுத்தம் செய்யக்கூடாதுஎன்ற கருத்து கொண்ட 72 வசனங்கள் இறங்கியிருந்தன.


திருமணம்:
ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் (கி.பி 626 ஜுன்) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்கள்  ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கைபர் யுத்தத்தில ஸபிய்யா கைதியாக பிடிக்கப்பட்டார். தலைவரின் மகளாக இருந்ததால் யூதர்கள் மணமகிழ்ந்து இஸ்லாத்தை தழுவலாம் அல்லது முஸ்லிம்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளலாம்,என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்ததும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்களுக்கு வயது 19.அலீ (ரலி) அவர்களுக்கு 24 வயது.


ஸரிய்யது ரஜீஃ:
அளல்காரா ஆகிய இரு கோத்திரத்தார் வேண்டிக்கொண்டதற்கிணங்க மார்க்கத்தை படித்துக் கொடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பத்து தோழர்களை ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஸஃபர் மாதம் அனுப்பி வைத்தார்கள். போகும் வழியில் ரஜீஃ என்ற இடத்தில் எதிரிகள் 200 பேர் வழிமறித்து சூழ்ந்து கொண்டனர். இவர்கள் தப்பிப்பதற்கு வழி இல்லாமல் எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் எட்டு பேரை அங்கேயே ஷஹிதாக்கி விட்டனர். குபைப் (ரலி) ஜைத் (ரலி) ஆகிய இருவரையும் மக்காவுக்கு அழைத்துச் சென்று எதிரியின் கைகளில் விற்றுவிட்டனர். அவர்கள் அங்கே சில காலம் கைதியாக வைக்கப்பட்டனர். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் கொன்றுவிட்டனர்.


இஸ்லாம்:
யமாமாவின் அதிபதி துமாமா பின் உஸால் (ரலி) (ثمامة بن اثال)அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹர்ரம் அல்லது ஸஃபர் மாதத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். துமாமா ஒரு படைநடவடிக்கையில் கைதியாக பிடிக்கப் பட்டார். அவர் மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதுந்நபவீயின் தூணில் கட்டிவைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டார்கள். துமாமா (ரலி) அவர்கள் விடுதலையாகிச் சென்று குளித்துவிட்டு மீண்டும் நபியவர்களிடம் வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


ஹிஜ்ரி ஆம் ஆண்டு முஹர்ரம் ஸஃபர் மாதத்திற்கிடையில் ஏமனிலிருந்து (دوس) தூஸ் கபீலாவினர் நபியவர்களிடம் வந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! இந்த சந்திப்பின் மூலம்70 அல்லது 80 தூஸ் குடும்பத்தைச் சார்ந்த 400 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.


ஹிஜ்ரி ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் அம்ர் பின் ஆஸ் (ரலி) காலித் பின் வலீத் (ரலி) உதுமான் பின் அபீதல்ஹா (ரலி) ஆகியோர் மதீனா வந்து நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர்.


ஹிஜ்ரி ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் ஏமனில் இருந்து பனு உத்ரா என்ற கோத்திரத்தைச் சார்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழு வந்தது. இக்குழுவினர் அனைவரும் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திரும்பினர். (நூல்: முஃமின்கே மாஹோஸால்)
அல்லாஹ் மார்க்கத்தின் விளக்கத்தை எல்லோருக்கும் தருவானாக!
                                                                         நன்றி:  நிஜாம் ஹழ்ரத்

No comments:

Post a Comment