Friday, 23 August 2013

தொங்கும் தோட்டம்.......!



தாருல் உலூம் யூசுபிய்யாவில் கடந்த 18.05.2013 அன்று  {அப்னாயே யூசுபிய்யா}  முன்னால் மாணவர்களின் சந்தித்தல்-சிந்தித்தல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. அதில் அடியேன் {சு}வாசித்த வரிகள்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு
ஒரே சாட்சி எங்கள் யூசுபிய்யா!

அறிவை அள்ளித் தரும்
வெள்ளை மாளிகை
எங்கள் யூசுபிய்யா!

பிஞ்சுக் குழந்தைகளை
நெஞ்சில் தாங்கும்- தொங்கும் தோட்டம்
எங்கள் யூசுபிய்யா!

இந்த ஈபிள் டவருக்கு
வருகை தந்த யூசுபிகளே வருக!

இறையருள் கொண்டு, இறைவழி கண்டு
இகமெங்கும் தீன் பணி செய்யும்
யூசுபிகளே வருக!

பொருள் தேடும் உலகில்
இறையருள் தேடும்
பொன்னான யூசுபிகளே வருக!

காலம் மாறினாலும்
கோலம் மாறாத
கொள்கை யூசுபிகளே வருக!

வேலைக்கு ஓய்வு கொடுத்து
தீர்ப்பாய்வுக்கு வருகை தந்த
யூசுபிகளே வருக!

வீதிஉலா வரும் வெள்ளி நிலா போல்
ஜோதிஉலா வரும்
ஆதி (பழைய) யூசுபிகளே வருக!

இடர் கண்டு கலங்காமல்
அறிவுச் சுடர் கொண்டு
அகிலம் காக்கும் யூசுபிகளே வருக!

நதியாய் ஓடி, ராஜாளியாய் பறந்து
தேசமெங்கும் வாசம் செய்யும்
பாசமிகு யூசுபிகளே வருக!

சங்கையாடும் யூசுபிய்யாவிற்கு
லங்கையிலிருந்து வருகை தந்த
சங்கையான யூசுபிகளே வருக!

அயலகம் போனபின்னும்
தாயகம் மறவா போராளி போல்
நாயக வார்த்தைகளால் நானிலம் காக்கும்
யூசுபிகளே வருக!

புகுந்த வீடு புகுந்த பின்னும்
பிறந்த வீட்டுச் சுகம் தேடும்
புதுப் பெண் போல்,
தாய்வீடு மறவாத தரமான
யூசுபிகளே வருக!

சிங்கார யூசுபிகளே!  செய்தியொன்று
சொல்வேன் கேளுங்கள்,

இங்கிருந்த கலங்கரை விளக்கொன்று
காணாமல் போய்விட்டது!

இங்கோடிய கடலொன்று
உடல் வற்றிப் போய்விட்டது!

திசைகாட்டி ஒன்று
விசையிழந்து வீழ்ந்து விட்டது!

நீண்டு வளர்ந்த நிழல் மரமொன்று
உரமின்றி உலுத்துப் போய்விட்டது!

உலகெங்கும் ஒலித்த குரலொன்று
ஓசையற்றுப் போய்விட்டது!

ஆம்! பிறந்த ஊரு (கீரனூரு)க்கே மறுபடியும்
உறங்கப் போய்விட்டது!

மாநபியின் மறைவிற்குப் பிறகு,
மாமனிதர் பிலாலின் பாங்கோசை கேட்டு,
மதினத்துச் சிறுமியொருத்தி கேட்டாளாம்:
மாயமாகிப் போன பிலால் வந்து விட்டார்:
மறைந்துபோன மாநபி எப்போது வருவாரென்று?!

அதே ஏக்கத்தில் أبناء எல்லாம் கூடியிருக்கிறோம்
எங்கள் أب வைக் காணவில்லை!

மணமேடையில் மணாளனைத் தொலைத்த
மணப் பெண் போல்

நூலாம்படையில் விழுந்த
நூற்பூச்சி போல்

வேடன் அம்பு சிக்கிய
வேட்டை பிராணி போல்

வேங்கை நகம் சிக்கிய
சின்னக் கன்று போல்

வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கிறோம்
எங்கள் أب    வைக் காணவில்லை.


மஞ்சனத்தின் கடைசி நிமிடத்தில்
எங்கள்  أب வின் சிந்தனைகள்
இதுவாய் இருக்குமோ!

காலிங் பெல்லை அழுத்த நினைத்தாரோ!

கணக்குப் பிள்ளையை அழைக்க நினைத்தாரோ!

கடல் ஏழையும் கடக்க நினைத்தாரோ!

சதிகள் அழிக்கும் வழிகளை
ஹழ்ரத் அலிக்கு சொல்ல நினைத்தாரோ!

சிம்மக்குரல் கொண்டு செம்மைக்குரல் கொண்ட
ஹழ்ரத் ஜாபிரை நினைத்தாரோ!

உடல்வலி மறந்து சையதுவலி ஹழ்ரத்தை
சைக்கினை செய்ய நினைத்தாரோ!

மத்ரஸாவின் நிஜாமை ஹழ்ரத் நிஜாமிற்கு
கற்றுத்தர நினைத்தாரோ!

இறையருள் பெற்ற சீமானே!
உங்களை நினையா நாளில்லை!
உங்கள் சிந்தனையில் இணையா “நா” இல்லை!
உங்கள் எழுத்தில் நனையா “பேனா” இல்லை!

பணம்- வெறும் பிணம்,
குணம்- மணம் என்றீர்கள்!

பாலமாய் இருக்கச் சொன்னீர்கள்!
யாருக்கும் பாரமாய் இருக்காதீர் என்றீர்கள்!

கொடுத்து வாழச் சொன்னீர்கள்; யாரையும்
கெடுத்து வாழாதீர் என்றீர்கள்!

பணக்காரர்களுக்கு குட்பை சொன்னபோதும்;
பணத்தை குப்பையில் போட்ட போதும்
நீங்கள் இருபத்தோராம் நூற்றாண்டின்
ஹாத்திம் தாயாய் மிளிருகிறீர்கள்.!

உங்கள் கப்ருக்கு ஒரு கடிதம் வருகிறேன்;
உங்களுக்குப் பிறகு – உங்களிடத்தில்
ஒரு தலைப்பாகை இளைப்பாற ஆரம்பித்திருக்கிறது.

தன் முகக் கண்ணாடியில் அகக் கண்ணாடி
பொருத்தியிருக்கிறது.

சாந்த குணம் கொண்டு சாதிக்கத் துவங்கி இருக்கிறது,
தங்களின் வழியே தஃவத்திற்கும்
பொறுப்பேற்றுக் கொண்டது.

பிறந்த வீடு துறந்து, புகுந்த வீட்டுக்கு
பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

ஊர் நெல்லை என்றாலும் – இவர்
இரண்டாம் கீரனூரி!

ரஹ்மானே! நாங்கள் யூசுபிய்யாவின்
பால்குடிச் சகோதர்கள்,
எங்களுக்குள் சண்டைகளுண்டு; சதிகளில்லை.
அடிதடிகள் உண்டு; அடாவடிகள் இல்லை.

அதனால் எங்களுக்கு பெருமை உண்டு;
யார்மீதும் பொறாமை இல்லை.

உலகம் அழிந்தாலும், உன் கல்வி வழிந்தோடும்
யூசுபிய்யாவையும், யூசுபிகளையும், அவர்தம்
உஸ்தாத்களையும்
ரப்பே! காக்க வேண்டியது உன் பொறுப்பே!










No comments:

Post a Comment