Thursday 15 August 2013

சுதந்திரம் யாருக்குச் சொந்தம்?


 இன்று முஸ்லிம்கள் பற்றிய ஒரு பிழையான கண்ணோட்டம் பிற சமூகத்தார் மத்தியில் பறவி வருவதையும், அதனால் பற்பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவதையும் நாம் அறிவோம். இவைகளுக்கான பிரதான காரணங்களில் ஒன்று “நாட்டுப் பற்று” என்ற விவகாரமுமாகும்.  முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்று இல்லை. இவர்கள் தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என்றெல்லாம்  சொல்லக் காரணம் என்னவெனில் நாம் எந்த இடத்தில் நாட்டுப்பற்றை காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் நாம் நாட்டுப் பற்றைக் காட்ட தவறி விட்டோம். நமக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்றும் நடந்து கொள்கின்றோம். உண்மையில் இது ஒரு தவறான நிலைப்பாடாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் இந்த நிலையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிய சரியான நிலைப்பாடு நமக்கு இருக்க வேண்டும். நாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிகளால் வழி நடாத்தப்படுகின்ற ஒரு தனித்துவமிக்க சமூகம். நமக்கு சகல விஷயங்களிலும் வழி காட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு முஸ்லிம் தான் பிறந்த தேசத்தை எவ்வாறு நேசிப்பது என்பது பற்றியும் சொல்லித் தந்திருக்கிறது.
இஸ்லாம் தேசப் பற்றையும், தேசபிமான உணர்வுகளையும் ஆதரிக்கிறது. அதனை மனிதனின் ஒரு இயல்புப் பண்பாகப் பார்க்கிறது. ஒருவன் தான் பிறந்த தேசத்தையும் நாட்டையும் நேசிப்பதை அனுமதித்து இருக்கிறது. இது விஷயத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்வில் பல எடுத்துக் காட்டுக்கள் இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்களின் தேசப் பற்று:
நபி (ஸல்) அவர்கள் தாம் பிறந்த தேசத்தை விட்டும் ஹிஜ்ரத் சென்ற நிகழ்வு பற்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மக்காவை நோக்கி “ நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல் : திர்மிதி)
நபியவர்கள் யுத்தங்களுக்காகவோ அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் மதீனாவை விட்டும் வெளியே சென்றாலும் அவர்கள் உள்ளம் தமது தேசத்தின் சிந்தனையிலேயே லயித்திருக்கும். மீண்டும் திரும்பி வரும் போது மதீனாவின் எல்லையை நோக்கி தமது வாகனத்தை விரைவு படுத்துவார்கள் என அபூ அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி )
ஹாரீஸ் பின் உமரின் மேலுமொரு அறிவிப்பின் படி தமது வாகனத்தை தமது தேசத்தின் பற்றினாலேயே (தாம் மிக அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக) விரைவு படுத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விரிவுரை எழுதும் அல்லாமா இப்னு ஹஜ்ர் இமாம் அல்-அய்னீ மற்றும் முபாரக் பூரி போன்றவர்களின் கூற்றாவது: மேற்படி நபியவா;களின் நடைமுறையிலிருந்து மதீனாவின் சிறப்பு மற்றும் தேசப்பற்று மார்க்கத்தில் உள்ளவை என்றும் அதன் மீது அன்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூற்கள்: ஃபத்ஹுல் பாரி உம்ததுல் காரி , துஹ்ஃபத்துல் அஹ்வதீ)
நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின் அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மதீனா நோக்கிப் பயணமானார்கள். (அந்நேரம் ஹிஜாபுடைய வசனம் இறக்கப்பட்டு இருக்கவில்லை) நேராக ஆயிஷா (றழி) அவர்ளிடம் சென்றார்கள், அப்பொழுது நீர் மக்கா எவ்வாறு இருக்கும் நிலையில் வந்தீர் என ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட போது அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மக்கா பற்றி வர்ணிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வரும் வரை சற்று காத்திருக்குமாறு சொல்ல, சில வினாடிகளிலேயே நபியவா்களும் அவ்விடத்திற்கு வந்து, ஆயிஷா (றழி) அவா்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு தமது தேசம் பற்றியே விசாரித்தார்கள். அவா்கள் முன்பு சொன்னது போலவே மதீனா பற்றி வா்ணிக்க ஆரம்பித்த போது நபி (ஸல்) அவர்கள்: போதும் போதும் மீண்டும் மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி) எம்மை கவலையில் ஆக்கிவிட வேண்டாம் என்றார்கள். (நூல்: அல்-இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா)
நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு வந்த போதிலும் சதாவும் தாம் பிறந்த தேசத்தைப் பற்றிய கவலையுடனே இருந்திருக்கிறார்கள். ஆனால் காலப் போக்கில் மதீனா பற்றிய அன்பு தமது உள்ளத்தில் வர வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்குத் தோன்றியது. ஏனெனில் தமது தாவாப் பிரச்சாரம் வெற்றி பெறத் தளமாக இருந்த பூமி அந்த மதீனா மாபூமி தான். எனவே தான் தமக்கு மதீனாவின் மீது பற்றை உண்டாக்கும் படி அல்லாஹ்விடத்திலே கீழ் வருமாறு பிராத்தனையும் புரிந்தார்கள்.
யா அல்லாஹ்! எனக்கு மக்காவின் மீது எவ்வாறு அன்பு இருக்கிறதோ அதே போன்ற பற்றை மதீனாவின் மீதும் உண்டாக்குவாயாக. அல்லது அதை விட அதிகமான அன்பை உண்டு பண்ணுவாயாக. (நூல்: புகாரி )
ஒரு தடைவ நபி (ஸல்) அவர்கள் : உஹது மலையைப் பார்த்து “ இந்த மலை எம்மை நேசிக்கிறது நாமும் அந்த மலையை நேசிக்கிறோம்” எனக் கூறினார்கள் (நூல்: புகாரி , முஸ்லிம்)
இதுலிருந்து நபியவர்கள் தமது தேசத்தை எந்த அளவு பிரியம் கொண்டிருந்தார்கள் எனத் தெளிவாகிறது.
ஸஹாபாக்கள் வாழ்வில்:
அது போலவே இதற்குச் சான்றாக ஸஹாபாக்கள் வாழ்விலும் பல அழகிய சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கைக் குறிப்புக்களில் காணக் கிடைக்கின்றன. மக்காவை விட்டும் ஹிஜ்ரத் சென்ற ஹழரத் பிலால் (றழி) அவர்களின் பிராத்;தனை இவ்வாறு அமைந்திருந்தது.
“யா அல்லாஹ்! எம்மை இந்த ஷைபா பின் றபீஆ, உத்பா பின் றபீஆ, உமையா பின் கலஃப் போன்றோர் (எமது தேசத்தை விட்டும்) வெளியேற்றியது போலவே இவர்களையும் (உனது றஹ்மத்தை விட்டும்) வெளியேற்றுவாயாக” (நூல்: ஃபத்ஹுல் பாரி )
மட்டுமின்றி பிலால் (றழி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டு மக்காவையே நினைத்து கண்ணீர் வடிக்கிறார் மட்டுமின்றி தனது மன உலைச்சலை கவியாகப் பாடுறார்.
“இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற் தரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் கிட்டாதா? ” “(மக்காவின்) மஜன்னாவின் நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா?” “(மக்காவின்) ஷாமா, துஃபீல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? “ “ஸலஃபுகள்”; எனப்படும் முன்னோர்களான நல்லவர்கள் வாழ்வில்:
ஸலபுஸ் ஸாலிஹீன்கள் வாழ்விலும் தேசப் பற்றின் அடையாளங்கள் காணப்பட்டன.
அபூ நுஐம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்) அவர்கள் கூறினார்கள்: தமது தாயகத்தை விட்டும் பிரியும் கஷ்டத்தை விட வேறெந்தக் காரியமும் கடுமையானதாக இல்லை. (நூல்: ஹில்யத்துல் அவ்லியா)
பேரறிஞர் இப்னு பதூதா அவர்கள் தமது சுற்றுலாவுக்காக தமது தாய் நாட்டை விட்டும் வெளியேறிய நிகழ்வைக் குறிப்பிடும் போது:…சகல நாடுகளையும் விட என்னிடத்தில் சிறப்புப் பொறுந்திய நான் நேசித்த எனது நாட்டின் பிரிவை நினைக்கும் கஷ்டத்தினால எனக்கு மரணம் வந்து விடுமோ என எண்ணினேன். (நூல்: றிஹ்லத்து இப்னி பதூதா)
(தேசியக்) கொடி பறக்க விடல்:
அத்துடன் தேசியக் கொடியை பறக்க விடுவது தேசப் பற்றோடு சம்பந்தப்பட்ட மிகப் பிரதான விடயங்களில் ஒன்றாகும், இது பற்றி திருக் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ நேரடியாக குறிப்பிடப்படா விட்டாலும் இது பற்றிய ஒரு தெளிவும் எமக்கு இருந்தாக வேண்டும். ஏனெனில் போரின சமூகம் இந்த சம்பிரதாயத்தை மிகப் பெரிய காரியமாகவே நோக்குகின்றனர். சுதந்திர தினம் மற்றுமுன்டான தேசிய விவகாரங்களுடன் தொடர்புள்ள நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை ஏற்றி வைக்கின்றனர். ஆனால் எமது முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கையே கடைபிடிக்கின்றனர். இதனைக் குறித்தே முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்று கிடையாது என்றும் கூறுகின்றனர். உண்மையில் நாம் ஷாரிஆவை அடிப்படையாகக் கொண்டு தவிர்ந்து கொள்ளும் இப்பழக்கம் ஷாரீஆவில் தடுக்கப்பட்ட ஒரு காரியமல்ல.
ஏனெனில் இந்தக் கொடியை பறக்க விடும் வழமை நபிகளாரின் காலத்தில் மட்டுமல்ல இஸ்லாத்திற்கு முன்பும் காணப்பட்டது. அறபிகள் தமக்குள்ளே பல்வேறுப்பட்ட கொடிகளை பாவித்து வந்துள்ளனர். அவைகளை தமது கோட்டைகளின் மீதும், தமது கோத்திரத்தார்கள் வாழும் இடங்கள், யுத்த நேரங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் பறக்க விடுவர். மட்டுமின்றி பாதை தவறிய பிரயாணிகள் சரியான இடங்களைக் கண்டு பிடிக்கவும் இதனைப் உபயோகப் படுத்தி உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு கோத்தினருக்கும் வெவ்வேறு கொடிகள் இருந்தன. அதனைக் கொண்டே பிற சமுதாயத்தினா; தம்மை இனம் கண்டும் கொண்டனர்.
குஸை பின் கிலாப் மக்காவில் குரைஷிகளின் தலைவராக இருந்தார். தற்போதைய பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்பான பெரும் பதவியையும் அவரே ஏற்றிருந்தார். அவரே தமது குலத்தின் கொடி விவகாரத்திற்கும் பொறுப்பாய் இருந்தார். அவர் அக்கொடியை ஏற்றி விட்டால் தமது உதவியாளர்கள் உற்பட ஏணைய அதிகாரிகள் எல்லோரும் “தாருன் நத்வா” என்ற தமது பாராளுமன்றத்தில் கூடி விடுவர்.
நபி (ஸல்) அவர்களும் அன்னாரது தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த சமயம் அன்ஸாரிகளில் ஒருவர் தமது தலைப்பாகையை ஒரு ஈட்டியின் நுனியில் கட்டி நபி (ஸல்) அவா;கள் முன்னிலையில் அங்குமிங்கும் அசைத்து வரவேற்றார். இது தான் இஸ்லாம் தோன்றியதன் பின்னால் முதல் முதலில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வாகும்.
பத்ர் யுத்தத்தின் போது முஸ்லிம்களுடைய கொடி வெள்ளை நிறமாக இருந்தது. அதனை குதிரைகளின் இரு பாகங்களிலும் மேலும் அதன் வால்களிலும் தொங்க விடப்பட்டிருந்தன. பத்ருடைய அந்த வருடம் முழுவதும் இந்த வெள்ளைக் கொடி தான் பாவிக்கப்பட்டு வந்தது. (இஸ்லாம் பரவிய) பிற்காலத்தில் நபியுடைய காலம் மற்றும் நான்கு கலீபாக்களுடைய காலத்தில் சிவப்பு நிறத்திலான கொடியையே தமது கொடியாக ஆக்கிக் கொண்டனர். பின்னர் உமையாக்களுடைய காலத்தில் வெள்ளை நிறக் கொடியும், அப்பாஸிய்யாக்களுடைய காலப்பகுதியில் கருப்பு நிறத்திலான கொடியையும் பாவித்ததாக வரலாறு கூறுகிறது.
பிற்காலத்தில் அப்பாஸிய்யாக்களில் சில கலீபாக்கள் தமது கருப்புக் கொடியில் தங்க நிறத்திலான ஒரு பிறையையும் சோ;த்துக் கொண்டதாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. எகிப்தில் வாழ்ந்த ஃபாத்திமிய்யாக்கள் வெள்ளை நிற கொடியையே தமது பண்டிகைகள் மற்றும் யுத்த சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பாவித்து வந்துள்ளனர். இவர்கள் இந்த கொடி விவகாரத்திற்காவே “தாருல் புனூத்” (கொடிகள் இல்லம்) என்ற பெயரில் ஒரு மண்டபத்தையே ஏற்பாடும் செய்து வைத்திருந்தனா;.
(நூல்: தாரீகுல் அலமுல் வத்தனீ அல்-ஜஸாயிரீ )
இநத வரலாற்றுப் பின்னணியிலேயே இன்று வரை இந்த கொடியேற்ற விவகாரம் இருந்து வருகிறது.
 முஸ்லிம்களின் நிலைப்பாடு:
மேற்படி ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாத்தின் பார்வையில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதில் எவ்வித தவறுமில்லை. குறிப்பாக நாம் இந்திய நாட்டவர்கள், நாம் இந்த நாட்டிலே பிறந்தவர்கள், எமது பூர் வீகம் இந்த மண்ணேயாகும் என்ற அடிப்படைகளில் எமக்கும் நாட்டுப்பற்று வேண்டும்.
ஆனால் இன்று எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கும் இந்நாட்டு  மன்னர்களுக்கும் செய்த உபகாரங்களை எல்லாம் இந்நாட்டு போரின சமூகம் அறியாத அளவு நாம் தூரமாகி விட்டோம். எதுவரைக்கெனில் இந்த நாடு எமக்குச் சொந்தமானதல்ல, முஸ்லிம்களின் நாடு அறபுநாடுகள் தான் என்று கூறி எமது உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்குமளவு சில அரசியல் லாபம் தேடியவர்கள் சொன்னதும் இன்னும் எமதுள்ளங்களை விட்டும் அகலவில்லை.
அக்காலங்களில் இந்திய மன்னர்களின் மிக நெருங்கிய நன்பர்களாக மட்டுமின்றி, அரசர்களின் வைத்தியர்களாக, அந்தரங்கச் செயலாளர்களாக, தமது இரகசியங்களைக் பாதுகாப்பவர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு எதிரான சக்திகள் போர் தொடுக்க வந்த போதும் முஸ்லிம்கள் இத்தேசத்திற்கு பெரிதும் உதவி பரிந்துள்ளனர்.
இப்படி போரின சமூகத்துடன் நெருக்கமாக இருந்த எமது உறவு இன்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதற்குக் காரணம் யாது என சிந்திக்க வேண்டும்.
எனவே நாம் இந்நாட்டுக்குச் சொந்தமானவர்கள், இந்நாடு நமக்குச் சொந்தமானது என்ற உணர்வு எமக்குள் பிறக்க வேண்டும். சுதந்திர தினம் போன்ற நாட்களில் நாமும் தைரியமாக ஆர்வத்தோடு தேசியக் கொடிகளைப் பறக்க விட வேண்டும். பிற சமுதாயத்தினர் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணங்கள் உருவாக வழி செய்ய வேண்டும். நல்லெண்ணத்துடன் செய்யப்படும் இக்காரியங்களை சில வேளை அல்லாஹுதஆலா பொறுந்திக் கொண்டால் இதுவே நமது ஈடேற்றத்திற்குப் போதுமானதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பொறுந்திக் கொண்டு, ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாகவும். ஆமீன்… 
சிங்கள நாட்டுக்குத் தோதுவாக எழுதப்பட்ட கட்டுரை. நம் தேசத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று எடுத்தாழப் பட்டிருக்கிறது. 

மேலும் தகவலுக்கு:
http://cumbumusmani.blogspot.in/2013_08_11_archive.html

No comments:

Post a Comment